வங்கதேசத்தில் கடந்த 2024 ஆகஸ்டில் மாணவர் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது. தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. இந்நிலையில் ஆட்சி கவிழ்ந்தபின் 18 மாதங்கள் கழித்து முதல்முறையாக புதிய அரசை தேர்ந்தெடுக்க நேற்று அந்நாட்டில் பொதுத்தேர்தல் நடந்தது. இதில் 17 ஆண்டுகால வெளிநாட்டு வாழ்க்கைக்குப் பிறகு சமீபத்தில் நாடு திரும்பிய மறைந்த வங்கதேச பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி மற்றும் அதன் முன்னாள் கூட்டாளியான ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நடந்தது. இந்நிலையில் 300 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், 200-க்கும் மேற்பட்ட இடங்களை தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. சுமார் 20 ஆண்டுகள் கழித்து வங்கதேசத்தில் பிஎன்பி ஆட்சி அமைய உள்ளது. தாரிக் ரஹ்மான் வங்கதேச பிரதமர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கதேசத்தின் சக்திவாய்ந்த அரசியல் குடும்பத்தின் வாரிசான தாரிக் ரஹ்மான் ஒரு காலத்தில் அந்நாட்டு அரசியலில் ‘டார்க் பிரின்ஸ்’ என்று அழைக்கப்பட்டார்.
தாரிக் ரஹ்மான் தந்தை ஜியாவுர் ரஹ்மான் ராணுவ அதிகாரியாக இருந்து, பின்னர் பிடிபி கட்சியை தொடங்கி 1977 இல் வங்கதேச அதிபராக பொறுப்பேற்றார். 1981 இல் அவர் சுட்டுக் கொல்லப்படும் வரை அந்த பதவியில் இருந்தார். 1981 இல் ஜியாவுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி கலீதா ஜியா வங்கதேச பிரதமராகவும் பிடிபி கட்சித் தலைவராகவும் பொறுப்பேற்றார். 1991 முதல் 1996 வரையும் மற்றும் 2001 முதல் 2006 வரையும் கலீதா ஜியா பிரதமராக இருந்த காலகட்டத்தில் மகன் தாரிக் ரஹ்மான் நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகித்தார். முக்கிய முடிவுகள் அனைத்தையும் அவரே எடுப்பதால்தான் நிழல் பிரதமர் என்று பொருள்படும் வகையில் அவரை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் டார்க் பிரின்ஸ் என்று அழைத்தன.
2007 இல் ராணுவ புரட்சி ஏற்பட்டு இடைக்கால அரசு பொறுப்பேற்றபோது ஊழல், பண மோசடி மற்றும் ஷேக் ஹசீனாவை கொலை செய்ய முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தாரிக் ரஹ்மான் கைது செய்யப்பட்டார். 17 மாதங்கள் சிறையில் இருந்த தாரிக் ரஹ்மான் மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் பெற்று, சிகிச்சைக்காக பிரிட்டன் சென்றார். பிரிட்டனிலேயே தஞ்சம் அடைந்து லண்டனில் வசித்து வந்த தாரிக் ரஹ்மான் சுமார் 20 ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு டிசம்பரில் அவரது தாய் கலீதா ஜியா உயிரிழந்தபோது வங்கதேசம் திரும்பினார். தாயின் மறைவின்பின் பிஎன்பி கட்சித் தலைவராக பொறுப்பேற்ற ரஹ்மான் மூன்று மாதங்களில் அக்கட்சியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்று ஆட்சிக் கட்டிலில் அமர உள்ளார்.
























