நினைவுகளை,நினைவுச் சின்னங்களை, சிலைகளை அழிப்பது ஓர் அரசியல். அது ஒடுக்கும் அரசியல். இனஅழிப்பு அரசியல். அதற்கு எதிராக நினைவுகளைப் புதுப்பிப்பது; நினைவுகளை மறந்துவிடாமல் இருப்பது; நினைவுகளை மையமாக வைத்துத் தேசத்தைத் திரட்டுவது என்பது இன ஒடுக்குமுறைக்கு எதிரான ஓர் அரசியல். இன அழிப்புக்கு எதிரான ஓர் அரசியல். இலங்கைத் தீவின் பல தசாப்த கால அரசியல் எனப்படுவது இந்த இரண்டு முரணான போக்குகளால் கட்டமைக்கப்பட்டதுதான். இந்த வரலாற்று அனுபவத்தின் பின்னணிகள் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை திலீபனின் சிலை அகற்றப்பட்டது தொடர்பான விடயத்தைப் பார்க்கலாம். திலீபனின் சிலை ஒரு விவகாரமாகியது இதுதான் முதல் தடவை அல்ல. இதற்கு முன்னரும் அந்த நினைவுத் தூபி சிதைக்கப்பட்டிருக்கிறது. இம்முறை ஒரு மார்பளவு சிலை வைக்கப்பட்டது.

சிலைகளை,நினைவுச் சின்னங்களைச் சிதைப்பது, உடைப்பது, அகற்றுவது என்பது சிங்கள பௌத்த அரசியலின் பல தசாப்த கால நடைமுறை. அதற்கு எதிராக சிலைகளைத் திரும்பத்திரும்பக் கட்டுவது நினைவுச் சின்னங்களை திரும்பத்திரும்பக் கட்டுவது என்பது தமிழ்த் தேசிய எதிர்ப்பு அரசியலின் பல தசாப்த கால நடைமுறை
நினைவுகள் தொடர்ச்சியைக் குறிக்கும்.வரலாறு என்பது தொடர்ச்சிதான். நினைவுகளை மையமாக வைத்துத் தமிழ்மக்கள் திரட்சியுறக்கூடாது என்ற அடிப்படையில்தான் சிலைகளும் நினைவுச் சின்னங்களும் அகற்றப்படுகின்றன. அல்லது சிதைக்கப்படுகின்றன.
தமிழ் மக்கள் தங்கள் நினைவுகளை சிலைகளாகவோ சின்னங்களாகவோ அல்லது வேறு வடிவங்களிலோ முன்நிறுத்துவதன் மூலம் முதலாவதாக,தமது நினைவுகளை, அவற்றின் தொடர்ச்சியைப் பாதுகாக்கிறார்கள். இரண்டாவதாக, அதன்மூலம் வரலாற்றை, வரலாற்றுத் தொடர்ச்சியைப் பாதுகாக்கின்றார்கள். மூன்றாவதாக, அதை இன அழிப்புக்கு எதிரான ஒரு போராட்ட வடிவமாக முன்னெடுக்கிறார்கள்.
எனவே நினைவுகளை, நினைவுச் சின்னங்களை,சிலைகளை அழிப்பது ஓர் அரசியல்.அது ஒடுக்கும் அரசியல்.இனஅழிப்பு அரசியல். அதற்கு எதிராக நினைவுகளைப் புதுப்பிப்பது; நினைவுகளை மறந்துவிடாமல் இருப்பது; நினைவுகளை மையமாக வைத்துத் தேசத்தைத் திரட்டுவது என்பது இன ஒடுக்குமுறைக்கு எதிரான ஓர் அரசியல்.இன அழிப்புக்கு எதிரான ஓர் அரசியல். இலங்கைத் தீவின் பல தசாப்த கால அரசியல் எனப்படுவது இந்த இரண்டு முரணான போக்குகளால் கட்டமைக்கப்பட்டதுதான். இந்த வரலாற்று அனுபவத்தின் பின்னணிகள் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை திலீபனின் சிலை அகற்றப்பட்டது தொடர்பான விடயத்தைப் பார்க்கலாம். திலீபனின் சிலை ஒரு விவகாரமாகியது இதுதான் முதல் தடவை அல்ல. இதற்கு முன்னரும் அந்த நினைவுத் தூபி சிதைக்கப்பட்டிருக்கிறது. இம்முறை ஒரு மார்பளவு சிலை வைக்கப்பட்டது. அந்தச் சிலை ஃபைபரில் வார்க்கப்பட்டு வெண்கல நிறம் பூசப்பட்டுள்ளது. அந்தச் சிலை திலீபனின் புறவுருவத்தை ஒத்திருக்கிறது. ஆனால் முகத் தசைகள் இறுகிப்போய், திலீபனை மூப்பாகக் காட்டுகின்றன. அது தீலீபனைத் தத்ரூபமாகப் பிரதிபலிக்கவில்லை.
இதேபோன்ற விமர்சனங்கள் காரணமாக கடந்த மாதம் நேபாளத்தில் திறக்கப்படவிருந்த 45 தியாகிகளின் சிலைத் திறப்பு விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நேபாளத்தில் ஏற்பட்ட “ஜென்சி” கிளர்ச்சியின்போது செப்டம்பர் 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கொல்லப்பட்ட 45 தியாகிகளின் நினைவு நாள் இந்த செப்டம்பர் மாதம் அனுஷ்டிக்கப்பட்டது. அதையொட்டி அந்த 45 பேர்களுடைய சிலைகள் திறக்கப்படவிருந்தன. ஆனால் அந்தச் சிலைகள் தமது பிள்ளைகளின் முகங்களை ஒத்திருக்கவில்லை என்று பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அவசர அவசரமாகத் திறப்பு விழாவை நோக்கிச் சிலைகளைச் செதுக்கியபடியால் அவை தத்ரூபமாக அமையவில்லை என்று சிற்பிகள் தெரிவிக்கிறார்கள்.அதைத்தொடர்ந்து சிலை திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திலீபனின் மார்பு வரையிலுமான அந்தச் சிலை அவரை முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை என்ற விவகாரத்தைத் தமிழ்மக்கள் தங்களுக்குள் தீர்த்துக் கொள்வார்கள். அது பிரச்சனையில்லை. இங்கு பிரச்சினை என்னவென்றால், திலீபனின் சிலை ஒன்றை வைக்க முடியாது என்று அரசாங்கம் கூறுவதுதான்.
அது சட்டப்படி குற்றம் என்ற பொருள்பட அமைச்சரவைப் பேச்சாளர் கூறுகிறார். சட்டரீதியாகத் தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பின் உறுப்பினருடைய சிலை அது என்பதனால், அதனை அங்கே வைத்தது சட்டப்படி குற்றம் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாகத் தெரிகிறது. இது ஏற்கனவே இருந்த அரசாங்கங்களின் நிலைப்பாடுதான்.
அதேசமயம் இந்த விடயத்துக்கும் அரசாங்கத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல அமைச்சர் சந்திரசேகரன் கருத்துக் கூறியுள்ளார். அமைச்சர் சந்திரசேகரன் யார்? வட மாகாண விவகாரங்களைக் கையாள்வதற்கு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அமைச்சர். அவர் கூறுகிறார், சிலை தூக்கப்பட்டதற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கும் தொடர்பு ஏதும் கிடையாது என்று. இந்த விடயத்தில் யாழ். மாநகர சபை முடிவெடுத்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் செய்யாத வேலையை போலீசார் செய்தார்கள் என்றும் சந்திரசேகரன் கூறுகிறார்.
அதாவது சந்திரசேகரன் இந்த விடயத்தில் மாநகர சபையையும் அதற்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் மோத விட விரும்புகிறார் என்று தெரிகிறது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த விடயத்தில் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவஞானத்தை நேரடியாகக் குற்றம் சாட்டியிருக்கிறது. சிவஞானம் அதை மறுத்திருக்கிறார். தற்காலிகமாக அந்தச் சிலையை வைப்பதற்கு அனுமதி கேட்கப்பட்டதாக மாநகர சபை கூறுகிறது. அப்படியென்றால் தற்காலிகமாக வைக்கப்பட்ட சிலையை தேவை முடிந்ததும் அகற்றலாமா? தற்காலிகமாக சிலையை வைப்பதற்கு சட்ட ரீதியாக ஏற்பாடுகள் உண்டா? தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் கேட்டதற்காக அந்தச் சிலையை தற்காலிகமாக வைப்பதற்கு மாநகர சபை ஒப்புக்கொண்டது என்றால் தற்காலிகமாக சட்டத்தை மீறுவதற்கு மாநகர சபை தயாராக இருந்ததா?
தமிழரசு கட்சி இந்த விடயத்தில் “ரிஸ்க்” எடுக்கவில்லை என்பது தெரிகிறது. அது விவகாரத்தை சட்டரீதியாக அணுக முயற்சிக்கிறது. ஆனால் இது சட்ட ரீதியான விவகாரம் அல்ல. சட்டப்படி பார்த்தால் திலீபன் தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பின் உறுப்பினர். எனவே சட்டரீதியாக அவரை நினைவுகூர அரசாங்கம் அனுமதிக்காது.அதனால் தமிழ்த்தரப்பு அவர் அகிம்சை வழியில் போராடி உயர் நீர்த்தவர் என்ற காரணத்தைக் குவிமயப்படுத்தி அவரை நினைவு கூர்ந்து வருகிறது.
சட்டப்படி பார்த்தால், தற்காலிகமாகக் கூட சிலையை அனுமதித்திருக்க முடியாது. எனவே தமிழரசுக் கட்சி ஒரு கட்டத்துக்கு மேல் சட்ட மறுப்பாகப் போராடத் தயாரில்லை என்பதுதான் மெய்நிலை. போராட்டம் என்பது ஒரு வகையில் சட்ட மறுப்புத்தான். சட்டரீதியாக ஒரு கட்டத்துக்கு மேல் போராட முடியாது.
தமிழரசுக் கட்சி மாநகர சபையின் ஆளுங்கட்சி.இந்த அடிப்படையில் அது ஒரு கட்டத்துக்கு மேல் ரிஸ்க் எடுக்கவில்லை என்பதுதான் உண்மை.இந்த விடயத்தில் போலீசார் திலீபனின் நாட்கள் முடியும்வரை சிலையில் கை வைக்காமல் பொறுத்திருந்திருக்கிறார்கள். நினைவு நாட்களின் மத்தியில் சிலையை அகற்றினால் வரக்கூடிய உணர்ச்சிக் கொந்தளிப்பான விளைவுகளைத் தவிர்ப்பதற்காக அவர்கள் இறுதி நாள் வரை காத்திருந்து, நினைவு நாள் முடிந்ததும் சிலையை அதிகாலையிலேயே அகற்றியிருக்கிறார்கள்.
அதாவது திலீபனின் சிலை வைக்கப்படுவதை அரசாங்கம் அனுமதிக்காது. படத்தை வைத்து அல்லது கட்டவுட்டை வைத்து நினைவு கூர்வதை ஓரளவுக்கு சகித்துக் கொண்டாலும் நிரந்தரமாக ஒரு சிலை வைக்கப்படுவதை அரசாங்கம் சகித்துக்கொள்ளாது என்பதைத்தான் அது காட்டுகிறது.இது நினைவு கூர்வதில் தமிழ் மக்களுக்கு உள்ள வரையறைகளை உணர்த்தும் இடம்.
ஆனால் 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐநாவில் நிறைவேற்றப்பட்ட நிலைமாறு கால நீதிக்கான தீர்மானத்தின் கீழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நினைவு கூரும் உரிமை உண்டு. நிலை மாறு கால நீதியின் நான்கு தூண்களில் ஒன்று என்று கூறப்படுகின்ற இழப்பீட்டு நீதி என்ற பிரிவின் கீழ் தமிழ் மக்களுக்கு நினைவு கூர்வதற்கான உரிமை உண்டு. அந்தத் தீர்மானத்துக்கு அப்போது இருந்த இலங்கை அரசாங்கம் அனுசரணை வழங்கியது. இலங்கை அரசாங்கம் ஒன்றின் இணை அனுசரணையோடு நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் அது.
தமிழ் மக்கள் நிலைமாறு கால நீதியை ஏற்றுக்கொள்ளவில்லை.இக்கட்டுரையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் நிலைமாறு கால நீதிக்குரிய தீர்மானத்தின் தொடர்ச்சியாகத்தான் பதவிக்கு வந்த எல்லா அரசாங்கங்களும் ஐநாவுக்குச் சென்று அங்கே அனைத்துலக சமூகத்துக்கு விளக்கங்கூற வேண்டியிருக்கிறது.
நிலைமாறு கால நீதியின் தூண்களில் ஒன்றாகிய இழப்பீட்டு நீதியின் கீழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நினைவு கூரும் உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் கடந்த 11 ஆண்டுகளாக நினைவு கூர்தல் ஒரு சட்டப் பிரச்சினையாகவே கையாளப்பட்டு வருகிறது. இந்த விடயத்தில் இழப்பீட்டு நிதிக்கான அலுவலகத்துக்குரிய சட்ட ஏற்பாடுகளை வரையும்போது, அப்பொழுது நிலை மாறு கால நீதியின் தமிழ்ப் பங்காளிகளாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது பொருத்தமான ஏற்பாடுகளை அங்கே இணைக்கத் தவறிவிட்டது என்று ஒரு சட்டச் செயற்பாட்டாளர் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். அதனால்தான் கடந்த 11 ஆண்டுகளாக நினைவு கூர்தல் ஒரு சட்டப் பிரச்சினையாகவே தொடர்ந்தும் காணப்படுகிறது.
அரசாங்கம் இந்த விடயத்தை இரண்டு தளங்களில் கையாள முற்படுகிறது. முதலாவது,இதை ஒரு சட்டப் பிரச்சினையாகக் காட்டுகிறது. இரண்டாவதாக, இது தமிழ்க் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடு என்று காட்டப் பார்க்கிறது.
அமைச்சர் சந்திரசேகரன் தமிழ்க் கட்சிகளுக்கு இடையே மோதலை ஊக்குவிக்கின்றார்.தமிழ்க் கட்சிகளும் இந்த விடயத்தில் இரண்டாக நிற்கின்றன.மட்டக்களப்பில் திலீபனின் நினைவு நாளை இரண்டாக நின்று அனுஷ்டித்திருக்கிறார்கள்.யாழ்ப்பாணத்தில் அதை அவ்வாறு இரண்டாக நின்று அனுஷ்டிக்கவில்லை. ஆனால் நினைவு நாட்கள் முடிந்ததும், சிலையை வைத்துக்கொண்டு இரண்டாகி நின்று மோதுகிறார்கள்.யாருக்கு எதிராக ஒன்றாகத் திரள வேண்டுமோ அது நடக்கவில்லை. மாறாக தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் ஒருவர் மற்றவர் மீது குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்.
ஆனால் இது சட்டப் பிரச்சினையும் அல்ல.தமிழ்க் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகளின் பிரச்சினையும் அல்ல. இது தமிழ் மக்களின் நினைவு கூர்வதற்கான அரசியல் உரிமை அதாவது தமிழ் மக்களின் கூட்டுரிமையோடு சம்பந்தப்பட்ட விவகாரம். இது ஓர் அரசியல் விவகாரம்.இதனை அரசியலாகத்தான் பார்க்கவேண்டும்.அரசியலாகத்தான் கையாள வேண்டும். அதற்கு எதிரான போராட்டங்கள் அரசியல் போராட்டங்களாகத்தான் இருக்கலாம். தமிழ்ச் சமூகத்தின் நினைவு கூரும் உரிமை தொடர்பான ஓர் அரசியல் போராட்டம் இது. எனவே இதை அதற்குரிய அரசியல் அடர்த்தியோடு போராட வேண்டும். இந்த விடயம் தமிழ்க் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகளைப் பிரதிபலிப்பதை இயன்ற அளவுக்குத் தவிர்க்க வேண்டும். அதாவது அரசாங்கம் விரும்புவதை தமிழ்க் கட்சிகள் செய்யக்கூடாது.
















