பு.கஜிந்தன்
வடக்கு மாகாணத்தில் அடுத்த ஆண்டு 30,000 நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சை மேற்கொள்வதுடன், நாய்களுக்கான தடுப்பூசித் திட்டத்தையும் விரிவுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணக் ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் 6ம் திகதி அன்று (06.11.2026) வெள்ளிக்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
வெறிநாய்க்கடி நோயை (ரேபிஸ்) ஒழிப்பதுடன், கட்டுப்பாடின்றிச் சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்கையை மனிதாபிமான முறையில் முகாமைத்துவம் செய்வதற்கான ஒருங்கிணைந்த ‘ஒரே சுகாதார’ அணுகுமுறையிலான திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் எம்.மலரவன், இத்திட்டத்தின் அவசியத்தை விளக்கினார். அதிகரித்து வரும் நாய்களால் ஏற்படும் வீதி விபத்துகள், உயிரிழப்புகள், நாய்க்கடிச் சம்பவங்கள் மற்றும் வெறிநாய்க்கடி நோய் அபாயம் ஆகியவற்றுடன், கட்டுப்பாடற்ற நாய்களின் நடமாட்டம் சுற்றுலாத்துறைக்கும் அச்சுறுத்தலாக மாறிவருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் முன்வைத்த 2027–2029 காலப்பகுதிக்கான திட்ட முன்மொழிவு, மனித சுகாதாரம், விலங்கு சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் அணுகுமுறையை முன்வைக்கிறது. நாய்களுக்குத் தடுப்பூசி வழங்குவதே வெறிநாய்க்கடி நோயைக் கட்டுப்படுத்துவதற்கான பிரதான நடவடிக்கையாகும். அதனுடன், நாய்களைப் பிடித்து, கருத்தடைச் சிகிச்சை செய்து, தடுப்பூசி வழங்கி, உரிய பராமரிப்புக்குப் பின்னர் மீள விடுவிக்கும் நடைமுறையையும் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்குச் சமாந்தரமாக, மீன் மற்றும் இறைச்சிச் சந்தைகள், இறைச்சி பதப்படுத்தும் இடங்கள், பொதுக் குப்பைக் கொட்டும் இடங்கள் போன்றவற்றில் உணவுக் கழிவுகள் நாய்களுக்கு எளிதில் கிடைக்காத வகையில் கழிவகற்றல் முறைகளை மேம்படுத்துவதும் திட்டத்தின் முக்கிய அம்சமாக முன்வைக்கப்பட்டது. இத்தகைய ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் ஊடாக வெறிநாய்க்கடி நோயைக் கட்டுப்படுத்துவதுடன், பொதுமக்களின் பாதுகாப்பையும் விலங்குகளின் நலனையும் உறுதிப்படுத்துவதே திட்டத்தின் நோக்கமாகும்.
இம்முயற்சிக்கு சிங்கப்பூர் தேசிய கண் நிலையத்தின் நரம்பியல் கண் மருத்துவப் பிரிவின் மூத்த ஆலோசகரும், நரம்பியல் துறை மருத்துவப் பேராசிரியருமான உமாபதி என்.திருஞானம் தன்னார்வமாக ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாகவும் மருத்துவர் மலரவன் தெரிவித்தார். அவரது தொழில்நுட்ப உதவியுடன் தொடர்புடைய பணியாளர்களுக்குப் பயிற்சிகளை வழங்குவதற்கும் இணக்கம் காணப்பட்டது.
வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி எஸ்.வசீகரன், ஆளுநரின் வழிகாட்டலில் மாகாண சபையின் உள்ளூராட்சி அமைச்சு, உள்ளூராட்சித் திணைக்களம் மற்றும் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் ஆகியன இணைந்து கடந்த ஆண்டிலிருந்து நாய்களுக்கான கருத்தடைச் சிகிச்சைத் திட்டத்தை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தார். இதுவரை 9,000 நாய்களுக்கு இச்சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. எனினும், நாய்களைப் பிடிக்கும் உள்ளூராட்சி மன்றப் பணியாளர்களுக்கான பயிற்சி, சிகிச்சைக்குப் பின்னரான பராமரிப்பு மற்றும் தேவையான மருந்துகளின் தட்டுப்பாடு போன்ற சவால்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாண மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக்கலாநிதி ஆ.கேதீஸ்வரன், இலங்கையில் பொதுவாக எட்டு மனிதர்களுக்கு ஒரு நாய் என்ற விகிதம் காணப்படுகின்ற நிலையில், பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவரின் உதவியுடன் சண்டிலிப்பாய் மற்றும் கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் நான்கு மனிதர்களுக்கு ஒரு நாய் என்ற விகிதம் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார். இது குறித்த கணக்கெடுப்பு அறிக்கையையும் அவர் ஆளுநரிடம் கையளித்தார்.
நாய்களுக்கான தடுப்பூசித் திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதும், அதனைச் செயல்படுத்துவதில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் தொடர்பிலும் அவர் விளக்கினார். அடுத்த ஆண்டு இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
கலந்துரையாடலின் முடிவில், 2027ஆம் ஆண்டில் 30,000 நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சை வழங்குவதுடன், தடுப்பூசித் திட்டத்தையும் விரிவுபடுத்துவதற்கும், பேராசிரியர் உமாபதி என்.திருஞானத்தின் ஆதரவுடன் தேவையான பயிற்சிகளை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், விவசாய, உள்ளூராட்சி மற்றும் சுகாதார அமைச்சுக்களின் செயலாளர்கள், உள்ளூராட்சி ஆணையாளர், சுகாதார சேவைகள் மாகாணப் பணிப்பாளர், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள மாகாணப் பணிப்பாளர், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் மற்றும் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள மாவட்டப் பணிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


















