”ஜனநாயகம், சமத்துவம், சமஉரிமை இனநல்லுறவு , மதப் புரிந்துணர்வு என்ற முகமூடிகளுடன் இருந்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவினதும் அவரது தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினதும் முகமூடிகளை கிழித்து சஜித் பிரேமதாச ஒரு கடும் இனவாதி, அவரது கட்சியின் கொள்கையும் இனவாதம்தான் என்பதனை புத்த பெருமான் தமிழ் மக்களுக்கும் சஜித் பிரேமதாசாவை மீட்பராக வணங்கும் இலங்கை தமிழரசுக்கட்சிக்கும் மீண்டும் புரிய வைத்துள்ளார்”
கே.பாலா
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த அரசாங்கத்தில் ஏற்பட்ட புத்த பெருமானின் முதல் ஆக்கிரமிப்பு நடவடிக்கையாக திருகோணமலை சம்புத்தி ஜயந்த விகாரை புத்தர் சிலை பிரதிஷ்டை இடம்பெற்று இனவாத ஆக்கிரமிப்பாக அது இடம்பிடித்த நிலையில் இவ்விடயத்தில் பேரினவாதிகளிடம் அடிபணிந்தமை இந்த அரசாங்கத்துக்கு தமிழ் மக்கள் மத்தியில் ஒரு கறுப்பு புள்ளியாக அமைந்தாலும் இந்த ஆக்கிரமிப்பின் மூலம் தமிழ் மக்களை ” இனவாதமற்றவர்கள் என்ற முகமூடி” அணிந்து ஏமாற்றிவந்த சிலர் ”இரத்தத்தில் இனவாதம் கலந்தவர்கள்”என்பதனை வெளிப்படுத்தி அவர்களின் முகமூடியை புத்த பெருமான் கிழித்து விட்டார்.
திருகோணமலை சம்புத்தி ஜயந்த விகாரைப் பகுதியில் சட்டவிரோத ”ரெஸ்ரோரண்ட்” ஒன்றை அகற்றும் அரச அதிகாரிகளின் நடவடிக்கையை தடுக்க இரவோடிரவாக சட்டவிரோதமாக புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்ய முயன்ற பிக்குகளினால் அப்பகுதியில் ஏற்பட்ட களேபரமும் அதன் தொடர்ச்சியாக அதனை சிங்கள -தமிழ் இன முறுகலாக, கலவரமாக மாற்றி அநுர குமார அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட விருந்த சதியும் தவிர்க்கப்பட்டபோதும் இந்த சம்பவத்தில், இதுவரை காலமும் ஜனநாயகம், சமத்துவம், சமஉரிமை இனநல்லுறவு , மதப் புரிந்துணர்வு என்ற முகமூடிகளுடன் இருந்த பிரதான எதிர்கட்சியான முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகனான சஜித் பிரேமதாசவினதும் அவரது தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினதும் முகமூடிகளை கிழித்து சஜித் பிரேமதாச ஒரு கடும் இனவாதி, அவரது கட்சியின் கொள்கையும் இனவாதம்தான் என்பதனை புத்த பெருமான் தமிழ் மக்களுக்கும் சஜித் பிரேமதாசாவை மீட்பராக வணங்கும் இலங்கை தமிழரசுக்கட்சிக்கும் மீண்டும் புரிய வைத்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவை எதிர்த்து போட்டியிட்ட சஜித் பிரேமதாச வடக்கு,கிழக்கு மாகாணங்களில் அமோக வெற்றி பெற்றார். அவர் யாழ் மாவட்டத்தில் 3,12,722 வாக்குகளையும் வன்னி மாவட்டத்தில் 1,74,739 வாக்குளையும் பெற்று வடக்கு மாகாணத்தில் அவர் மொத்தமாக 4,87,461 வாக்குகளை தனதாக்கிக் கொண்டார்.2024 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித்தேர்தலில் கூட தேசிய மக்கள் சக்தியில் போட்டியிடட அநுரகுமாரவையும் தமிழரசு தவிர்ந்த ஏனைய தமிழ் தேசியக்கட்சிகளினால் தமிழ் பொதுவேட்பாளராக களமிறக்கப்பட்ட அரியநேத்திரனையும் எதிர்த்து களமிறங்கிய சஜித் பிரேமதாச அப்போதுகூட வடக்கில் மட்டும் 2,16,599. வாக்குகளை ப்பெற்றார். இவ்வாறு இனவாதத்தை இரத்தத்தில் வைத்துக்கொண்டு இன நல்லிணக்கத்தை வாயில் மட்டும் வைத்து தமிழ் மக்களை தமிழரசுக்கட்சியோடு இணைந்து ஏமாற்றிய சஜித் பிரேமதாசாவினதும் அவரின் கட்சியினதும் இனவாத முகம் தற்போது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது
சஜித் பிரேமதாச ஒன்றும் இனவாதம் துறந்த உத்தமர் அல்ல. 2019ஆண்டு ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிட்ட அவர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்கு, கிழக்கு உட்பட, 1000 விகாரைகள் கட்டுவேன் என சிங்கள மக்களுக்கு உறுதியளித்திருந்தார். 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தலின் போதும் அந்த உறுதிமொழியை மீண்டும் வழங்கினார். அவ்வாறான சஜீத் பிரேமதாசாவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை சுமந்திரனின் தனிப்பட்ட முடிவில் தமிழரசுக்கட்சி வழங்கியது அதுவும் முதல் தேர்தலில் வழங்கியதைக்கூட ஓரளவுக்கு நியாயப்படுத்தக்கூடியதாக இருந்தாலும் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தலில் தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய தமிழ் தேசியக்கட்சிகளினால் தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்ட நிலையில் கூட அவருக்கு எதிராக பகிரங்கமாகவே தமிழரசுக்கட்சி பிரசாரம் செய்ததுடன் சஜித் பிரேமதாசவை ஆதரிக்குமாறும் வேண்டியது.ஆகவே தற்போது திருகோணமலை யில் தோன்றிய திடீர் புத்தர் சஜித் தரப்பின் முகமூடியை மட்டுமன்றி தமிழரசிலுள்ள சிலரின் முகமூடிகளையும் கழற்றி விட்டுள்ளார்
ஆரோக்கியமான மற்றும் முதிர்ச்சியடைந்த ஜனநாயகம் என்பது வெறும் ஆளும் கட்சியை மட்டுமல்ல, ஆளும் கட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டி, மாற்றுக் கொள்கைகளை முன்வைக்கும் ஒரு வலுவான, ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்க்கட்சியையும் சார்ந்துள்ளது. ஒரு நாட்டின் எதிர்க்கட்சி என்பது வெறும் கூட்டமோ, கோஷமோ அல்ல. அது ஆட்சியைக் கேள்வி கேட்கவும், தவறை திருத்தவும், தேவையான வேளைகளில் அதிகாரத்தை எதிர்கொள்ளவும், அதே சமயம் எல்லா இனங்கள், மதங்களின் கண்ணியத்தையும் உரிமைகளையும் பாதுகாக்கவும் கூடிய சக்தியாக இருக்க வேண்டும். அதன் வலிமை எண்ணிக்கையில் மட்டும் அல்ல, அதன் நிலைப்பாட்டு மதிப்புகளிலும் உள்ளது. எதிர்க்கட்சி என்பது ஒரு நாட்டில் அடுத்த அதிகாரத்தைத் தேடும் மக்களின் குழு. எனவே, அவர்கள் நிலவும் சமூக-அரசியல் நிலைமைகளைப் பற்றிய ஆழமான புரிதலைக் கொண்டிருக்க வேண்டும். அனைத்து இன ங்களையும் மதங்களையும் சமமாக மதிக்க வேண்டும் ஆனால் இலங்கையில் உள்ள தற்போதைய பிரதான எதிர்க்கட்சியிடம் இவ்வாறான பண்புகள் ஏதாவது உள்ளனவா என்றால் இல்லையென்பதனையே அண்மைய திருகோணமலை புத்தர் சிலை பிரதிஷ்டை நிரூபித்துள்ளது.
திருகோணமலை புத்தர் சிலை பிரதிஷ்டை விவகாரத்தில் பிரதான எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி வெளிப்படையாகவே இனவாதத்தை கக்கியது.திருகோணமலை சம்புத்ஜயந்தி போதிராஜ விகாரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சகல பணிகளையும் முன்னெடுக்கும் சுதந்திரம் ,உரிமை தேரர்கள் உள்ளிட்ட நிர்வாக சபையினருக்கு உள்ளது.இதனையே பின்பற்ற வேண்டும்.அதில் தலையிட எவருக்கும் உரிமை கிடையாது என வெளிப்படையாகவே இனவாதத்தை கக்கினார் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச.
நாட்டின் அரசியலமைப்புக்கமைய பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அத்துடன் பெளத்தசாசனத்தை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு . பௌத்த மதத்திற்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்றார்.அதனுடன் மட்டும் அவர் நின்று விடவில்லை .திருகோணமலையில் பௌத்த தேரர்களுக்கு நடந்த வேண்டத்தகாத செயற்பாடுகளுக்கு மன்னிப்பு கோருகின்றேன் .மன்னிப்பு கோர வேண்டிய பொறுப்பானவர்களுக்கு அதை நிறைவேற்றுவதற்கு தேவையில்லாத போதிலும் பொறுப்பு வாய்ந்த மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எதிர்க்கட்சியானாலும் அதை நிறைவேற்றி வைக்கிறோம் . பௌத்த மதத்துக்கு முன்னுரிமையளிப்பதோடு ஏனைய சமயத்தவர்களுக்கும் சமமான உரிமை அளிக்கப்பட வேண்டும். இவற்றில் பிரச்சினை ஏற்படுமானால் தேசிய பாதுகாப்புக்கும் பங்கம் ஏற்படும் எனவும் அவர் எச்சரித்தார்.
சஜித் பிரேமதாச இவ்வாறான இனவாதக் கருத்தை வெளிப்படுத்திய நிலையில் தான் அவரது கட்சி முக்கியஸ்தர்களும் அப்பட்டமாக இனவாதத்தை கக்கினர். ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தரான எம்.பி. சுஜீவ சேனசிங்க, ”இது சிங்கள பௌத்த நாடு. ஏனைய மதங்களை ஆதரிப்பது சிங்கள பௌத்த கொள்கை. .திருகோணமலை புத்தர் சிலை விடயத்தை பற்றி நாங்கள் பேசினால் தமிழ் அரசியல்வாதிகள் எம்முடன் முரண்படுவார்கள்.ஆனால் நாம் பேசித்தான் ஆக வேண்டும் என்றார்.
இன்னொருவரான நளின் பண்டார எம்.பி. திருகோணமலை விடயத்தை மனதில் வைத்து ”வடக்கு மாகாணத்தில் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய காணிகளை ஒருபோதும் விடுவிக்க கூடாது.நாட்டில் மீண்டும் யுத்தம் ஒன்று தோற்றம் பெறாத வகையில் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய காணிகள் முறையாக அடையாளப்படுத்தப்பட வேண்டும்.தனிப்பட்ட பாதுகாப்பினை காட்டிலும் தேசிய பாதுகாப்பினை கருத்திற் கொண்டு காணி விடுவிப்பு குறித்து தீர்மானம் எடுக்க வேண்டும்.யுத்தம் முடிவடைந்து விட்டது என்று குறிப்பிட முடியாது. எதிர்காலத்தில் யுத்தம் ஒன்று தோற்றம் பெறலாம். ஆகவே அவதானத்துடன் செயற்பட வேண்டும்.வடக்கு மாகாணம் தேசிய பாதுகாப்பின் பிரதான கேந்திரமையாக காணப்படுகிறது. வடக்கில் காணி பிரச்சினை காணப்படுகிறது. தனிப்பட்ட பாதுகாப்பினை காட்டிலும் தேசிய பாதுகாப்பினை கருத்திற் கொண்டு காணி விடுவிப்பு குறித்து தீர்மானம் எடுக்க வேண்டும். தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய காணிகளை இராணுவத்தினர் வசம் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
இந்நிலையில் திருகோணமலை புத்தர் சிலை விடயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறிய கருத்தை மீளப்பெற வேண்டும்.தமிழ் மக்களிடம் அவர் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் சஜித் வெற்றி பெற்றால் அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும் என்று எண்ணி தமிழ் மக்கள் அவருக்கு வாக்களித்தார்கள். அந்த தமிழ் மக்களுக்கு சஜித் பிரேமதாச துரோகமிழைத்துள்ளார் என தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான சிவஞானம் சிறீதரன் பாராளுமன்றத்தில் வலியுறுத்திய நிலையில் மறுநாளே,தமிழ் தேசியத்தையும் தமிழ் தேசிய அரசியல்வாதிகளையும் இழிவுபடுத்திவரும் இராமநாதன் அர்ச்சுனா என்ற இனவாதிகளின் ஏவல் பேயை பயன்படுத்திய சஜித் பிரேமதாச கட்சியினர் சிறீதரன் மீது பொய்க்குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வைத்து பழிதீர்த்தனர். சஜித் கட்சியை சேர்ந்த சுஜீவ சேனசிங்க, தயாஸ்ரீ ஜெயசேகர ஆகியோரே இருந்தனர்
ஆக மொத்தத்தில் திருகோணமலை சம்புத்தி ஜயந்த விகாரை பகுதியில் இரவோடிரவாக திடீரென குடியேறிய புத்தர், அநுரகுமார அரசும் பேரினவாதிகளுக்கு அடிபணிந்துதான் ஆக வேண்டும் என்பதையும் தமிழ் மக்கள் தொடர்ந்து ஆதரித்து வரும் சஜித் பிரேமதாசவும் அவரது கட்சியினரும் ஒன்றும் இனவாதம் துறந்த உத்தமர்கள் அல்லவென்பதையும் இவ்வாறான இனவாதிகளுக்குத்தான் தமிழ் பொது வேட்பாளரையும் எதிர்த்து தமிழரசுக்கட்சி ஜனாதிபதித்தேர்தலில் ஆதரவளித்தது என்பதையும் அநுரகுமார மட்டுமல்ல இந்த நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அனைத்தையும் தீர்மானிப்பது பௌத்த மதத்தலைவர்களும் காவியுடைக்குள் மறைந்திருக்கும் இனவாதிகளான பிக்குகளும்தான் என்பதையும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் .அந்த வகையில் இந்த அநுரகுமார அரசு மீதும் சஜித் பிரேமதாச மீதும் மோட்டுத்தனமான நம்பிக்கை வைத்திருக்கும் தமிழர்களுக்கு திருகோணமலை திடீர் புத்தர் உபதேசம் செய்திருப்பதற்கு ஒருவகையில் நன்றி சொல்ல வேண்டியும் உள்ளது.
























