கோவையில் பெரியார் அறிவுலகம் நூலகத்தை முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார். கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் அறிவுலகம் என்ற பெயரில் நூலகம் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 7 தளங்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் அறிவியல் மையம் உள்ளது. இந்த நூலகத்தை திறந்து வைப்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் விஜய், சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு கோவை விமானம் நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து முதல்-அமைச்சர் விஜய், அவினாசி ரோடு வழியாக விழா நடைபெறும் காந்திபுரத்துக்கு 11.4 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோ சென்று பொதுமக்களை சந்தித்தார். முதல்-அமைச்சர் செல்லும் வழியெங்கிலும் சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். த.வெ.க. சார்பில் முதல்-அமைச்சரை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதிலும், பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு வந்து முதல்-அமைச்சரை காண காலை முதலே ஆர்வத்துடன் காத்து நின்றனர். முதல்-அமைச்சர் விஜய்யின் கார் வரும்போது மேள தாளங்களுடன், பூக்களை தூவியும், உற்சாக முழக்கங்களை எழுப்பியும் அவர்கள் வரவேற்பு அளித்தனர். அவர்களைப் பார்த்து கையசைத்தபடி மக்களின் வரவேற்பை முதல்-அமைச்சர் விஜய் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து நூலகத்திற்கு சென்ற முதல்-அமைச்சர் விஜய்க்கு கோவை மாநகர காவல்துறை சாரில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. காவல்துறையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்ட முதல்-அமைச்சர், நூலக முகப்பில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை மற்றும் பெரியார் அறிவுலகம் கல்வெட்டை திறந்து வைத்தார். இதையடுத்து பெரியார் அறிவுலகம் நூலகத்தை ரிப்பன் வெட்டி முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து அறிவுலகத்தில் உள்ள வரவேற்பறை, அறிவியல் மையம், குழந்தைகள் நூலகம், புத்தகம் படிக்கும் பிரிவு, அறிவியல் மையம் மற்றும் டிஜிட்டல் நூலகம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் விஜய் பார்வையிட்டார்.
















