உசிலம்பட்டி அருகே 16 வயது தலித் சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறதென திமுக எம்பி கனிமொழி கூறினார். இதுகுறித்து திமுக எம்.பி.கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, உசிலம்பட்டி அருகே 16 வயது தலித் சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. தனது எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் பள்ளிச் சேர்க்கைக்காகச் சென்ற அந்தச் சிறுமி, அங்கு அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மனவேதனையில் அச்சிறுமி உயிரை மாய்த்து கொண்டதால், அவரது குடும்பம் நிலை குலைந்து போயுள்ளது. ஒவ்வொரு குழந்தைக்கும் மரியாதையும், கண்ணியமும், பாதுகாப்பான கல்விச்சூழலும் கிடைப்பது அவர்களின் உரிமை. இது போன்ற மனவேதனைக்கு எந்தக் குழந்தையும் தள்ளப்படக் கூடாது. இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்கி, நீதி நிலைநாட்டப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
















