இந்தியாவின் எதிர்காலத்தை இந்தியர்களே தீர்மானிப்பார்களென எலான் மஸ்க்கிற்கு கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார். உலக பெரும் பணக்காரான எலான் மஸ்க் தனது ஸ்டார்லிங் இணைய சேவைக்கு இந்தியாவில் அனுமதி கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். “எனது ஸ்டார்லிங்க் நிறுவனம் 165 நாடுகளில் உரிமம் பெற்று இயங்கி வருகிறது. இந்திய அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு 5 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நிலையிலும் இன்னும் உரிமம் கிடைக்கவில்லை. அம்பானி தான் இந்தியாவின் உண்மையான பாஸா” என்று பதிவிட்டு இருந்தார். எலான் மஸ்கின் இந்த பதிவு, நேரடியாக இந்திய தொழிலதிபர்களை விமர்சிப்பதாக இருந்தது. எலான் மஸ்க்கின் இந்த எக்ஸ் பதிவு குறித்து நடிகரும் மாநிலங்களவை எம்பியுமான கமல்ஹாசன் கருத்து பதிவிட்டுள்ளார். கமல்ஹாசன் அதில் கூறியிருப்பதாவது: இந்தியராக இருந்தாலும் சரி.. அமெரிக்கராக இருந்தாலும் சரி.. எந்த ஒரு கோடீஸ்வரரும் நாட்டின் கொள்கைகளைத் தீர்மானிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கக் கூடாது. செயற்கைக்கோள் இணையச் சேவையில் இந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் போட்டியை நாம் வரவேற்க வேண்டும். மலிவு விலையில் கிடைக்க வேண்டும் அதேநேரத்தில், தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நடைமுறைக்கு ஏற்ற, குறைந்த செலவிலான இணைய இணைப்பை யார் வழங்குகிறார்களோ, அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். தனிநபர் வருமானம் குறைவாக உள்ள நாடுகளில் செயற்கைக்கோள் இணையச் சேவையும் மலிவு விலையில் கிடைக்க வேண்டும். அதிக சந்தா கட்டணமும், உபகரணங்களுக்கான அதிக விலையும் சாதாரண மக்களுக்கு இந்தச் சேவையை எட்டாக்கனியாக மாற்றிவிடும் அபாயம் உள்ளது. மேற்கத்திய நாடுகளின் சுயநல நோக்கங்களோ, இரட்டை நிலைப்பாடுகளோ அல்லது இந்தியராக இருந்தாலும் சரி, அமெரிக்கராக இருந்தாலும் சரி, எந்த ஒரு கோடீஸ்வரரோ நமது நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியாது” என்று காட்டமாக எலான் மஸ்க்கிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
















