எரிபொருள் விலைக் குறைப்பு எங்கே என்று கேட்கின்றார் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்
நாட்டில் பணவீக்கம், வாழ்க்கைச் செலவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள போதிலும், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசால் மக்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்க முடியாமல் போயுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
எதுல்கோட்டேயிலுள்ள அவரதுஅலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“அரசு மக்கள் மீது பாரிய வரிச்சுமையை சுமத்தி அவர்களைப் பெரும் இன்னல்களுக்கு ஆளாக்கியுள்ளமையால் மக்களின் வாங்கும் சக்தி படிப்படியாகக் குறைந்து வருகின்றது. நல்லாட்சி அரசின் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலை சூத்திரத்தை, தற்போதைய அரசு மக்களின் பணத்தைச் சுரண்டும் ஒரு சூத்திரமாக மாற்றியமைத்துள்ளது. மத்திய கிழக்கு யுத்தத்தைக் காரணம் காட்டி, எரிபொருள்களின் விலைகளை அதிகரிப்பதற்கான புதிய சுரண்டல் முறையொன்றை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 75 முதல் 80 டொலர்கள் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் பலனை மக்களுக்கு வழங்கி, உள்நாட்டிலும் எரிபொருள் விலையைக் குறைப்பார்கள் என்று மக்கள் எதிர்பாத்திருந்த வேளையில், விலையைக் குறைக்க முடியாது என்றே அரசாங்கத்தின் அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.
மத்திய கிழக்கு யுத்தம் பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பித்த போது இலங்கையிடம் மூன்று மாதங்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளது என்று ஜனாதிபதி மார்ச் மாதத்தில் அறிவித்திருந்தார். அவ்வாறாயின், புதிய எண்ணெய் கப்பல்கள் எதனையும் இறக்குமதி செய்யாமல், பெப்ரவரி மாதத்தில் 67 டொலர்களுக்கு வாங்கிய பழைய இருப்புக்கே மார்ச் மாதத்தில் மட்டும் அரசாங்கம் நான்கு முறை எரிபொருள் விலையை அதிகரித்தது. ஆனால், தற்போது உலகச் சந்தையில் விலை குறைந்துள்ள போது, அதிக விலைக்கு வாங்கியதாகக் கூறி விலையைக் குறைக்க மறுக்கின்றது.
பெப்ரவரி 28 இற்குப் பின்னர், 92 ஒக்டேன் பெற்றோல் 142 ரூபாவினாலும், 95 ஒக்டேன் பெற்றோல் 155 ரூபாவினாலும், ஒட்டோ டீசல் 126 ரூபாவினாலும், சுப்பர் டீசல் 146 ரூபாவினாலும், மண்ணெண்ணெய் 103 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அண்டை நாடான பாகிஸ்தானில் பெற்றோல் மற்றும் டீசல் விலைகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் வரிக்குறைப்பு மூலம் நிவாரணம் வழங்கப்படுகின்றது. ஆனால், இலங்கையில் அதிக வரி வசூலிக்கப்படுகின்றது. தேர்தலுக்கு முன்பு எரிபொருள் மீதான வரிகள் நீக்கப்படும் என்றும், கமிஷன் பெறப்படுவதாகவும் கூறினார்கள். அப்படியாயின் இப்போது அந்தப் பணம் யாருடைய பாக்கெட்டுக்குச் செல்கிறது என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
அதேபோல், மாகாண சபை தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதி ‘டித்வா’ திட்டத்துக்காகச் செலவிடப்பட்டது என்று ரில்வின் சில்வா கூறிய கருத்து தனக்குத் தெரியாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறியுள்ளார். நாட்டின் அனைத்து ஊடகங்களிலும் வெளியான இந்தச் செய்தியை பிரதமர் பார்க்கவில்லை என்பதை ஏற்க முடியாது. ரில்வின் சில்வாவுக்கு எதிராகப் பேசப் பயந்தே அவர் அவ்வாறு கூறுகின்றார். தனது பிரதமர் பதவி பறிபோய்விடும் என்ற பயத்திலேயே பிரதமர் வாழ்கின்றார்.
மத்திய வங்கியின் திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் காணாமல் போன சம்பவத்துக்கு அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும். டிஜிட்டல் பொருளாதார ஆலோசகர்கள் இருக்கும் போதே இந்த மோசடி நடந்துள்ளது. இதற்கு நிதியமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியைக் கண்டறிய நாடாளுமன்றத்தில் ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு நடந்த அநீதி குறித்து சஜித் பிரேமதாஸவே பேசினார். அநுரகுமார திஸாநாயக்க இது குறித்து அன்று பேசவில்லை. ” – என்றார்.






















