சிவாஜிலிங்கத்தின் மறைவுக்கு இரங்கல்
தமிழ்ப் பேரரசு கட்சியின் செயலாளர் வ.கௌதமன் இரங்கல்
இறுதிவரை உறுதி குறையாத போராளியும் இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஐயா சிவாஜிலிங்கம் அவர்கள் மூச்சடங்கிய செய்தியறிந்து மலை விழுந்த மண்பானையாய் மனம் நொறுங்கிப்போனது.
ஐநா மன்றமாக இருந்தாலும் இலங்கை பாராளுமன்றமாக இருந்தாலும் தமிழ்நாடு மற்றும் இந்திய ஒன்றிய அதிகார மையங்கள் எதுவாக இருந்தாலும் எவ்வித சமரசமுமில்லாமல் நேர்மையோடும் உறுதிப்பாட்டோடும் உரிமை மீட்க பெரும் குரலெடுத்துப் போராடியவர். சென்னை வரும் போதெல்லாம் அவருக்கு தோதாகும் நேரத்தில் வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ வருவார். ஒன்றாக இருந்து உணவருந்தி பேரன்போடும் பெரும் பாசத்தோடும் உரையாடுவார். நேரிடையாகவோ அல்லது அலைபேசியிலோ பேசினால் கூட இடைவெளியில்லாத ஒரு சகோதர உணர்வு எல்லா நேரத்திலும் இழையோடும். மாற்று இயக்கத்தில் வளர்த்திருந்தாலும் தமிழீழத் தேசிய தலைவரின் மேல் அவர்போல பற்று வைத்து துணை நின்றவர்கள் அரிதினும் அரிதானவர்களாகவே இருப்பார்கள். ஐநாவிற்கு சென்றபோது அங்கும் அன்போடு பழகியிருக்கிறோம். சொல் செயல் பேச்சு மூச்சு எல்லாமே அவருக்கு தமிழீழம்தான்.
நீண்ட காலமாகவே இயற்கை அவரது
உள்ளுருப்புகள் ஒவ்வொன்றாக சிதைத்து அவரை சித்திவதை செய்துகொண்டிருந்தது. உடல் வலியோடு சேர்ந்து அளவற்ற பேரிழப்பாலும் திட்டமிட்ட இனவழிப்பாலும் கைக்கூடாமல் போன தமிழீழ பெருவலியே அவரை துடிதுடிக்க செய்து கொண்டிருந்தது.
ஐயா சிவாஜிலிங்கம் அவர்களைப் போலவே நேர்மையாக நின்று இறுதிவரை உறுதியோடு போராடி இழந்த தமிழீழத்தை மீட்டெடுப்பது ஒன்றே உலகத் தமிழர்களாகிய நாம் ஐயா அவர்களுக்கு செய்கின்ற உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
இவ்வாறு தமிழ்நாட்டின் தமிழ்ப் பேரரசு கட்சிப் பொதுச் செயலாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் வ.கௌதமன் தனது இரங்கற்; செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
















