அமெரிக்கா மற்றும் லெபனான் நாடுகளுக்கு இடையே, 40 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். கடந்த 1985ம் ஆண்டு, அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் ஆட்சிக் காலத்தில், மேற்காசிய நாடான லெபனானைச் சேர்ந்த பயங்கரவாதிகளால், ‘பிளைட் 847’ என்ற அமெரிக்க விமானம் கடத்தப்பட்டது அப்போது அமெரிக்க கடற்படை வீரர் ஒரு வர் கொல்லப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, பாதுகாப்பு காரணங்களுக்காக லெபனான் உடனான நேரடி விமான சேவையை ரத்து செய்தது. தற்போது 40 ஆண்டுகளுக்கு பின், இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை லெபனான் அதிபர் ஜோசப் அவுன், சந்தித்து பேசிய பின், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “லெபனான் பல தசாப்தங்களாக பல இன்னல்களை சந்தித்து, மோசமாக நடத்தப்பட்ட ஒரு நாடாகும். “இனி அந்த நாட்டிற்கு உரிய மரியாதையும், முழு ஆதரவும் கிடைக்க அமெரிக்கா உறுதுணையாக இருக்கும்,” என தெரிவித்தார்.


















