டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட அழிவுகளின் பின்னர், அநுர குமார திஸாநாயக்க அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட ‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான’ (Rebuilding Sri Lanka Fund) நிதியம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு மத்தியில், அமைச்சர்கள், திறைசேரி அதிகாரிகள் மற்றும் அரச நிறுவனங்களினால் முன்வைக்கப்படும் முரண்பாடான கருத்துக்கள் காரணமாக, பில்லியன் கணக்கான ரூபாய் நிவாரண நிதிகளின் முகாமைத்துவம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக அரசாங்க நிதி பற்றிய குழுவின் (COPF) தலைவரால் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தினால் சட்டப்பூர்வமாக நிறுவப்படாத ஒரு நிதியம் குறித்தே அரசாங்கம் குறிப்பிடுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாதாடுகிறார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, இந்த நிதியத்தின் சட்டப்பூர்வத்தன்மை குறித்து பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்திற்குரிய, நிதிச் சட்டக்கட்டமைப்பின் கீழ், நாடாளுமன்ற சட்டமொன்றின் ஊடாக நிறுவப்பட்ட சட்டரீதியான நிதியங்கள் மாத்திரமே சட்டப்பூர்வமாக இயங்க முடியும் என தெரிவித்துள்ளார்.
“எனவே, அத்தகைய நிதியம் எதுவும் இல்லை,” எனக் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, பணம் சேகரிக்கப்பட்டு வைப்பு செய்யப்பட்டிருந்தாலும், சட்டப்பூர்வமாக நிறுவப்பட்ட “இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நிதியம்” எதுவும் உருவாக்கப்படவில்லை என்றும் வாதிட்டார். இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பதிவொன்றை வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், ‘பொறுப்புக்கூறல் எங்கே? நிதியைக் கண்காணிப்பது யார்? நாடாளுமன்றம் ஏன் இதனை ஒரு சட்டரீதியான நிதியமாக அங்கீகரிக்கவில்லை?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
“சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பில்லியன் கணக்கான நன்கொடைகள் சேகரிக்கப்பட்ட போதிலும், இந்த நிதியம் இன்னும் சட்டப்பூர்வமாக நிறுவப்படவில்லை. முறையான மேற்பார்வையோ அல்லது தணிக்கையோ இன்றி இப்பணம் திறைசேரியின் பொதுக் கணக்கொன்றில் வைக்கப்பட்டுள்ளது.” பொது நிதி மற்றும் டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான வெளிப்படைத்தன்மையையே தான் கோருவதாக அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றக் குழுக்கள் முன்னிலையில் அரச அதிகாரிகள் விடுத்த அறிக்கைகளுடன் ஒப்பிடுகையில், இப்பிரச்சினை மேலும் தீவிரமடைந்துள்ளது. அண்மையில் நடைபெற்ற அரசாங்க நிதி பற்றிய குழுவின் கூட்டமொன்றில், இந்த நிதியத்திற்காக இன்னும் உத்தியோகபூர்வ கணக்கொன்று நிறுவப்படவில்லை என்றும், அதற்குப் பதிலாக திறைசேரிக்குரிய கணக்கொன்றிற்கே நன்கொடைகள் வந்துகொண்டிருக்கின்றன என்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளனர்.”
“இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நிதியம்’ ஒரு சட்டரீதியான நிதியமாக முறைப்படி நிறுவப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம், அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு (COPF) அறிவித்துள்ளது. அதற்குப் பதிலாக, திறைசேரியின் பிரதிச் செயலாளரால் நிர்வகிக்கப்படும் விசேட கணக்கொன்றில் இந்த நன்கொடைகள் பேணப்பட்டு வருவதுடன், தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளபடி ‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நிதியத்திற்குரிய’ எந்தவொரு பணமும் இதுவரை பயன்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.”
“அதற்கு வந்த பணத்தில் இருந்து எதுவும் பயன்படுத்தப்படவில்லை. ஏனெனில் நாங்கள் எங்களது தேவைக்காகத் தகவல்களைப் பெற்றபோது அது பற்றிக் கேட்டிருந்தோம்,” எனக் குறிப்பிட்டுள்ளதேசிய கணக்காய்வு அலுவலகம், “(அந்தப் பணம்) திறைசேரியில் உள்ளது,” எனவும் தெரிவித்துள்ளது.”
“பில்லியன் கணக்கான நன்கொடைகள் கிடைத்துள்ள ‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நிதியம்’ தொடர்பாக அமைச்சர்கள் தொடர்ச்சியாகப் பகிரங்கமாக விடுத்து வந்த அறிக்கைகளுடன் இந்த நிலைப்பாடு ஒத்துப்போகவில்லை என்பது முதல் நோக்கிலேயே தெளிவாகத் தெரிகிறது.”
“இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள நிதி இராஜாங்க அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, ‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நிதியம்’ பாதுகாப்பாக உள்ளதாகப் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளதுடன், 2026 ஏப்ரல் மாதமளவில் இந்த நிதியத்தில் கிட்டத்தட்ட 10 பில்லியன் ரூபாய் வைப்பிலிடப்பட்டுள்ளது என்றும், இப்பணம் அங்கீகரிக்கப்பட்ட பொதுத் திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். திறைசேரியின் பிரதிச் செயலாளரின் பெயரிலுள்ள கணக்குகளுக்கே இந்த நிதிகள் வைப்பிடப்பட்டதுடன், நிதிகள் பாதுகாப்பாக உள்ளதால் ‘அச்சமடையத் தேவையில்லை’ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.”
“அப்படியென்றால் மொத்தமாகவுள்ள 500 பில்லியனில் சுமார் 10 பில்லியன் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்தச் செலவுகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன என்பதை வருட இறுதியில் எம்மால் வழங்க முடியும்,” எனக் குறிப்பிட்டுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, “ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 500 பில்லியனில் 200 பில்லியனுக்கும் அதிக தொகை செலவழிக்கப்பட்டு முடிவடைந்துள்ளது. அந்த வகையில் பார்த்தால், தேவைப்பட்டால் அந்த 10 பில்லியனும் இந்த 200 பில்லியனுக்குள் செலவழிக்கப்பட்டதாக எம்மால் கணக்குகளைச் சமர்ப்பிக்க முடியும்” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.”
‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நிதியம்’ குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஜனாதிபதி செயலகத்திடம் கோரப்பட்ட தகவல் கோரிக்கைக்குக் கிடைத்த பதில்களை, வெலிகம ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் அமைப்பாளர் ரெஹான் ஜயவிக்ரம சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.”
‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான’ நிதியத்திற்கு 6.1 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணமும், 11.4 மில்லியன் அமெரிக்க டொலர்களும் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தற்போது உறுதிப்படுத்தியுள்ள போதிலும், நன்கொடையாளர்களின் விபரப் பட்டியல், கொடுப்பனவுகள், நிதியைப் பெற்றுக்கொண்டவர்கள், கொள்முதல் விபரங்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் மேற்பார்வை அறிக்கைகள் ஆகியவற்றை கோரிய போது, அந்த விபரங்கள் ஜனாதிபதி செயலகத்திடம் இல்லை என்பதே பதிலாகக் கிடைத்தது.” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“அதைவிட ஆச்சரியமான விடயம் என்னவென்றால், கணக்காய்வு அறிக்கைகளும் இல்லை என்றே அவர்கள் கூறுகிறார்கள்,” என வெலிகம ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் அமைப்பாளர் ரெஹான் ஜயவிக்ரம தனது எக்ஸ் (X) கணக்கில் வெளியிட்ட பதிவொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.






















