ந.லோகதயாளன்.
மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் கருதப்படும் வலிகாமம் வடக்குப் பகுதியில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
எதிர்காலத்தைச் சிதைக்கும் இந்தச் செயற்பாட்டுக்கு அனுமதி வழங்கிய பிரதேச செயலரை உடனடியாக இடமாற்றுமாறு வலியுறுத்தி தெல்லிப்பழைச் சந்தியில் 8ம் திகதி காலை 9 மணியளவில் ஆரம்பமான இந்தப் போராட்டம், தெல்லிப்பழை பிரதேச செயலகத்தைச் சென்றடைந்தது.
மதுபானசாலை அனுமதியை மறுபரிசீலனை செய்யக் கோரும் தமது நியாயமான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் இதன்போது பிரதேச செயலரிடம் கையளிக்கப்பட்டது.
சமூக ஆர்வலர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டு மதுபானசாலை அனுமதிக்கு எதிரான தமது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
வலிகாமம் வடக்கின் சமூகச் சூழலையும் மக்களின் நலனையும் கருத்திற்கொண்டு மதுபானசாலை அனுமதி வழங்கும் தீர்மானத்தை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.















