நடராசா லோகதயாளன்
தமிழர்கள் பன்னெடுங்காலமாக வழிபட்டுவந்த குருந்தூர்மலை ஆதி சிவன் ஐயனார் கோவிலில் அண்மைய காலமாத்தில் அவர்கள் அங்கு சென்று தமது வழிபாடுகளை செய்வதற்கு தொல்லியல் திணைக்களம் மற்றும் இராணுவம் ஆகியவை பெரும் நெருக்கடிகளை அளித்து வந்தன.
அந்த இடம் ஒரு தொல்லியல் பூமி, அங்கு பௌத்த மத சின்னங்கள் காணப்படுகின்றன என்று கூறி அந்த கோவிலுக்கு செல்லும் பாதைகளை மறித்து அங்கு தமிழ் மக்கள் செல்வது தடுக்கப்பட்டிருந்தது. மேலும் அங்கு ஒரு பௌத்த விகாரையும் நீதிமன்ற உத்தரவையும் மீறி கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீதிமன்ற கட்டளையை மீறி குருந்தூர் மலையில் கட்டடங்களை கட்டியமைக்காக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் முல்லைத்தீவு பொலிஸில் முறைப்பாடு செய்ததற்கு அமைவாகவே நகர்த்தல் பத்திரம் மூலம் நடைபெற்று கொண்டிருந்த குறித்த வழக்கு செவ்வாய்க்கிழமை(8) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கு விசாரணைகளின் பின்னர் சட்டத்தரணி தனஞ்சயன் கருத்து தெரிவிக்கும் போது:
”குருந்தூர்மலை வழக்கானது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிலே விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்டது. கடந்த தவணையிலே பொங்கல் உற்சவம் ஒன்றினை ஆதி ஐயனார் ஆலயத்திலே செய்ய முற்பட்டவேளை தொல்லியல் திணைக்களத்தினாலும், சகோதர மொழி பேசுபவர்களாலும் தடுக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது. அது தொடர்பாக நகர்த்தல் பத்திரம் ஊடாக அந்த விடயத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு நாங்கள் கொண்டுவந்தோம்”.
அது தொடர்பாக பதிலளிப்பதற்காக தொல்லியல் திணைக்களத்திற்கு தவணை வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது தொல்லியல் திணைக்களம், சட்டமா திணைக்களத்தினுடைய அரச சட்டத்தரணி ஊடாக தோன்றியிருந்தார்கள் என்றார் தனஞ்சயன்.
இனி எக்காலத்திலும் தமிழ் மக்களின் வழிபாட்டிற்கு எந்த பாதகமும் ஏற்படுத்தபப்ட மாட்டாது என்று தொல்லியல் திணைக்களம் சார்பில் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. ”அங்கே சைவ மக்கள் பொங்கல் பொங்கி வழிபடதடை செய்யவில்லை என்றும், எதிர்காலத்திலும் அவ்வாறான பொங்கல் நிகழ்வு நடைபெற்றால் அதற்கு பாதகமாக நடக்க மாட்டோம்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது ஆலய பரிபாலனசபை மக்கள் சார்பாகவும், ஊர்மக்கள் சார்பாகவும், முல்லைத்தீவு மாவட்ட சட்டதரணிகள் பலரும், ஜனாதிபதி சட்டத்தரணிகள் உள்ளடங்கலாக பல சிரேஸ்ட சட்டத்தரணிகள் ஆதிசிவன் ஐயனர் ஆலயம் சார்பாக இந்த வழக்கில் முன்னிலையாகியிருந்தனர்.
கடந்த சில வாரங்களிற்கு முன்னர் தமிழ் மக்கள் அங்கு பொங்கல் வைத்து வழிபடச்சென்ற போது அது தடுக்கப்பட்டு, இராணுவம் மற்றும் பொலிசாரால் தமிழ் மக்கள் தாக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் கானொளிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
இது தொடர்பான மேலதிக கட்டளைக்காக இந்த வழக்கானது எதிர்வரும் 31.08.2023 க்கு நியமிக்கப்பட்டிருக்கின்றது.