‘பா.ஜ.க.வை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக சமாஜ்வாடி கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பதற்றம் நிலவுவதாக செய்திகள் வெளியாகின. இதனிடையே பா.ஜ.க.வை தோற்கடிப்பதிலும், ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதிலுமே முதன்மை கவனம் இருக்க வேண்டும் என்று சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அகிலேஷ் யாதவின் கருத்துக்கு தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது; “சமாஜ்வாடி கட்சியின் நிலைப்பாட்டிற்கு தி.மு.க. ஆதரவளிக்கிறது. கூட்டணியாக வெற்றி பெற்று பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும். ஒரு கட்சிக்கு கூடுதலாக இரண்டு அல்லது மூன்று இடங்கள் கிடைப்பது பெரிய விஷமில்லை. பா.ஜ.க.வை தோற்கடிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும். பா.ஜ.க. எல்லாவற்றையும் செய்கிறது. அவர்கள் வாக்காளர்களை நீக்க விரும்புகிறார்கள். குறிப்பாக, சில மதங்களைச் சேர்ந்தவர்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதால், அவர்களை நீக்குவதற்கு எஸ்.ஐ.ஆர். திருத்தத்தை பா.ஜ.க.வினர் பயன்படுத்துகின்றனர். அதனால் பா.ஜ.க. எதிர்ப்பு வாக்காளர்களின் பெயர்கள் தொடர்ந்து நீக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் ஆணையம் ஒரு நடுநிலையான அமைப்பு. ஆனால் ஞானேஷ் குமார் வந்த பிறகு, அது ஒரு நடுநிலையான அமைப்பாக இல்லை. ஞானேஷ் குமார் மத்தியில் ஆளும் கட்சியின் செல்வாக்கின் கீழ் செயல்பட்டு வந்தார்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
















