சமூக நீதித் துறை சார்பாக சமூக நீதி அறக்கட்டளையை சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சமூக நீதித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக இலாப நோக்கற்ற பொது அறக்கட்டளையாக “சமூக நீதி அறக்கட்டளை” என்ற பெயரில் தொடங்கப்படும் என தமிழ்நாடு முதல்-அமைச்சரின் ஆணைப்படி சமூக நீதித்துறை அமைச்சர் சட்டபேரவையில் அறிவித்தார். சென்னை, ஆதிதிராவிடர் நல இயக்குநரகத்தில் மாண்புமிகு சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு சமூக நீதி அறக்கட்டளையை தொடங்கி வைத்தார். இவ்வறக்கட்டளை சென்னை-5 சேப்பாக்கம், ஆதிதிராவிடர் நல இயக்குநரகத்தில் செயல்படும். தமிழ்நாட்டின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகங்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக அரசு தொடர்ந்து பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தொடங்கப்பட்டுள்ள அறக்கட்டளையானது பெருநிறுவனங்கள், கொடையாளர்கள், தனிநபர் நன்கொடையாளர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆகியோர்களை கைகோர்க்க அரசு இம்முயற்சிகளில் வழிவகுக்கிறது. அரசுக்கும் அனைத்து பங்குதாரர்களுக்கும் இடையே தடையற்ற ஒருங்கிணைப்பை உறுதிசெய்து சமூக நீதி அறக்கட்டளை செயல்படும். இந்தியா மற்றும் அயல்நாடுகளில் உள்ள தனிநபர்கள், நிறுவனங்கள், அமைப்புகளிடமிருந்து நிதி பங்களிப்புகள், பெருநிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி (CSR funds), நிலம், கட்டிடங்கள் மற்றும் பிற சொத்துக்களை இவ்வறக்கட்டளை திரட்டும். சமூக நீதித் துறைச் செயலாளரைத் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலராக கொண்டு இயங்கும். அறங்காவலர் குழு இவ்வறக்கட்டளையை நிர்வகிக்கும். ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் உறுப்பினர்-செயலராகவும், பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) மேலாண்மை இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் செயல்படுவர். இவ்விழாவில் சமூக நீதித் துறை அமைச்சர் தெரிவித்ததாவது; சமூக நீதி அறக்கட்டளை இத்துறையின் மிகச்சிறந்த முன்னெடுப்பு என்றும், சமூக மேம்பாட்டிற்கு துணை நிற்க விரும்பும் நிறுவனங்களும் தனிநபர்களும் இந்த அறக்கட்டளையின் மூலம் பங்களிக்க முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
















