‘தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு புத்தகம் கூட இதுவரை கொள்முதல் செய்யவில்லையென அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சென்னை புரசைவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது; “த.வெ.க. ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் நூலகங்களுக்கு தற்போது வரை ஒரு நூல் கூட கொள்முதல் செய்யவில்லை. தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் நூலகங்களில் உள்ள புத்தகங்கள் எல்லாம் கடந்த கால ஆட்சிகளின்போது கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்கள்தான்.
அகல்விளக்கு பதிப்பகம் முறைகேட்டில் ஈடுபட்டது எப்படி? என்பது குறித்து விசாரித்து வருகிறோம். போலி புத்தக கொள்முதலுக்கு யார் காரணம் என கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் விசாரணை நடத்தி வருகிறது. நூலக புத்தக கொள்முதலுக்கு புதிய குழு அமைக்க உள்ளோம். நூலகங்களுக்கான நூல்களை டிசம்பர் மாதத்தில் வாங்குவதற்காக குழு அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. எழுத்தாளர்களைக் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டு நூலகங்களுக்கான நூல்கள் கொள்முதல் செய்யப்படும். தி.மு.க. ஆட்சியில் நூலகங்களில் நடந்துள்ளது இமாலய ஊழல் போல் தெரிகிறது. புகழ்பெற்ற எழுத்தாளரின் பெயரைப் பயன்படுத்தி கலைஞர் நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த போலி ஆய்வு நூல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க கன்னிமாரா நூலகத்திலேயே 523 போலி புத்தகங்கள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புகார்களில் சிக்கும் த.வெ.க. நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சட்டப்படி விசாரணையும் நடைபெற்று வருகிறது. தொகுதியை சேர்ந்த ஒருவரை தாக்கியதாக துணை சபாநாயகர் ரவிசங்கர் மீது எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முன்பை விட காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளோம். குற்ற சம்பவங்களைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் நடந்த குற்றங்களை ஒப்பிட்டு நியாயப்படுத்த விடும்பவில்லை.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.



















