ந.லோகதயாளன்.
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரி, ‘மக்கள் செயல் அமைப்பின்’ ஏற்பாட்டில் ‘உரிமைப்பந்தம்’ எனும் அமைதி வழி மக்கள் எழுச்சிப் போராட்டம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை செம்மணி பகுதியில் உள்ள அணையா விளக்குத்திடலில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில், அங்குள்ள அணையா விளக்கு தூபிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
செம்மணி மனிதப் புதைகுழியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளில் இதுவரையில் 412 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுடன், கடந்த 1999ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட அகழ்வுப் பணிகளின் போது மீட்கப்பட்ட 15 எலும்புக்கூடுகளையும் சேர்த்து, மொத்தமாக அடையாளம் காணப்பட்ட 427 எலும்புக்கூடுகளை நினைவுறுத்தும் வகையில் 427 தீப்பந்தங்கள் கொளுத்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த உணர்வுபூர்வமான நிகழ்வில், கடத்தப்பட்டு மற்றும் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டு தங்களது நீதிக்கான குரலை எழுப்பினர்.


















