ஒன்ராறியோவின் சுகாதார இணை அமைச்சரும், ஸ்காபரோ—ரூஜ் பார்க் சட்டமன்ற உறுப்பினருமான அமைச்சர் விஜய் தணிகாசலம், இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 24 வயதான தமிழ் ஹிப் ஹாப் கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார், அவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.
சங்கீத்சனின் கைது நடவடிக்கை கலைச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் தமிழ் அடையாளத்தின் மீதான நேரடி தாக்குதலாகும் என அமைச்சர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“ஒரு இளம் கலைஞரை அவரது இசைக்கும் தமிழ் அடையாளத்திற்கும் சிறையில் அடைப்பது, கருத்துச் சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்தின் அடித்தளத்திற்கும் எதிரான செயல்,” என அமைச்சர் விஜய் தெரிவித்தார். “பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தமிழ் சமூகத்தின் மீது தணிக்கை மற்றும் அச்சுறுத்தல் கருவியாக தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. அது ரத்து செய்யப்பட வேண்டும்.”
சங்கீத்சனின் கைது, உலகம் முழுவதும் உள்ள தமிழ் சமூகங்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் கலைஞர்கள் மத்தியில் தீவிர கவலையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் தமிழ் மக்கள் இன்னும் கண்காணிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் அரச அனுசரணையிலான அடக்குமுறைகளை எதிர்கொண்டு வருகிறார்கள் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது என அமைச்சர் விஜய் குறிப்பிட்டார்.
“இதனால்தான் உலகளாவிய விழிப்புணர்வு, கல்வி மற்றும் நினைவேந்தல் மிகவும் அவசியமானவை,” என அமைச்சர் விஜய் கூறினார். “ஒன்ராறியோவில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலம் 104, தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமைச் சட்டம், தமிழ் குரல்கள், வரலாறு மற்றும் உண்மை ஒருபோதும் அழிக்கப்படக்கூடாது என்பதற்காகவே கொண்டு வரப்பட்டது.”
“கலைஞர்களும் அரச தலைவர்களும் குரலற்றவர்களுக்காக ஒன்றிணைந்து நிற்கும்போது, அது வலுவான செய்தியை உலகிற்கு தெரிவிக்கிறது,” என அமைச்சர் விஜய் கூறினார். “சங்கீத்சனின் கைது, இலங்கை அரசால் தமிழ் குரல்கள் இன்னும் மௌனப்படுத்தப்படுகின்றன என்பதை வெளிப்படுத்துகிறது. அவர் விடுதலையாகும் வரை நாம் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.”
சங்கீத்சனின் கைது தொடர்பாக அதிகரித்து வரும் சர்வதேச கவனம், கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்கவும், தமிழ் குரல்களை காக்கவும், தமிழ் சமூகத்திற்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதை முடிவுக்கு கொண்டு வரவும் உள்ள அவசரத் தேவையை வலியுறுத்துகிறது.






















