(24-10-2021)
கிளிநொச்சியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் முற்றுகையிடப்பட்டு பல லீற்றர் கசிப்பு, கோடா, உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் கட்டைக்காடு பகுதியில் குளத்தின் கரையோர பகுதியில் இரகசியமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையமே இன்று அதிகாலை 2.00 மணியளவில் முற்றுகையிடப்பட்டுள்ளது.
குறித்த நிலையத்தை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்த போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
33 வயதுடைய இரண்டு குழந்தையின் தந்தையான பெரிய குளம் கட்டைக்காட்டைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் 14 பரல்களில் கசிப்பு உற்பத்திக்குத் தயாரான நிலையில் காணப்பட்ட 1620 லீற்றர் கோடாவையும் வடித்த நிலையில் காணப்பட்ட 120 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்தும் உபகரணங்கள் என்பவற்றை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மீட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர் கிளிநொச்சி மாவட்டம் முழுவதும் பல பகுதிகளுக்கு கசிப்பை விநியோகித்து வந்தவர் என பொலிஸ் அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரையும் மீட்கப்பட்ட கோடா, கசிப்பு, உபகரணங்கள் என்பவற்றையும் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்க உள்ளார்கள்.