ராஜா கிருஷ்ணா மேனன் இயக்கத்தில் திரிஷா நாயகியாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளது. நசீருதீன் ஷா நடித்த ‘பாரா ஆனா’, அக்ஷய் குமாரின் ‘ஏர்லிஃப்ட்’ மற்றும் சாய்ஃப் அலி கான் நடித்த ‘செஃப்’ போன்ற படங்களை இயக்கிப் புகழ்பெற்ற பிரபல பாலிவுட் இயக்குநர் ராஜா கிருஷ்ணா மேனன் இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார். மேலும், இவர் சைக்கலாஜிக்கல் ஹாரர் பிரிவில் இயக்கும் முதல் படமும் இதுவேயாகும். இத்திரைப்படத்தின் பூஜை விழா அண்மையில் நடைபெற்று, முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு லண்டனில் நடைபெறவுள்ளது. திரிஷா, ராதிகா மற்றும் அபர்ணா பாலமுரளி என நடிப்புத் திறமை வாய்ந்த மூன்று முன்னணி நடிகைகள் முதன்மை வேடங்களில் ஒன்றிணைவது இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் வெகுவாக உயர்த்தியுள்ளது. இந்த படம் குறித்து இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன் பேசுகையில், “ஒருவர் என்னை எந்த ஜானரிலும் சிக்காத கதைகள் இயக்கும் இயக்குநர் என்று மிகவும் பொருத்தமாக குறிப்பிட்டார். அந்தப் பயணத்தின் மற்றுமொரு புதிய முயற்சிதான் இந்தப் படம். பல வகைகளில் இப்படம் எனக்கு முதல் அனுபவமாக அமைந்துள்ளது. இது என்னுடைய முதல் தமிழ் திரைப்படம். அதோடு த்ரிஷா, ராதிகா, அபர்ணா பாலமுரளி போன்ற அற்புதமான நடிகர்கள் மற்றும் திறமையான தொழில்நுட்பக் குழுவினருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பது என்னை மேலும் உற்சாகமாகியுள்ளது” என்றார்.
















