பசுமை இயக்கத் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவிப்பு
மரங்களை நடுகை செய்வது என்பது பூமியின் வெம்மையைத் தணிவிக்கும் ஒரு சுற்றுச்சூழல் பணியாகும். ஆனால், கார்த்திகை மாதத்து மரநடுகை வெறுமனே ஒரு சூழற் செயற்பாடு மட்டுமல்ல அது மண்ணைக் குளிர்விப்பதோடு, மண்ணுக்காக மரணித்த மாவீரர்களைக் கூட்டாக நினைவேந்தும் தமிழ்த் தேசிய அரசியலின் ஓர் அறப்போராட்டமும் ஆகும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண மரநடுகை மாதமாகக் கார்த்திகை மாதம் கடைப்பிடிக்கப்படுவது தொடர்பாக பொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கார்த்திகை தமிழ் மக்களுக்கு ஆன்மீக ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் புனிதமான ஒரு மாதமாகும். இம்மாதத்திலேயே வீடுகள் தோறும் அகல் விளக்குகள் ஏற்றி வழிபடும் தீபத்திருநாளும், மண்ணுக்காக மரணித்த மாவீரர்களின் கூட்டு நினைவாகச் சுடரேற்றும் தியாகத்திருநாளும் அடங்குகின்றன. இறந்தவர்களின் நினைவாக நடுகற்கள் நடுவது போல, அவர்களின் நினைவை என்றென்றும் வாழவைக்கும் பசுமைச் சின்னங்களாக மரங்களை நாட்டிப் பராமரிப்பது தொன்று தொட்டுத் தமிழ் வாழ்வியலோடு பிணைந்த ஒரு மரபாகும். இந்தத் தொல் மரபின் தொடர்ச்சியாகக் கார்த்திகையில் நாம் ஊன்றும் ஒவ்வொரு மரக்கன்றும் மாவீரர்களின் தியாக வரலாற்றை எதிர்காலச் சந்ததிக்குக் கடத்தும் உயிர்ச் சின்னங்களாக அமையும்.
ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்பும், மாவீரர்களை நினைவேந்துவதற்கான அடிப்படை உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. அரச படைகளால் நினைவுத்தூபிகள் இடித்து அழிக்கப்படுவதும், நினைவுச் சிலைகள் பெயர்த்து அகற்றப்படுவதும், நினைவுச் சுடர்கள் மிதித்து அணைக்கப்படுவதும் தொடர்கதையாக நீடிக்கிறது. ஆனால், மாவீரர்கள் நினைவாக மரக்கன்றுகளை நடுவதை எந்தவொரு சட்டத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது. எனவே, கார்த்திகை மாத மரநடுகை மாவீரர்களை நினைவேந்தும் அதேவேளை, அடக்குமுறைகளுக்கு எதிராக, இயற்கையின் சாட்சியாக வன்முறைகளின்றி முன்னெடுக்கப்படும் ஓர் அறவழிப் போராட்டமாகவும் அமைகிறது.
இலங்கையின் வறண்ட வலயமான வடபகுதிக்குக் கார்த்திகையில் வீசுகின்ற வடகிழக்குப் பருவப்பெயர்ச்சிக் காற்றே கூடிய மழைப்பொழிவைத் தருகிறது. இக்காலப்பகுதியில் நிலவும் வளிமண்டலக் குளிர்ச்சியும் மண்ணின் ஈரப்பற்றும் மரக்கன்றுகளின் நீராவிப்போக்கைக் குறைத்து, அவை வாடிவிடாது வேரூன்ற உவப்பான சூழ்நிலையை வழங்குகின்றன. காலநிலை மாற்றத்தால் தீவிரமடையும் எல் நினோ நிகழ்வு கடுமையான மழைப்பொழிவை ஏற்படுத்தி வருவதால் வெள்ளம் தேங்குகின்ற தாழ்நிலப் பகுதிகளைத் தவிர்த்து மரக்கன்றுகளை நடுகை செய்வது கார்த்திகை மரநடுகையை அறவியல் ரீதியாக மட்டுமல்லாது அறிவியல் ரீதியாகவும் முழுமையாக ஏற்புடையதாக்குகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.



















