-நக்கீரன்
கோலாலம்பூர், மார்ச் 02:
மலேசியாவின் வெள்ளி மாநிலம் ஈப்போவில் பிறந்த தமிழீழ தந்தை செல்வா தலைமையில் இலங்கை மண்ணில் ஈழத் தழிழர்களுக்காக ஜனநாயக முறையில் நடைபெற்ற உரிமைப்போர் ஒரு தலைமுறைக் காலத்திற்கு மேலாக நீடித்தும் பயனற்றுப் போன நிலையில், அங்கு ஆயுத கலாச்சாரமும் கொரில்லா முறையிலான போராட்டமும் ஒருசேர தலைதூக்கத் தொடங்கின.
எந்தெந்த நாடுகளில், அரசியலில் மதம் கலந்துள்ளதோ அந்தந்த நாடுகளில் அரசியல் நிலைத்தன்மையும் நிலைக்காது; இன இணக்கமும் இருக்காது.
ஆசியக் கண்டத்தைப் பொறுத்தவரை இலங்கை, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், மியன்மார் போன்ற நாடுகள் இதற்கு தக்க சான்றாகும். தற்பொழுது, வங்க தேசமும் இந்தியாவும் அந்த நிலையை எட்டிவருகின்றன.
பௌத்த மதவாதம், பிக்குகளின் ஆதிக்கத்துடன் சிங்கள மேலாதிக்கமும் கைகோத்து இலங்கைஅரசியலை இடைவிடாமல் ஆட்டிப்படைப்பதால் இலங்கைத் தீவு நாட்டில், இனங்களுக்கு இடையேயான பூசல் நீங்கி சமத்துவமும் சமாதானமும் மலர்வதற்கான வாய்ப்பு ஏற்படவே இல்லை; இனியாவது ஏற்படுமா என்பதும் கண்ணுக்கெட்டிய தூரம்வரை தென்படவில்லை.
இதனால்தான், தந்தை செல்வா மேற்கொண்ட ஜனநாயக வழியிலான அமைதிவழிப் போராட்டத்திற்கு மதிப்பில்லாமல் போனது. இந்தக் கட்டத்தில்தான் ஈழத் தமிழ் மக்களின் உரிமை வேட்கை அடுத்தக் கட்டத்தை எட்டியது; ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தமிழீழ இளைஞர்களைத் தள்ளியது.
இது, ஏறக்குறைய உள்நாட்டுப் போருக்கும் ஜனநாயகப் போராட்டத்திற்கும் இடைப்பட்ட காலமாகும்.
இந்தக் காலத்தில், சிங்கள காவல் படையினரால் அழைத்துச் செல்லப்படும் தமிழ் இளைஞர்கள் காணாமல் போவார்கள்; அல்லது குதிகால் நரம்பு வெட்டப்பட்டு வருவார்கள்.
இரவு பகல் என பாராமல் எந்தத் தருணத்திலும் எந்தக் காரணமும் தெரிவிக்கப்படாமல் வகைதொகையின்றி கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும் இளைஞர்களை, அவர்களின் குடும்பத்தினர் காண்பது அநேகமாக அதுதான் கடைசித் தருணமாக இருக்கும்.
சிங்கள காவல் படை அல்லது இராணுவ அதிகாரிகளால் வளைக்கப்படும் தமிழ் இளைஞர்களின் எதிர்காலமும் பாதுகாப்பும் அந்த அளவுக்கு நிச்சயமற்று இருந்தன.
இப்படியான சூழலில்தான் இலங்கை அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சராகவும் இலங்கை அரசத் தலைவர் ரணசிங்க பிரேமதாசாவின் நெருங்கி ய சகாவாக இருந்தவருமான ரஞ்சன் விஜயரத்னே தொலைவில் இருந்து இயக்கப்பட்ட வாகன வெடிகுண்டு வெடிப்புக்கு ஆளாகி இறந்தார்.
அத்தீவு நாட்டின் தலைநகரம் கொழும்பில் இடம்பெற்ற முதல் கார் குண்டு வெடிப்பு இது; இந்தச் சம்பவம் இடம்பெற்ற நாள், 1991-ஆம் ஆண்டில் இதே மார்ச்-02ஆம் நாள்.
விடுதலைப் புலிகளின் கன்னி முயற்சி இது; சொல்லி அடித்த நிகழ்ச்சியும்கூட!.
இலட்சக் கணக்கான தமிழீழ மக்கள் தங்களின் இன்னுயிரை ஈகம் செய்ததற்கான கணக்கை நேர் செய்யும் நாள், எந்நாள்???






















