மராட்டியத்தில் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ரூ.5000 வழங்க முதல்-அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார். மராட்டியத்தில் நடப்பு ஆண்டில் பருவமழை போதிய அளவு பெய்யாமல் பொய்த்துப் போன தன் காரணமாக, மாநிலத்தின் 85 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகள் கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன.
மரத்வாடா உள்ளிட்ட பல பிராந்தியங்களில் நிலத்தடி நீர்மட்டம் வரலாறு காணாத அளவு சரிந்து, 3 மீட்டருக்கும் கீழே சென்றுள்ளது. கிணறுகளும் ஆழ்துளைக் கிணறுகளும் வறண்டதால். குடிநீருக்காகப் பொதுமக்கள் மைல் கணக்கில் அலையும் அவலநிலை நீடிக்கிறது. சுட்டெரிக்கும் அக்டோபர் வெயிலால், லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட கரும்பு, சோளம் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரின்றி வாடிக் கருகுகின்றன. இதனால் ஏற்பட்டுள்ள கடுமையான பயிர் நஷ்டம் மற்றும் கடன் சுமையால் விவசாயக் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றன. கால்நடைகளுக்கான தீவனத் தட்டுப்பாடும் தீவிரமடைந்துள்ளது. வறட்சி நிலைமையைக் கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்ட பகுதிகளில் இப்போதே குடிநீர் டேங்கர்கள் மூலம் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வான் பொய்த்ததால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு உதவும் வகையில், முதல்-அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் பல்வேறு அதிரடி நிவாரணங்களை அறிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்-அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், வறட்சியால் தவிக்கும் விவசாயக் குடும்பங்களுக்குத் தீபாவளிப் பண்டிகைக் காலப் பரிசாகத் தலா ரூ.5 ஆயிரம் இடைக்கால நிவாரண நிதி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
















