பல்கேரியாவில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். ஐரோப்பிய நாடான பல்கேரியாவில் தற்போது குளிர்காலம் தொடங்கி உள்ளது. இதனால் அங்கு அதிகாலை நேரங்களில் சாலைகளே தெரியாத அளவுக்கு மிக அடர்ந்த பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்த நிலையில், பல்கேரியாவின் தலைநகர் சோபியாவையும், கிழக்குப் பகுதியிலுள்ள புர்காஸ் நகரையும் இணைக்கும் ஏ1 பிரதான நெடுஞ்சாலையில் நேற்று ஒரு பேருந்தும், லோரியும் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகின. அடர்ந்த பனிமூட்டம் காரணமாக முன்னால் விபத்து நடந்திருப்பது தெரியாமல், அடுத்தடுத்து வந்த நூற்றுக்கணக்கான கார், லோரி மற்றும் பேருந்துகள் ஒன்றின் பின் ஒன்றாக அதிவேகமாக முட்டி மோதி உருக்குலைந்தன. இந்த தொடர் விபத்தில், சம்பவ இடத்திலேயே 12 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 50 பேர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வருகின்றனர். இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை காவல்துறை தீவிரமாக மீட்டு வருகின்றனர்.



















