17 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்திற்காக பல மாதங்களாக திருப்பணிகள் ரூ.25 கோடி மதிப்பில் நடந்தன. தீ விபத்தில் சேதம் அடைந்த வீரவசந்தராயர் மண்டபம் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. யாகசாலை பூஜைக்காக வடக்கு ஆடி வீதியில் 184 குண்டங்க ளுடன் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டது. மூலவர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரருக்காக பிரத்யேக தங்க குடங்கள் யாக சாலையில் வைக்கப்பட்டன. கங்கை, யமுனை, 1 காவேரி, வைகை உள்ளிட்ட பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரை கலசங்களில் நிரப்பி யாகசா லையில் வைத்து தினமும் பூஜைகள் நடந்து வந்தன. 400-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேள்விகளை நடத்தினர். கடந்த 11-ந் தேதியன்று முதல்கால யாக பூஜைகள் தொடங்கிய நிலையில், மற்ற கால பூஜைகளும் நடந்து வந்தன. நேற்று அதிகாலை 3.45 மணி அளவில் 10-ம்கால யாகசாலை பூஜைகள் நடந்தன. அந்த வழிபாடு நிறைவு பெற்ற பிறகு பரிவார தெய்வங்களுக்கான கும்பாபிஷேகம் தொடங்கியது. மேளதாளங்கள் முழங்க யானை, டங்கா மாடு அணிவகுத்து செல்ல யாகசாலையில் இருந்து புனிதநீர் கலசங்கள் புறப்பாடாகி கோவிலுக்குள் உள்ள பரிவார தெய்வங்கள் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டன. காலை 5 மணி முதல் 6 மணிக்குள் சித்தி விநாயகர், கூடல்குமாரர், தட்சிணாமூர்த்தி. துர்க்கை, மகாலட்சுமி, பத்திரகாளி, அக்னி வீரபத்திரர், 63 நாயன்மார்கள், நவகிரகங்கள் உள்பட 414 பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர் மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர், தங்க விமானங்கள், சன்னதி விமானங்கள், 12 கோபுரங்கள் உள்ளிட்டவற்றுக்கான கும்ப கலசங்களுக்கு நேற்று மாலை 11-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழாவின் சிகரமாக மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் மகா கும்பாபிஷேக விழா காலை கோலாகலமாக நடைபெற்றது. வேத மந்திரங்கள் ஒலிக்க கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
















