இதனை அனுஸ்டிப்பது எமது உயரிய கடமை என அனைத்துலகத் தமிழர் பேரவையின் தலைவர் கனடா வாழ் நிமல் விநாயகமூர்த்தி தெரிவிப்பு
மாவீரர் நினைவேந்தல் நாள் – நவம்பர் 27, 2026
அனைத்துலகத் தமிழர் பேரவை (Federation of Global Tamils)
தமிழீழத் தேசிய வரலாற்றில் நவம்பர் 27ஆம் நாள் ஆழமான நினைவுகளையும் உணர்வுகளையும் தாங்கிய ஒரு நாளாகும். மாவீரர் நினைவேந்தல் நாளில் போரினால் உயிரிழந்தவர்களையும், தமது உறவுகளை இழந்த குடும்பங்களையும், சொல்லொணாத துயரங்களைச் சந்தித்த எமது மக்களையும் நினைவுகூருகின்றோம்.
கடந்த பல தசாப்தங்களாக ஈழத் தமிழ் மக்கள் எதிர்கொண்ட அடக்குமுறைகள், இடப்பெயர்வுகள், உயிரிழப்புகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் எமது சமூகத்தின் வரலாற்றில் ஆழமான வடுக்களை ஏற்படுத்தியுள்ளன. அந்த வரலாற்றை மறந்துவிடாமல், அதிலிருந்து படிப்பினைகளைப் பெற்று, எதிர்காலச் சந்ததியினருக்கு நீதியும் சமத்துவமும் கண்ணியமும் நிறைந்த வாழ்வை உருவாக்குவது எமது தலைமுறையின் பொறுப்பாகும்.
நினைவேந்தலும் வரலாற்றுப் பொறுப்பும்
மாவீரர் நினைவேந்தல் என்பது பல குடும்பங்களின் ஆழமான தனிப்பட்ட துயரங்களுடனும் தமிழ் மக்களின் கூட்டு வரலாற்று நினைவுகளுடனும் தொடர்புடையதாகும். உயிரிழந்த தமது உறவுகளை அமைதியாக நினைவுகூரும் உரிமை ஒவ்வொரு மனிதருக்கும் உரிய அடிப்படை உரிமையாகும். அந்த உரிமை மதிக்கப்படவும் பாதுகாக்கப்படவும் வேண்டும்.
நினைவேந்தல் என்பது கடந்த காலத்தை நினைவுகூர்வதுடன் மட்டும் நின்றுவிடாமல், எதிர்காலத்தைப் பொறுப்புடன் கட்டியெழுப்புவதற்கான சிந்தனையாகவும் அமைய வேண்டும்.
தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம்
ஈழத் தமிழ் மக்களின் தேசிய அடையாளம், பாரம்பரியத் தாயகம், சுயநிர்ணய உரிமை மற்றும் அரசியல் அபிலாசைகள் தொடர்பான விடயங்களுக்கு ஜனநாயக வழிமுறைகளின் ஊடாக நீதியானதும் நிலையானதுமான அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகள் தொடர வேண்டும்.
தமிழ் அரசியல் தலைமைகளும், சிவில் சமூக அமைப்புகளும், புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் தமக்கிடையேயான வேறுபாடுகளைக் கடந்து, மக்களின் நலன்களை முன்னிறுத்தி, பொதுவான இலக்குகளின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.
சர்வதேச சமூகத்துடனான உறவுகளை வலுப்படுத்தி, மனித உரிமைகள், நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் எமது மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும்.
தாயகத்தைக் கட்டியெழுப்புதல் எமது கூட்டுப் பொறுப்பு
போரின் தாக்கங்களிலிருந்து இன்னமும் முழுமையாக மீளாத எமது தாயக மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்துவது மிக முக்கியமான பணியாகும்.
போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் மற்றும் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான நடைமுறைச் செயற்த்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்முனைவு, பொருளாதார மேம்பாடு, சமூக நலன் மற்றும் இளைய தலைமுறையின் ஆளுமை விருத்தி ஆகிய துறைகளில் உலகத் தமிழர்களின் அறிவையும் அனுபவத்தையும் வளங்களையும் ஒருங்கிணைக்க வேண்டியுள்ளது.
அரசியல் உரிமைகளுக்கான ஜனநாயக முயற்சிகளும், தாயகத்தின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுக்கான செயற்பாடுகளும் ஒன்றுக்கொன்று துணையாக அமைய வேண்டும்.
உலகத் தமிழர்களின் ஒற்றுமையும் எதிர்காலமும்
உலகெங்கும் வாழும் தமிழர்கள் தமது மொழி, பண்பாடு, வரலாறு மற்றும் தேசிய அடையாளத்தைப் பாதுகாப்பதுடன், தாயக மக்களுடனான உறவையும் வலுப்படுத்த வேண்டும்.
எமது இளைய தலைமுறையினருக்கு வரலாற்றை எடுத்துச் செல்வதோடு, அறிவாற்றல், தலைமைத்துவம், மனிதநேயம், ஜனநாயகப் பண்புகள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றையும் வளர்த்தெடுக்க வேண்டும்.
அனைத்துலகத் தமிழர் பேரவை, உலகத் தமிழர்களின் ஒற்றுமையை வலுப்படுத்தி, தாயகத்திற்கும் புலம்பெயர் சமூகத்திற்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தி, அகிம்சை மற்றும் ஜனநாயக வழிமுறைகளின் ஊடாகத் தமிழ் மக்களின் உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதில் உறுதியாகச் செயற்படும்.
இம்மாவீரர் நினைவேந்தல் நாளில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூர்ந்து, அவர்களது குடும்பங்களின் துயரங்களில் பங்கெடுத்துக்கொள்வதுடன், இனிவரும் தலைமுறையினர் அச்சமின்றி, உரிமையுடன், கண்ணியமாகவும் அமைதியாகவும் வாழக்கூடிய எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப உறுதியேற்போம்.
வரலாற்றை நினைவில் கொள்வோம்!
ஒற்றுமையை வலுப்படுத்துவோம்!
உரிமைகளையும் நீதியையும் நிலைநாட்டுவோம்!
வளமான தமிழர் சமூகத்தைக் கட்டியெழுப்புவோம்!
மேற்கண்டவாறு அனைத்துலகத் தமிழர் பேரவையின் தலைவர் கனடா வாழ் நிமல் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்
நவம்பர் 27, 2026
www.tamilfederation.org
















