யார் கட்சி ஆரம்பித்தாலும் இனி வரும் தேர்தல்களில் தி.மு.க. தனித்தே போட்டியிடுமென தி.மு.க. முன்னாள் அமைச்சரும், திருமயம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரகுபதி கூறியுள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: விஜய் கட்சி ஆரம்பிக்கும் போது தனுஷ் கட்சி ஆரம்பிக்கக்கூடாதா? யோகிபாபு, தனுஷ் என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். தனுஷ் தன்னிச்சையாக வந்து நற்பணி இயக்கம் தான் ஆரம்பித்திருக்கிறார். அதன் மூலமாக மக்களைச் சந்திக்கிறார். அதன்பிறகு அரசியல் கட்சியாக மாற்றி தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. ஆனால், தனித்து நின்று வெற்றி பெறக்கூடிய தெம்பும் திராணியும் உள்ள ஒரே இயக்கம் இன்றைக்கு திராவிட முன்னேற்ற கழகம்தான். எத்தனை கட்சிகள் வந்தாலும் இனி வரும் தேர்தல்களில் தி.மு.க. தனித்துதான் போட்டியிடும். விராலிமலை தொகுதி வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அத்தொகுதி வேட்பாளர் விஜயபாஸ்கர் தான் என்று செங்கோட்டையன் அறிவித்துள்ளார். கூட்டத்தைப் பார்த்தவுடன் பேசுவதும், பார்க்காதபோது மாற்றி பேசுவதும் அவரது வழக்கம். அவருடைய பேச்சுக்கு
தமிழக மக்களிடையே எந்த மரியாதையும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
















