திரிணாமுல் காங்கிரசின் சின்னம் முடக்கப்பட்டதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் தேர்தல் சின்னம் தொடர்பாக இரு அணிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், தேர்தல் ஆணையம் இடைக்கால நடவடிக்கையாக கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை முடக்கியுள்ளது. அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற பெயரையும் கட்சியின் மலர் சின்னத்தையும் தற்போதைக்கு எந்த அணியும் பயன்படுத்த முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஓட்டு கொள்ளையடித்த மத்திய அரசு, அடுத்ததாக கட்சிக் கொள்ளையில் இறங்கிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: முதலில் சிவசேனா, பிறகு என்.சி.பி., இப்போது திரிணாமுல் காங்கிரஸ். ஒவ்வொரு முறையும் அதே பாணிதான்: ஒரு கட்சியை பிளவுபடுத்த பா.ஜ.க.வும், தேர்தல் ஆணையமும் கைகோர்க்கின்றன; பின்னர் அந்தக் கட்சியின் தேர்தல் சின்னம் பறிக்கப்படுகிறது. ஒரு கட்சியையே முழுமையாக அபகரிக்க முடியும் எனும் நிலையில், கோடிக்கணக்கான இந்தியர்களின் வாக்குகளும் திருடப்படக்கூடும் என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. வாக்குத் திருட்டு, அரசாங்கத்தைக் கைப்பற்றுதல், இப்போது கட்சியை அபகரித்தல் – இவை அனைத்தும் நமது ஜனநாயக சீரழிவின் அடையாளங்களாக மாறிவிட்டன. மக்களின் தீர்ப்பை பாதுகாப்பதே தேர்தல் ஆணையத்தின் அரசியலமைப்பு சார்ந்த கடமையாகும்; ஆனால், அதற்கு மாறாக, மக்களின் தீர்ப்பைத் தலைகீழாக மாற்றும் சக்திகளுக்கே அது துணை நிற்கிறது. இந்த போராட்டம் மம்தா பானர்ஜியுடையது மட்டுமல்ல; சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை விரும்பும் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், ஒவ்வொரு வாக்காளருக்குமான போராட்டம் இது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















