மொன்றியால் வாழ் மூன்று தமிழ்க் கனடியர்களான சமூகச் செயற்பாட்டாளர்களை அவர்களது சமூக சேவைக்காக கௌரவித்த Dollard-des-Ormeaux நகரசபை

கனடாவின் மொன்றியால் மாநகரில் தமிழ் மக்கள் அதிகளவு வாழும் Dollard-des-Ormeaux நகரசபைபிரதேசத்தில் தான் மொன்றியால் அருள்மிகு திருமுருகன் தேவஸ்த்தானமும் உள்ளது. மேற்படி நகரத்தில் நீண்ட காலம் வாழ்ந்து வரும் மூன்று தமிழ்க் கனடியர்களான சமூகச் செயற்பாட்டாளர்களை அவர்களது சமூக சேவைக்காக கௌரவித்த Dollard-des-Ormeaux நகரசபை அண்மையில் நகர சபை சபா மண்டபத்தில் நடத்திய அரசவைபவம் ஒன்றில் கௌரவித்து சிறப்புச் செய்தது.
மேற்படி சிறப்புக் கௌரவத்தையும் பாராட்டுக்களைப் தமதாக்கிக் கொண்டவர்கள் மொன்றியால் மாநகரில் நன்கு அறியப்பெற்ற மக்கள் சேவையாளர்களான சிவஶ்ரீ வெங்கடேஸ்வரக்குருக்கள் (ஶ்ரீ ஐயா ), திரு வாகீசன் நடராஜா மற்றும் உதயகுமார் குழந்தைவேல் ஆகியோர் ஆவார். இவர்கள் மூவரும் பல அமைப்புக்களில் அங்கத்துவம் வகித்து சேவைகளை ஆற்றிவரும் வேளையில் மொன்றியால் அருள்மிகு திருமுருகன் தேவஸ்த்தானத்தின் பரிபாலனசபையிலும் இணைந்து நீண்டகால பணியாற்றி வருகின்றனர்.
அத்துடன். அங்கு தமிழ் மற்றும் சமய வகுப்புக்கள் தொடர்ந்து இடம்பெறவும் உழைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Dollard-des-Ormeaux நகர சபை சபா மண்டபத்தில் நடத்திய அரசவைபவத்தில் மேற்படி மூவரையும் கௌரவித்து சிறப்புச் செய்தபோது அதன் மேயர் Alex Bottausci தனது உரையில் இந்த நகரசபைக்குள் வாழும் தமிழ் மக்கள் சிறந்த அர்ப்பணிப்பு உள்ளவர்களாக எம்மால் இனங்காணப்பெற்றுள்ளார்கள். அத்துடன் குறிப்பாக, கடந்த கொரோனா நோய்த் தொற்று காலப்பகுதியில் தங்கள் சமூக மக்களுக்கு உதவிகள் வழங்குவதில் மாத்திரமல்ல பிற சமூகத்தவர்கள் மற்றும் வைத்தியசாலைகளுக்கும் உதவிகள் வழங்குவதில் இன்று கௌரவிக்கப்பெற்ற மூவரும் முன்னின்று உழைத்தார்கள் என்று பாராட்டினார்.
























