சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன்
கடந்த வாரம் சமூக ஊடகங்களில் ஒரு கேலிச்சித்திரம்!
இலங்கையின் பல்பொருள் அங்காடி ஒன்றில் நடுத்தர வயதுடைய ஒருவர் -“இங்கு நீதி, நேர்மை, சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் கிடைக்குமா“?
“நீங்கள் இலங்கையர் தானே! உங்களிடம் தேசிய அடையாள அட்டை உள்ளதா? இவையெல்லாம் எமது நாட்டில் கிடைக்காது, பாவனைக்கு உதவாத பொருட்கள் என்று உங்களுக்குத் தெரியாதா?“
மிகப்பெரிய விஷயங்களை தமக்கே உரிய பாணியில் சுருக்கமாக நறுக்கென்று சொல்வது கேலிச் சித்திரங்களை வரைபவர்களின் கைவந்த கலை.
ஆனால் இதில் மிகவும் ஆழமான கருத்து பொதிந்திருந்தது. உண்மை நிலவரத்தையே அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
இலங்கையில் தமிழ் இளைஞர்களைச் சித்திரவதைக்கும் பாலியல் வல்லுறவுக்கும் பாதுகாப்புப் படையினர் உட்படுத்துவதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
நினைவேந்தல் நிகழ்வுகள், அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றல் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுதல் போன்றவற்றில் ஈடுபடும் தமிழ் இளைஞர் யுவதிகளை இலங்கை காவல்துறையும் இராணுவமும் கடத்தி, சித்திரவதை செய்து பாலியல் பலாத்காரம் செய்து வருவதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்குமான செயற்திட்டம் ஐ டி ஜே பி தனது ஆய்வறிக்கையில் கூறியுள்ளது.
இந்த அறிக்கை ஜெனிவாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் பேரவையில் செப்டம்பர் மாத அமர்வில் வெளியிடப்பட்டது.
“ஜெனீவாவில் இலங்கையைப் பற்றி விவாதிக்கும் போது, பாதுகாப்பு படையினரின் தொடர்ச்சியான சித்திரவதைகள் சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சிநிரலில் முதன்மை பெறல் வேண்டும் – காணாமல் போனவர்களின் குடும்பங்கள் துன்புறுத்தப்படுவதாகச் சொன்னால் மட்டும் போதாது” என்று ஐடிஜேபி இன் நிர்வாக இயக்குனர் யஸ்மின் சூக்கா கூறினார்.
சிறுபான்மை தமிழர்கள் மீது அத்துமீறல்களும் வன்முறைகளும் தொடர்ந்து கட்டவிழ்த்து விடப்படுகிறது, அச்சுறுத்தி பணிய வைக்கும் ஆயுதமாகவும் பாலியல் வல்லுறவுகள் மற்றும் சித்திரவதைகள் பயன்படுத்தப்படுகின்றன என்று அவர்களது அறிக்கை கூறுகிறது.

“இலங்கையில் அமைதியான முறையில் தங்கள் குடிமை உரிமைகளைப் பயன்படுத்தும் சிலர் கொடூரமாகத் தடுத்து வைக்கப்படுகின்றனர், சூடான உலோகக் கம்பிகள் மற்றும் சிகரெட்டுகளால் சூடுவைக்கப்படுகின்றனர் பெற்றோலில் நனைத்த பொலிதீன் பைகளுக்குள் முகத்தை திணித்து மூச்சுத் திணறடிக்க செய்யப்படுகின்றனர். பின்னர் பாதுகாப்புப் படையினரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்”, என்று சுட்டிக்காட்டுகிறார் யாஸ்மின் சூக்கா.
இது தொடர்பில் ஐ டி ஜே பியின் சர்வதேச விசாரணையாளர்கள், தற்போது இங்கிலாந்தில் உள்ள 15 தமிழர்களிடமிருந்து விரிவான அறிக்கைகளைப் பதிவு செய்தனர்.
அவர்கள் 2019 நவம்பரில் கோட்டாபய ராஜபக்சே ஆட்சிக்கு வந்த பின்னர் கடத்தப்பட்டு சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளானவர்கள்.
இதில் அதிகமானவர்கள் இந்த ஆண்டு நிகழ்ந்த பொத்துவில் முதல் பொலிகண்டி வரை (P2P)போராட்டத்தில் பங்கேற்றவர்கள். மேலும் சிலர் இறந்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் மற்றும் காணாமல் போனவர்களுக்கான போராட்டங்களில் பங்கேற்றவர்கள். இன்னும் பலர் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு தன்னார்வலர்களாக பணியாற்றியவர்கள்.வெள்ளை வான்களில் தாங்கள் கடத்தப்பட்டதாக அதில்ஆறு பேர் கூறினார்கள்.
இவ்வகையான கைது மற்றும் கடத்தல்களை படையினர் பல தசாப்தங்களாக பயன்படுத்தி வந்துள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது. அவர்கள் சித்திரவதைக்கென விசேடமாக தயாரான அறைகளில் முழங்காலில் பெரும்பாலும் உள்ளாடைகளுடன் மண்டியிட வைக்கப்பட்டு கொடூரமான சித்திரவதைகளுக்கு மீண்டும் மீண்டும் உள்ளாக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஏறக்குறைய அனைவரும் இனவெறி வார்த்தைகளால் ஏசப்பட்டு உளரீதியான பாதிப்புகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில் பாலியல் வல்லுறவுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் காயங்களுடன் இரத்தம் சொட்டச் சொட்ட தரையில் இருட்டில் நிர்வாணமாக வைக்கப்பட்டனர். அவர்களின் உள்ளாடைகள் மட்டுமே இரத்தத்தையும் விந்தணுக்களையும் துடைக்க எஞ்சின என்று மிகவும் கவலையளிக்கும் வகையிலான விடயங்கள் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
பயங்கரவாத தடுப்பு புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்ட இரண்டு நபர்கள் தாம் மலவாசல் மூலமான பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானதாகவும் உலோகக் கம்பியை மலவாசலில் புகுத்தி கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.

அரச உத்தியோகத்தினர், படையினர், சிறை அதிகாரிகள் என பல தரப்பினருக்கு பெருந்தொகையான பணத்தை லஞ்சமாகக் கொடுத்தே இவர்கள் சிறையிலிருந்து வெளியே எடுக்கப்பட்டனர் என்று சாட்சிகள் தரப்பில் தம்மிடம் தெரிவிக்கப்பட்டதாக ஐடிஜேபி இன் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எல்லா சந்தர்ப்பங்களிலும் குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளின் விடுதலைக்காக லஞ்சம் கொடுத்தன. விசாரணை செய்யப்பட்டவர்கள் பல வாரங்களாக மலைகளைக் கடந்து நடந்து வாகனங்களின் பின்புறம் மறைந்திருந்து ஆங்கில கால்வாயினை ரப்பர் வள்ளங்களில் கடந்து அசாதாரணமான பயணங்களை மேற்கொண்டு இங்கிலாந்து வந்துள்ளனர்“.
பிரிட்டனுக்கு வந்த பிறகும் கூட வெளிப்படையான உடற்காயங்களுடனும் மாறாத மன வடுக்களுடனும் இருந்த ஆறு பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர் என்று அதிர்ச்சியளிக்கும் வகையிலிருக்கும் அந்த அறிக்கை கூறுகிறது.
சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகளைச் செய்தவர்களில் மோசமான பயங்கரவாத தடுப்பு பொலிஸ் பிரிவுடன் சீருடையில் இருந்த இலங்கை இராணுவ அதிகாரிகளும் அடங்குவர் என்று சாட்சியம் அளித்தவர்கள் மூலம் தமக்கு தெரியவந்ததாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் இருவர் கடந்த ஆண்டு எந்த காவல் நிலையத்தில் தாங்கள் சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்பதை நினைவில் வைத்திருக்கின்றனர். அதில் ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையத்தின் பின்புறத்தில் உள்ள கட்டிடங்களின் வரைபடத்தைக் கூட வரைந்து காட்டினார்.
“இது முறையான தண்டனையின்மையின் அசிங்கமான முகம். 1987-90இல் ஜேவிபி மீதான வன்முறை மற்றும் கடந்த நான்கு தசாப்தங்களாக தமிழர்களுக்கு எதிரான அரச வன்முறைக்கு பொறுப்பானவர்கள் மீது அடுத்தடுத்த அரசாங்கங்கள் வழக்குத் தொடர தவறியதால் அந்த குற்றவாளிகள் பொறுப்பைத் தவிர்த்து காவல்துறை மற்றும் இராணுவத்தின் உயர் பதவிகளில் இலகுவாய் அமர முடிந்தது. இப்போது இந்த கட்டமைப்பு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டின் மூலம் தன்னை சீர்திருத்துவதாக எதிர்பார்ப்பது நகைப்புக்குரியது” என்று திருமதி சூக்கா கருத்து தெரிவித்தார்.
கொடூரமான குற்றங்களுக்கு இலங்கை அரசு தண்டனை வழங்குவதில்லை. குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை பொறுப்புக்கூறல் இல்லாமல் கொடூர குற்றங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க எந்த ஊக்கமும் கிடைக்க போவது இல்லை. சர்வதேச சமூகம் அனைத்து சர்வதேச பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும் காரணம் அவை பயனளிக்க போவதில்லை என்று யாஸ்மின் சூக்கா தனது அறிக்கையில் சாடியுள்ளார்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் பல வருடங்களாக மாறியது பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை மட்டுமே. அவர்களில் சிலர் முன்னாள் புலிகள் அல்லது முக்கிய மனித உரிமை ஆர்வலர்கள் என்று ஐடிஜேபிகூறுகிறது. ஜே.வி.பி காலத்தில் பாதிக்கப்பட்டவர்களைப் போலவே கடைக்காரர்கள், மின்தொழிலாளர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் மாணவர்களே இவர்களின் பார்வைக்கு ஆளாகின்றனர்.
இதனிடையே, இலங்கை பொலிசாரின் மோசமான நடவடிக்கை காரணமாக குறைந்தபட்சம் நான்கு தமிழர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாதத்தின் முதல் வாரத்தில் கிழக்கே மட்டக்களப்பு மற்றும் அப்பாறை மாவட்டங்களில் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஷாகிர் கான் ஃபரூக் எனும் செய்தியாளர் தனது சக செய்தியாளருக்காக வீட்டு வாசலில் காத்திருந்த போது அவ்வழியே வந்த பொலிசார் அவர் முக கவசம் அணியவில்லை என்று கூறி சுமார் நான்கு லட்சம் ரூபாய் பெறுமதியான அவரது கேமராவை சேதப்படுத்தியதுடன் அவரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். அவர் பொலிசாரால் அடித்து இழுத்துச் செல்லப்படும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதே போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பெற்றோல் நிலையத்தில் தமது இருசக்கர வாகனத்திற்கு பெற்றோல் நிரப்பிவிட்டு வீட்டிற்கு வந்துகொண்டிருந்த மகேந்திரன் சகோதரர்கள் பொலாரின் துப்பாக்கியால் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டு கண்ணில் அறுவை சிகிச்சை செய்த பிறகு தையல்களுடன் மருத்துவமனையில் உள்ளனர்.
கடந்த ஞாயிறு ( செப்டம்பர் 5) அன்று இச்சம்பவம் இடம்பெற்றது. ஊரடங்கு காலத்தில் அவர் வாகனத்திற்கு பெற்றோல் நிரப்பச் சென்றது தொடர்பில் பொலிசார் மிகுந்த கோபமடைந்து அவர்களைத் தாக்கியதாக உள்ளூர்வாசிகள் கூறியுள்ளனர்.

இன்னும் கட்டுப்படுத்த முடியாத கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ள இராணுவத்தினரும் அவர்களுடன் இணைந்து செயற்படும் பொலிசாரும் தமது அதிகார வரம்புகள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான வகையில் நடந்து கொள்கின்றனர் எனும் குற்றச்சாட்டிற்கு தொடர்ந்து ஆளாகி வருகின்றனர்.
அதே நாளன்று கொக்குவில் பகுதியைச் சேர்ந்த ஜோசஃப் மதன் என்பவரும் தனிப்பிட்ட பிரச்சனை ஒன்றின் காரணமாக பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலியில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
மனித உரிமைகள் மீறல் மற்றும் கடும் தவறுகளைச் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தாமல் இருப்பது, பாதுகாப்பு படையினரை உயர் பதவிகளில் அமர்த்துவது போன்ற பல விடயங்கள் தொடர்பில் பன்னாட்டின் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் இலங்கை அரசு தொடர்ந்து இப்படியான செயல்களில் ஈடுபட்டு வருவது பல நெருக்கடிகளை ஏற்படுத்தி ஜி எஸ் பி+ போன்ற வரிச் சலுகைகளை இழக்கச் செய்யும்.
இலங்கை குறித்த விவாதம் மீண்டும் ஐ நா மனித உரிமைகள் பேரவையில் வரவுள்ள நிலையில் ஐ டி ஜே பியின் ஆய்வறிக்கை வந்துள்ளது.
உணவுத் தட்டுப்பாடு, பற்றாக்குறை, விண்ணைத் தொடும் விலை ஆகியவற்றால் அவதியுறும் நாட்டில், நீதி, நேர்மை, மனித உரிமைகள் என்பவை எட்டாக்கனியும் கானல்நீருமாக மட்டுமே இருக்கிறது.






















