தடையற்ற மின்சாரத்தைக் குறைந்த செலவில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாட்டில் நிலவும் மின்பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காகத் தனியார் நிறுவனங்களிடமிருந்து ஓர் அலகு மின்சாரத்தைச் சுமார் 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய தவெக அரசு முடிவெடுத்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அரசின் சொந்த மின் உற்பத்தி திட்டங்களை வலுப்படுத்தாமல், அதிக விலை கொடுத்து தனியாரிடம் மின் கொள்முதல் செய்வது வன்மையான கண்டனத்திற்குரியது. தவிர்க்க முடியாத அடிப்படைத் தேவையாக உள்ள மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் நீண்டகாலமாக பெரிய முதலீடு ஏதும் செய்யாமல் முந்தைய திமுக, அதிமுக அரசுகள் அதிக விலை கொடுத்து தனியாரிடம் மின்சாரம் வாங்கியதால் அரசுக்கு பல்லாயிரம் கோடிகள் இழப்பு ஏற்பட்டு, மின்வாரியம் 2 லட்சம் கோடிகள் அளவிற்கு கடனில் மூழ்கியுள்ளது. அதையே தவெக அரசும் தொடர்ந்தால் மேலும் மேலும் கடன்தான் அதிகமாகும். உற்பத்தியில் முதலீடு செய்வதுதானே நிலையான தீர்வை நோக்கி நகரும். ஒவ்வொரு முறையும் தனியாரிடம் மின்சாரம் வாங்குவதையே தீர்வாகக் கூறிக்கொண்டிருந்தால், தமிழ்நாடு மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைவது எப்போது? இந்தப் பிரச்சினைக்கு நிலையான தீர்வு எப்போது வரும்? அதற்கான திட்டமும் காலக்கெடுவும் எங்கே? மின் உற்பத்திக்கு அணு மின் திட்டமும், அனல் மின் திட்டமும் மட்டும்தான் உள்ளதா? சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத சூரிய ஒளி, காற்றாலை, கடல் அலை உள்ளிட்ட மாற்று மின்பெருக்கத் திட்டங்களே இல்லையா? அவற்றில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தாதது ஏன்? தவெக ஆட்சிக்கு வந்து, கடந்த 5 மாதத்தில் மின்கட்டணம் பல மடங்கு அதிகமாக வசூலிப்பதாக அல்லல்பட்டு மக்கள் போராடி வரும் நிலையில், இப்பொழுது ஓர் அலகு 35 ரூபாய் கொடுத்து தனியாரிடம் மின் கொள்முதல் செய்தால், அதனை காரணமாக வைத்து மேலும் எத்தனை மடங்கு மின்கட்டணத்தை உயர்த்தி மக்களை வதைக்கப்போகிறீர்கள்? மின்தேவை அதிகரிப்பதை முன்கூட்டியே கணித்து, உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது அரசின் அடிப்படைக் கடமையல்லவா? பற்றாக்குறை ஏற்பட்ட பிறகு அவசரமாக அதிக விலைக்கு வாங்குவதற்கு அரசு எதற்கு? நிர்வாகம் எதற்கு? தனியாக மின்துறைதான் எதற்கு? ஒப்பந்தங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தூயசக்தி என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் தவெக அரசு வெளிப்படையாகப் பொதுவெளியில் அறிவிக்க வேண்டும். ஆகவே, அரசின் மின் நிலையங்களைச் சீரமைத்தல், நிலுவைத் திட்டங்களை நிறைவேற்றுதல், புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் மாற்று மின் உற்பத்தி திட்டங்களையும், மின்சேமிப்பு வசதிகளையும் விரிவுபடுத்துதல், மின் விநியோக இழப்புகளைக் குறைத்தல் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும். அதிக விலையிலான மின் கொள்முதல் முடிவை உடனடியாக மறுஆய்வு செய்து, தடையற்ற மின்சாரத்தைக் குறைந்த செலவில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்வதோடு, கூடுதல் கொள்முதல் செலவை மக்கள்மீது சுமத்தக்கூடாது என்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
















