யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
கடந்த மாதம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்த கோட்டாகோகம கிராமத்தைச் சேர்ந்தவர்களோடு உரையாடிய பொழுது கோத்தாவை அகற்றினால் அடுத்த கட்டம் என்ன? என்று கேட்கப்பட்டது.அவர்களிடம் தெளிவான யதார்த்தமான பதில் எதுவும் இருக்கவில்லை.
இப்போது இருக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும் கோத்தாதான் காரணம் என்று கருதுவது அதாவது பிரச்சினைகளுக்கு ஒரு தனி மனிதனை அல்லது ஒரு குடும்பத்தை பொறுப்பாளியாக்குவது என்பது எங்கிருந்து தொடங்கியது? ஒரு குடும்பம் ராணுவ வெற்றி முழுவதற்கும் உரிமை கோரியபோதே அது தொடங்கியது.வெற்றியின் பங்காளியான சரத் பொன்சேகாவை வெளித்தள்ளிவிட்டு அந்த வெற்றிக்கு ராஜபக்ஷ குடும்பம் மட்டும் உரிமை கோரியபோது அது தொடங்கியது.ராஜபக்சக்கள் யுத்த வெற்றியை ஒரு குடும்பத்தின் சொத்தாக மாற்றினார்கள். அதை தமது தேர்தல் அரசியலுக்கான நிரந்தர முதலீடாகவும் மாற்றினார்கள்.
அது அதன் மெய்யான பொருளில் ஒரு வெற்றியே அல்ல.அது ஓர் இனப்படுகொலை.உலக சமூகமும் அதற்கு பொறுப்பு.ஒரு ஆயுதப் போராட்டத்தை நசுக்குவதற்கு இனப்படுகொலை செய்யலாம் என்ற லைசென்ஸை உலக சமூகம் ராஜபக்சங்களுக்கு வழங்கியது. அதன் விளைவாக கிடைத்ததே அந்த வெற்றி. எனவே அது ஒரு வெற்றியே அல்ல.அதை ஒரு வெற்றியாகக் கொண்டாடிய எல்லாருமே குற்றத்தின் பங்காளிகள்தான். அதை வெற்றியாகக் கருதி வாக்களித்தவர்கள் அனைவருமே குற்றத்தின் பங்காளிகள்தான். முழு உலகமும் தமிழ் மக்கள் சுத்திவளைக்கப்படுவதை ஏதோ ஒருவிதத்தில் ஆதரித்தது. ஐநா பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தது. இந்தியா தலையிடாமல் தவிர்த்தது. தமிழகத்தின் எதிர்ப்பை அப்போதிருந்த தமிழக அரசு மடை மாற்றியது. இவ்வாறாக கடைசிக்கட்டப் போரில் தமிழ் மக்கள் கைவிடப்பட்டதற்கு உலகின் பெரும்பாலான நாடுகள் பொறுப்பு.
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான முதலாவது தீர்மானம் கொண்டுவரப்பட்ட பொழுது அதை எதிர்த்துப் பேசிய கியூபாவின் பிரதிநிதி ஒரு விடயத்தை சுட்டிக்காட்டினார். போரில் வெல்வதற்காக இலங்கை அரசாங்கத்துக்கு அறுபது விகிதத்துக்கும் மேலான ஆயுதங்களை வழங்கிய நாடுகள்தான் இப்பொழுது அதே அரசாங்கத்துக்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முற்படுவதாக அவர் அங்கே கூறினார்.
இவ்வாறு இறுதிக்கட்டப்போரில் ராஜபக்சக்கள் பெற்ற வெற்றி என்பது அதன் அரசியல் பரிமாணத்தில் ஒரு வெற்றி அல்ல.வேண்டுமானால் ராணுவப் பரிமாணத்தில் அதை வெற்றியாகக் கூறலாம்.அதுவும் அவர்களுடைய தனிப்பட்ட வெற்றி அல்ல.அது ஒரு கூட்டு வெற்றி. அதில் உள்நாட்டு வெளிநாட்டு தரப்புகள் எல்லாருடைய பங்களிப்பும் உண்டு. அப்படிப்பட்ட ஒரு கூட்டு வெற்றியை அவர்கள் தங்களுக்கு மட்டும் உரியதாக மாற்றினார்கள். அதன் மூலம் தங்களைச் சுற்றி ஒரு ஒளிவட்டத்தை சுடரச் செய்தார்கள். அதுதான் அவர்கள் பெற்ற தேர்தல் வெற்றிகள் அனைத்துக்கும் அடிப்படை.
ஈஸ்டர் குண்டு வெடிப்பின் விளைவாக அந்த வெற்றியை அவர்கள் 2019க்கும் அப்டேட் செய்து கொண்டார்கள்.சிங்கள மக்கள் தங்களுக்கு ஒரு இரும்பு மனிதர் வேண்டும் என்று கேட்கும் ஒரு நிலைமையை ஈஸ்டர் குண்டு வெடிப்பு ஏற்படுத்தியது.ஒரு அனுநாயக்க தேரர் ஹிட்லரைப் போல ஒரு தலைவர் நாட்டுக்குத் தேவை என்று பகிரங்கமாகச் சொன்னார்.
இவ்வாறு யுத்தத்தை வென்ற ஒரே காரணத்துக்காக ஒரு குடும்பத்தின் கையில் சிங்கள மக்கள் மூண்டில் இரண்டு பெரும்பான்மையை அள்ளிக் கொடுத்தார்கள். யுத்தத்தை வென்ற ஒரே தகைமை காரணமாக அவர்கள் வைரஸையும் வெல்வார்கள் என்று நம்பினார்கள்,பொருளாதார நெருக்கடியையும் வெல்வார்கள் என்று நம்பினார்கள்.ஆனால் யுத்தமும் வைரஸும் ஒன்று அல்ல, யுத்த வெற்றியைச் சாப்பிடமுடியாது என்பதனை சிங்கள மக்கள் கண்டுபிடித்தபோது தோல்விக்கான முழுப்பழியையும் ஒரு குடும்பத்தின் மீது சுமத்தினார்கள். எந்த குடும்பத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்களோ, அதே குடும்பத்தை நிலத்தில் ,கழிப்பறையில் போட்டு மிதிக்கும் ஒரு நிலைமை வந்தது. இதில் உள்ள வரலாற்று முரண்நகை என்னவென்றால் ஒரு கூட்டு வெற்றியை குடும்ப வெற்றியாக சுவீகரித்துக் கொண்ட ராஜபக்ச குடும்பம் ஒரு கூட்டுத் தோல்விக்கும் பொறுப்பேற்க வேண்டி வந்தமை என்பதுதான்.
தற்பொழுது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு ராஜபக்சக்கள் மட்டும் காரணம் அல்ல. போரை நடத்திய எல்லா சிங்கள தலைவர்களும் அதற்கு பொறுப்பு. இலங்கைத்தீவை பல்லினத்தன்மை மிக்க ஒரு நாடாகக் கட்டியெழுப்பத் தவறிய எல்லாத் தலைவர்களுமே அதற்கு பொறுப்பு.
சிங்கள மக்கள் ராஜபக்சக்களை வெளியே தேடுகிறார்கள்.இல்லை யுத்த வெற்றியை கொண்டாடிய எல்லா சிங்களவர்களுடைய இதயத்துக்குள்ளும் ஒரு ராஜபக்ஷ உண்டு. எனவே இப்பொழுது ஏற்பட்டிருக்கும் தோல்விகள் யாவும் ஒரு குடும்பத்தின் தோல்விகள் அல்ல. சிங்கள பௌத்த பண்பாட்டின் தோல்விகள் அவை. வியத்மக என்று பெருமையோடு அழைக்கப்பட்ட சிந்தனைக் குளாத்தின் அதாவது துறைசார் நிபுணத்துவத்தின் தோல்வி அது. எல்லாவற்றையும் விட ஆழமான பொருளில் இலங்கைத்தீவின் அரசமதமாகிய தேரவாத பௌத்தத்தின் பயில்நிலைத் தோல்வி அது.எனவே அக்கூட்டுத் தோல்வியை, பண்பாட்டுத் தோல்வியை, சிங்கள மக்கள் இப்பொழுதாவது ஏற்றுக் கொள்ள வேண்டும்.அது ஒரு கூட்டுத் தோல்வி. அக்கூட்டுத் தோல்விக்கு ஒரு குடும்பத்தை மட்டும் குறை கூற முடியாது. யுத்த வெற்றியை ஒரு குடும்பத்தின் வெற்றியாக பார்த்ததைப் போலத்தான் இதுவும் ஒரு தவறான பார்வை.
கோத்தபாயவை அதிகாரத்திலிருந்து அகற்றினால் எல்லாம் சரியாகிவிடும் பொருளாதாரம் நிமிர்ந்துவிடும் என்று நம்புவது ஒரு குருட்டு நம்பிக்கைதான். தன் குடும்பத்தை பாதுகாப்பதற்கும், தனது ஆதரவாளர்களை பாதுகாப்பதற்கும் தனது கையில் நிறைவேற்று அதிகாரம் இருக்க வேண்டும் என்று கோத்தாபய நம்புகிறார். ஆனால் அவரை அகற்றினால்தான் நாடு உருப்படும் என்று போராடும் மக்கள் நம்புகிறார்கள். யுத்த வெற்றிவாதிகளை அகற்ற இதைவிடச் சிறந்த தருணம் இல்லை என்று அமெரிக்க நம்புகிறது. ஐநா நம்புகிறது. ஏனைய மேற்கு நாடுகளும் நம்புகின்றன. கோத்தா பதவியில் இருக்கும்வரை பன்னாட்டு நாணயநிதியம் நாட்டுக்கு உதவப் போவதில்லை என்ற ஒரு கருத்து தென்னிலங்கையில் பலமடைந்து வருகிறது.
அது சரி. ஆனால் அதன் பொருள் யுத்த வெற்றிவாதிகளை அகற்றினால்மட்டும் நாடு தேறிவிடும் என்பதல்ல. நாட்டின் பொருளாதாரத்தை நிமிர்ந்துவதற்கு பொருத்தமான தலைமைகள் யாரும் ஆளுங்கட்சிக்குள்ளும் இல்லை, எதிர்க்கட்சிக்குள்ளும் இல்லை. தம்மிக்க பெரேரா போன்ற கோடீஸ்வரர்கள் அல்லது அவரைப் போல அரசியலில் குதிக்க ஆசைப்படும் அரிசிஆலை முதலாளியும் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரும் ஆகிய டட்லி சிறிசேன போன்றவர்கள்தான் நாடாளுமன்றத்துக்குள் வரலாம் என்றால் பொருளாதாரத்தை எப்படி நிமிர்த்துவது? இந்த முதலாளிகளைத் தவிர யாரும் நல்லவர்கள் பெரியவர்கள் அறிஞர்கள் நாட்டில் கிடையாதா? இந்த தலைமைத்துவ வெற்றிடம் உள்ளவரை பொருளாதாரத்தை நிமித்துவது சவால்கள் மிகுந்ததாகவே இருக்கும். கோத்தா பதவியில் இருந்து விலகினாலும்கூட இந்த நிலைமைதான் தொடரும்.
எனினும் கோத்தாவை அகற்றுவதற்கு இதுதான் பொருத்தமான சந்தர்ப்பம் என்று மேற்கு நாடுகளும் பன்னாட்டு நாணய நிதியமும் கருதுகின்றன. நிலைமையை மேலும் சீரழிய விட்டால் கோட்டா கதிரையை விட்டு இறங்குவார் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.அதனால்தான் பெரிய அளவிலான உதவிகளை வழங்காமல் சிறுசிறு உதவிகளை வழங்கி இலங்கைத்தீவை தொடர்ந்தும் தமது கருணையில் தங்கியிருக்க வைக்கிறார்கள். இந்தியாவும் அதைத்தான் செய்கிறது. இந்த உதவிகள் யாவும் இலங்கைக்கு “சேலைன்” ஏற்றுவதைப் போன்றவை. துளித்துளியாக வரும் உதவிகள்.
அதாவது இலங்கைத்தீவின் பொருளாதாரத்தை நிமிர்த்தத் தேவையான உதவிகளை மேற்படி நாடுகள் செய்யவில்லை. பன்னாட்டு நாணய நிதியமும் உதவிபுரிவதை இழுத்தடிக்கின்றது. இதன்பொருள் என்னவென்றால் ராஜபக்சக்களை முற்றாக அதிகாரத்திலிருந்து அகற்றும்வரை பன்னாட்டு நாணய நிதியத்திடம் இருந்தோ மேற்கு நாடுகளிடமிருந்தோ பெரிய அளவிலான உதவிகள் கிடைக்காது என்பதுதான்.அவர்கள் ஒரு ஆட்சி மாற்றத்தை எப்படி செய்யலாம் என்று சிந்திக்கிறார்கள்.
எந்த ஒரு வெளித்தரப்பும் தன்னுடைய பிராந்திய மற்றும் பூகோள நலன் சார் நோக்கு நிலையில் இருந்துதான் மற்றொரு நாட்டுக்கு உதவும். இலங்கைத்தீவின் பொருளாதார நெருக்கடியானது நாட்டு மக்களுக்கு உணர்த்தும் பேருண்மை அதுதான். கடந்த நான்கு தசாப்தகால அரசியலில் தமிழ் மக்களுக்கு அது தொடர்பாக கொழுத்த அனுபவம் உண்டு. இப்பொழுது சிங்கள மக்கள் அந்தப் பாடத்தை படித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மக்கள் பதுங்கு குழிக்குள் இருந்து கொண்டு படித்த பாடத்தை சிங்கள மக்கள் எரிபொருள் வரிசையில் நின்று படித்துக்கொண்டிருக்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன் நண்பர் ஒருவர் ஒரு படத்தை எனக்குப் பகிர்ந்திருந்தார் அதில் ஒரு சிங்கம் சைக்கிள் ஓடுகிறது அதற்கு கீழே “சைக்கி ளே” என்று சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளது. வழமையாக “சிங்களே” என்று சொன்னால் அது சிங்கள ரத்தம் சிங்களவர்களின் பெருமை. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் தென்னிலங்கையிலும் புலம்பெயர்ந்த சிங்கள மக்கள் மத்தியிலும் அவர்களுடைய வாகனங்களின் பின்புறக் கண்ணாடியில் அந்த வாசகம் எழுதப்பட்ட ஸ்டிக்கரை காணலாம். அது ஒரு பெருமைக்குரிய வார்த்தையாகவும் பரிகசிக்கப்பட முடியாத ஒரு சொற்றொடராகவும் ஒரு காலம் கருதப்பட்டது. ஆனால் இன்றைக்கு சிங்களவர்களே அதை பரிகசிக்கும் ஒரு நிலைமை வந்திருக்கிறது. தேசியக் கொடியில் வாளுடன் நிற்கும் சிங்கம் வாளைத் தூக்கி எறிந்து விட்டு பிச்சை எடுக்கின்றது, சைக்கிள் ஓடுகிறது. ஆனால், இச்சிறிய தீவை ஒரு சிங்கம் மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பதனை சிங்கள மக்கள் எப்பொழுது கண்டுபிடிப்பார்கள்?






















