(மன்னார் நிருபர்)
(01-04-2022)
நுகேகொடை – மிரிஹான – பெங்கிரிவத்தை பகுதியில் நேற்று(31) வியாழக்கிழமை இரவு முதல் இன்று (1) வெள்ளிக்கிழமை அதிகாலை வரை ஜனாதிபதியின் இல்லத்திற்குச் செல்லும் வீதியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
நேற்றிரவு நுகேகொடை − மிரிஹான பகுதியிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டை பல மணி நேரமாக ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்துள்ளனர்.
பல ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் ஒன்றிணைந்து போராட்டத்தை நடத்திய நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பாதுகாப்பு பிரிவினர் தடியடி பிரயோகம், கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் நடத்தப்பட்டது.
மேலும், பாதுகாப்பு பிரிவுக்கு சொந்தமான பேருந்து ஒன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்து சேதப்படுத்தினர். ஆர்ப்பாட்டம் காரணமாக பல சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, பாதுகாப்பு பிரிவிற்கும், ஆர்ப்பாட்டக்காரர் களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் பலர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,தொடர்ந்தும் கண்ணீர் புகை பிரயோகம் நடத்தப்பட்டது.
இவ்வாறான சூழ்நிலையில், தொடர்ந்தும் ஆயிரக்கணக்கானோரின் பங்குபற்றுதலுடன் போராட்டம் தொடர்ந்தும் இடம் பெற்றது.
இதற்கமைய, கொழும்பில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்படி கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி, நுகேகொட பொலிஸ் பிரிவுகளில் உடன் அழுலாகும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மீள் அறிவிப்பு வரும் வரையில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை களனி மற்றும் கல்கிசை பொலீஸ் பிரிவுகளிலும் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.இதனால் கொழும்பில் பதற்றமான சூழ் நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன..