மிஸ் யூனிவர்ஸ் இந்தியா 2026 அழகு போட்டியில் கேரளத்தைச் சேர்ந்த காசியா லிஸ் மெஜோ மகுடம் சூடினார். ஜெய்பூரில் நடைபெற்ற ‘மிஸ் யூனிவர்ஸ் இந்தியா 2026’ அழகிப் போட்டியின் பிரமாண்ட இறுதிச்சுற்றில், கேரள மாநிலம் மாவேலிக்கரையைச் சேர்ந்த 19 வயதான காசியா லிஸ் மெஜோ வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இதன் மூலம், இப்பட்டத்தை வெல்லும் முதல் கேரளாப் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார். நாடு முழுவதிலும் இருந்து தேர்வான 52 போட்டியாளர்களைத் தாண்டி இவர் இந்த மகுடத்தைச் சூடியுள்ளார்.
ஜெய்பூரில் உள்ள ஜீ ஸ்டுடியோஸில் நடைபெற்ற இந்த அழகிப் போட்டியில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 52 இறுதிப் போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்தியாவின் முதல் மிஸ் யூனிவர்ஸ் சுஷ்மிதா சென், முன்னாள் அழகிகள் உர்வசி ரவுத்தேலா, செலினா ஜெய்ட்லி மற்றும் ரியா சிங்ஹா ஆகியோர் அடங்கிய நடுவர் குழு போட்டியைத் தேர்வு செய்தது.
இப்போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷ்ணவி கணேஷ் முதல் ரன்னர்-அப் பட்டத்தையும், ‘மிஸ் இன்டர்நேஷனல் இந்தியா 2026’ பட்டத்தையும் தட்டிச் சென்றார். குஜராத்தின் அனுஸ்ரீ சதாவலேகர் இரண்டாம் ரன்னர்-அப் பட்டத்தைப் பெற்றார். மகாராஷ்டிராவின் தேஜஸ்வினி ஸ்ரீவஸ்தவா மற்றும் உத்தரகாண்டின் அனுபஹா வஷிஸ்ட் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர். சட்டக் கல்லூரி மாணவியும் மாடலுமான காசியா, 12 ஆண்டுகள் பரதநாட்டியம் கற்ற கலைஞர். பாடகர், டிரம்ஸ் மற்றும் வயலின் வாசிக்கும் திறமை படைத்த இவர், ‘மிஸ் டீன் இன்டர்நேஷனல் 2025’ போட்டியில் முதல் ரன்னர்-அப் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுவயதில் தனது தோற்றம் குறித்துத் தன்னம்பிக்கை இல்லாமல் இருந்த இவர், விடாமுயற்சியால் இன்று நாட்டின் உயரிய அழகி மகுடத்தை அடைந்துள்ளார்.
















