தமிழ்நாட்டில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை இந்திய பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். அவர் இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக டில்லியில் இருந்து விமானம் மூலமாக சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்தார்.
விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை முதல்-அமைச்சர் விஜய் நேரில் சென்று வரவேற்றார். அதனை தொடர்ந்து அமைச்சர்கள், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், முதல்-அமைச்சர் விஜய்யும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின்போது, தமிழ்நாட்டில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். குறிப்பாக, 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 750 கோடி ரூபாய் மதிப்பிலான ரெயில்வே திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, புனரமைக்கப்பட்ட 5 ரெயில் நிலையங்களை திறந்து வைத்தார். முன்னதாக, சுமார் ரூ.4,900 கோடி செலவில் கட்டப்பட்ட சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டமான பூந்தமல்லி-வடபழனி வழித்தடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பிரதமர் மோடியும், முதல்-அமைச்சர் விஜய்யும் இணைந்து புதிய மெட்ரோ வழித்தடத்தை கொடியசைத்து தொடங்கி வைத்ததுடன், மெட்ரோ ரெயிலிலும் பயணம் செய்தனர்.
















