‘கல்’ பூமியில் இயற்கையாகக் கிடைக்கும் பாறை, கனிமங்களின் திடமான கலவை. கட்டுமானப் பணிகள், சிலைகள், ஆபரணக் கற்கள் மற்றும் பல பயன்பாடுகளுக்கு உதவுகிறது. இலக்கியங்களில் கல் என்பது பாறை, மலை, நடுகல், வெண்கல் மற்றும் மணி போன்றவற்றை குறிக்கும் சொல்லாக பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக உடைக்கப்பட்ட சிறு கற்கள், பாறைகள், கட்டுமானத்திற்கு பயன்படும் கருங்கல், செங்கல் ஆகியவை கல் எனப்படும்.
உலகம் கல்லால் ஆனது என்பதை சங்க இலக்கியத்திற்குச் சற்றுப் பிந்தைய காலமான புறப்பொருள் வெண்பாமாலை என்ற நூலில் வரும் புகழ்பெற்ற வரிகள்: “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த குடி“. இது தமிழ்க்குடியின் தொன்மையைப் பாறைக்கல் உருவான காலத்தோடு ஒப்பிடுகிறது.
“கல்” என்னும் வேர்ச்சொல்லின் பதம், கற்றல் எனும் தொழிற்பெயராகும். வேர்ச்சொல் என்றால் அது, ஒரு சொல்லின் அடிப்படை வடிவம், அதிலிருந்து வினைமுற்று (கற்றான்), வினையெச்சம் (கற்று), பெயரெச்சம் (கற்ற) போன்ற பல வடிவங்களை உருவாக்க முடியும்.
கல்லென்றான் அறிஞன். அதைக் கேட்டதும் மாணவன் புத்தகம் தன்னில் கருத்துவைத்தான்.
கல்வி மனித வாழ்வுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. எனவே, ஒரு குழந்தை பிறந்தவுடனேயே, நல்ல பாடசாலையில் அப்பிள்ளையைப் படிக்க வைக்கப் பெற்றோர், பாடசாலைப் பதிவுகளை ஆரம்பிக்கின்றனர்.
“கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக“ (குறள். 391)
கல்வியைக் கற்க, நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பின்னர், கற்ற கல்விக்குத் தக்கவாறு நல்ல நெறியில் நிற்க வேண்டும் என எமக்கு வழிகாட்டியுள்ளார் திருவள்ளுவர். அவர் கல்விக்கு முக்கியம் தந்து, கல்வி எனும் ஒரு தனி அதிகாரத்தையே எமக்குத் தந்து எம்மை வாழ்விக்கின்றார். மேலும் பற்பல இடங்களில், கல்வியின் முக்கியம் அறியக்கூடிய வகையில் பல குறள்களை எமக்குத் தந்துள்ளார்.
அதிலும் “கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்“ (குறள். 2)
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால்என்ன பயன்? ஒன்றுமில்லை எனக் கூறுகிறார் திருவள்ளுவர்.
கற்றல் பற்றிய சங்க இலக்கியப் பாடல்கள்
கல்வி (கற்றல்) என்ற பொருளில் ‘கல்‘ என்ற வேர்ச்சொல்லின் வினை வடிவமான ‘கற்றல்‘ அல்லது ‘கல்வி‘ பற்றிய கருத்துக்கள் சங்க இலக்கியத்தில் ஆழமாகப் பதிவாகியுள்ளன.
புறநானூறு (பாடல் 183): ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கல்வியின் சிறப்பைப் பாடியது.”உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே“பொருள்: ஆசிரியருக்குத் துன்பம் வரும்போது உதவியும், மிகுந்த பொருள் கொடுத்தும், அவமதிப்பு கொள்ளாமல் பணிந்து நின்று கற்றல் ஒருவனுக்கு மிகச் சிறந்தது.
கல்லைக் கண்டான் ஒருவன், அந்தச் சிற்பி, உளியைத் தனது கரம் எடுத்தான்.
சிற்பம் என்பது, செதுக்கப்பட்டு, முப்பரிமாண வடிவம் கொடுக்கப்பட்ட கற்சிலைகள். இவற்றை மனிதன் உளி கொண்டு, சிலையாக வடிக்கிறான். கல்லைப் பார்க்கும் சிற்பியின் கற்பனையில் அக்கல் ஒரு சிற்பமாக உருவாகும். அக்கல்லைத் தன் கற்பனையில் ஒரு சிலையாகக் காண்பான். அக்கல் அவனைச் சென்று சேர, அதனைச் செதுக்கத் தொடங்கி விடுவான். காலங்கள் செல்வழித்து, அவன் சிலையைச் செய்து முடித்து விடுவான். பலரின் பாராட்டுடன், அவனது, ஆற்றலைத் தானே மெச்சி, தன் கற்பனை வளத்துக்கு உரமளித்து, நற்சிலையைச் செய்து, உளம் மகிழ்வான்.
சங்க இலக்கியத்தில் கற்சிலை
சங்க இலக்கியத்தில் ‘கல்‘ என்ற சொல் எப்படி வருகிறது? இங்கு கல், ‘மலை‘, ‘பாறை‘, ‘கல்வி‘ மற்றும் ‘நடுகல்‘ போன்ற பல்வேறு பொருள்களில் மிகச்சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கல் எனும் சொல் பயின்று வரும் சில முக்கியப் பாடல்கள் மற்றும் அதன் விளக்கங்களும்.
- மலை அல்லது பாறை என்ற பொருளில்சங்க இலக்கியத்தில், குறிப்பாக குறிஞ்சித் திணைப் பாடல்களில், ‘கல்‘ என்பது மலையைக் குறிக்கப் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது. புறநானூறு (பாடல் 192): கணியன் பூங்குன்றனார் பாடிய உலகப்புகழ் பெற்ற இப்பாடலில் “கல்” எனும் சொல் பாறையை உருட்டும் நீரின் ஓசையை விவரிக்கிறது.”மின்னொடு வானம் தண் துளி தலைஇ, ஆனாதுகல் பொருது இரங்கும் அல்லல் பேர் யாற்று“
இதன் பொருள்: மின்னலுடன் கூடிய மேகம் பெய்த மழையால், விடாது பாறைகளில் மோதி ஒலிக்கும் பெரிய ஆற்றின் வெள்ளம் போன்றது வாழ்க்கை.
குறுந்தொகை (பாடல் 1):”கல் என வரும் … அருவி“மலைகளில் இருந்து “கல்” என்ற ஒலியுடன் விழும் அருவிகளைக் குறிக்க இச்சொல் ஓசை நயமாகவும் பயன்படுத்தப்பட்டது.
குறிஞ்சிப் பாடல்களில் கல் என்பது மலையையும், பாலைப் பாடல்களில் வெப்பத்தால் வெடித்த பாறைகளையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.
- நடுகல் (வீரக்கல்)
மரபில் சங்க காலத்தில் போரில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு அவர்கள் நினைவாகக் கற்கள் நடுகற்கள் நடப்பட்டன. இது ‘நடுகல்‘ என்று அழைக்கப்பட்டது. நடு + கல் (நட்ட கல், நடுகின்ற கல், நடும் கல்) என முக்காலமும் மறைந்து வருவதால் வினைத்தொகையாக வரும்.
புறநானூறு (பாடல் 232):”பரலுடை மருங்கின் பதுக்கைச் சேர்த்தமரல் வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடுஅணிமயிற் பீலி சூட்டிப் பெயர் பொறித்துஇனி நட்டனரே கல்லும்“பொருள்: வீரனின் பெயரைப் பொறித்து, பீலி சூட்டி அவனுக்கு நடுகல் நட்ட செய்தியை இப்பாடல் விவரிக்கிறது.💡 கூடுதல் சிறப்பம்சங்கள்கல் தோன்றி மண் தோன்றாக் காலம்: திணைப் பாகுபாடு: குறிஞ்சிப் பாடல்களில் கல் என்பது மலையையும், பாலைப் பாடல்களில் வெப்பத்தால் வெடித்த பாறைகளையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.
கல்லென்றான் மனிதன், அந்தக் கடவுள் இருப்பிடம் கண்டனனே!
கல்லினுள் தேரைக்கும்
கருப்பை உயிர்க்கும்
புல்லுணவே தந்து
போற்றும் நம் நாதன்
சத்வ குண போதன்
தபோவனம் ஞானானந்தகிரி சுவாமிகளிடம் ஒரு அன்பர் சந்தேகம் ஒன்றைக் கேட்டார்.
கல்லினுள் இருக்கும் தேரைக்கும் உணவு கொடுத்து அதன் உயிரைக் காப்பாற்றும் பரம தயாளன் என்று கடவுளைப் போற்றுகிறோம்., ஆனால், வாழ்நாள் முழுவதும் உலக இன்பத்தைக் கண்டு களிக்காமல், உலகமே இன்னதென்று தெரியாமல் கல்லுக்குள் சிறைப்பட்டுக் கிடக்கும் தேரை உயிர் வாழ்வதில் என்ன பொருள் இருக்கிறது?
தேரை இருப்பதால் அந்தக் கல்லும் பயன்படாமல், தேரையும் பழிச்சொல்லுக்கு ஆளாகிறது. இப்படிப்பட்ட தேரைக்கு உணவளித்து, உயிர் வாழ வைப்பது எப்படி தயாள குணமாகும்? எனக் கேட்டான்.
ஞானானந்தகிரி சுவாமிகள் அளித்த விளக்கம்: ஒருவன் ஏதோ குற்றம் இழைத்து விடுகிறான். அவனை அரசாங்கம் சிறையில் அடைக்கிறது. சிறையில் அவன் அடைத்து வைக்கப்படுகிறான். ஆனால், அவனுக்கு உணவு அளிக்க அரசாங்கம் தவறுவதில்லை. ஏனென்றால், அவனுக்கு அளிக்கப்பட்டது சிறைத் தண்டனைதான். தவிர மரண தண்டனையல்ல. அந்தச் சிறைத்தண்டனையை அவன் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக அவனுக்கு உணவு அளித்து உயிருடன் வைத்திருப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகிறது. கரும வினையினால் கல்லினுள் அடைபட்டுக் கிடக்கும் தேரையின் நிலையும் இதுதான். வினைப் பயனை அனுபவித்து, விமோசனம் பெற வேண்டும் என்கிற கருணையினால், அது எப்படியாவது உணவைப் பெற்று உயிர் வாழச் செய்கிறார் கடவுள் . சுவாமியின் விளக்கம் அனைவரையும் மகிழ்வித்தது.
கல்லென்றான் குரல் கொடுத்தான் கொத்தன். மனையில் பதிக்கக் கரமெடுத்தான்.
கட்டுமானத் துறையில் கல் என்பது ஒரு மிக முக்கியமான இயற்கை மூலப்பொருளாகப் பயன்படுகிறது. பழங்காலக் கட்டிடங்கள் முதல் நவீன அலங்காரச் சுவர் வரை கல் பல்வேறு முறைகளில் பயன்படுத்தப்படுகிறது.
கல் கட்டுமானத்தின் வகைகள் :
கல் கட்டுமானத்தை அதன் அடுக்கும் முறையைப் பொறுத்து இரண்டு முக்கிய வகைகளாகப் பிரிக்கலாம்:
- செதுக்கப்படாத கல் கட்டுமானம்.
இயற்கையாகக் கிடைக்கும் சீரற்ற கற்களைப் பயன்படுத்துதல்.கற்களுக்கிடையேயான இடைவெளியைச் சிமெண்ட் அல்லது சாந்து கொண்டு நிரப்புதல்.சுற்றுச்சுவர்கள் மற்றும் அடித்தளங்களுக்கு இது ஏற்றது.
- செதுக்கப்பட்ட கல் கட்டுமானம்.
கற்களைச் சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ சீராகச் செதுக்கிப் பயன்படுத்துதல்.கற்களுக்கிடையேயான பிணைப்பு மிகவும் மெல்லியதாகவும் உறுதியாகவும் இருக்கும்.அரண்மனைகள், கோவில்கள் மற்றும் பெரிய கட்டிடங்களுக்கு இது பயன்படுத்தப்படுகிறது.
கட்டுமானத்தில் கற்களின் பயன்கள அடித்தளம் :
கட்டிடத்தின் முழு எடையையும் தாங்குவதற்கு கருங்கற்கள் அடித்தளமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
தரைத்தளம் :
மார்பிள் , கிரானைட் மற்றும் கோட்டா கற்கள் தரை அழகிற்கும் குளிர்ச்சிக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
அலங்காரச் சுவர்கள் :
நவீன வீடுகளில் வெளிப்புறச் சுவர்களில் மெல்லிய கல் பலகைகளை ஒட்டி அழகுபடுத்துகின்றனர்.
கல் என்றான், நகை வியாபாரி, இரத்தினக் கல் கொண்டு, நகை செய்தான்.
கல்லை அழகாக நகையினுட் புகுத்தி, அழகான நகை செய்து, மிக்க விலைக்கு விற்று. அதிக லாபம் பெற்று மகிழ்ந்தான் மனிதன்.
இரத்தினம், மரகதம், முத்து போன்ற விலைமதிப்பற்ற கற்கள் அழகு தரும் நகைகளில், பக்குவமாக அமர்ந்து அந்த நகைக்கு அழகு கூட்டும்.
சங்க இலக்கியங்களில் நவரத்தினக் கற்கள்
நவரத்தினங்கள் மற்றும் பல்வேறு விலைமதிப்பற்ற நகைக்கற்கள் பயன்படுத்தப்பட்டதற்கான பல சான்றுகள் உள்ளன. அக்காலத்தில் அலங்காரப் பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் தயாரிக்கும் தொழில் மிகவும் செழிப்பாக இருந்ததை இவை உணர்த்துகின்றன
தமிழ் இலக்கியத்தில்: கல்/துவர் என்பது சில நேரங்களில் காவி நிறத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது, மேலும் இது வைகல் (விடியல்), அல்கல் (இரவு) போன்ற பொழுதுகளைக் குறிக்கும் சொல்லாகவும் வருகிறது.
சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் சில முக்கிய நகைக்கற்கள்:
- கருமாணிக்கம்
- நீலமணி
- செவ்வந்திக்கல்
- மரகதம்
- வைடூரியம்
- நீலம்
- பச்சை
- மங்கிய சிவப்புக்கல்
- கந்தகக் கல் (கந்தகக் கன்மகி)
இக்கற்கள் ஆபரணங்களில் பதிக்கப்பட்டு, சங்க கால மக்களின் கலைநயத்தையும் செல்வச் செழிப்பையும் வெளிப்படுத்தின.
ஆண் பெண், அலிக் கற்கள்.
கற்களில், ஆண் கல், பெண் கல், அலிக்கல் என கல் உண்டு.
ஆண் கல்: ஆண் கல்லில், ஆண் தெய்வச் சிலைகள் செய்ய உகந்தது. மூலை, தூண் என்பன ஆண் கல்லில் வைப்பார்கள். அதாவது ஆண் கல்லைப் பலம் தாங்கும் இடங்களில் வைப்பார்கள். ஊன்றிக் கால் தாங்கும் கால்வரி, என்னும் இடத்தில், பெரும் கோபுரங்களைத் தாங்கும் இடங்களில், ஆண் கல்லை வைத்துக் கட்டுவார்கள்.
பெண் கல்: நிலக்கால், பெண் கல்லில் வைப்பார்கள். பெண் தெய்வச் சிலைகள் செய்ய உகந்தது.
அலிக் கல்: சில குறிப்பிட்ட தெய்வ வடிவங்கள், தூண்கள், அல்லது நிலைக்கதவு போன்ற உறுதியான பாகங்கள் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. சிற்பக் கலை மரபில், ஆண்–பெண் தன்மையற்ற, வலிமையான சிலைகள் மற்றும் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு வகை கல் அலிக் கல் ஆகும்
கல் என்னும் சொல்லில், பலவகை கண்டோம். கல்வியினால், கற்றலினால், தொடர்ந்து கற்போம்.
Dr. புட்பா கிறிட்டி, 647 703 5538, pushpachristy@gmail.com
















