வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் சமூக மட்ட அமைப்புக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலானது மாவட்ட செயலகங்கள் தோறும் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்ட தொழிற்துறைசார் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலானது இன்று(06) காலை 11.00மணிக்கு மாவட்ட செயலக பேரவை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் முல்லை கைத்தொழில் போரவையின் அங்கத்தவர்கள் கலந்துகொண்டு தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக வடமாகாண ஆளுநரின் பொதுசன தொடர்பு அதிகாரி ரி.கணேசநாதனுக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.
குறிப்பாக சந்தை வாய்ப்புக்களுக்கான தளத்தினை ஏற்படுத்திக்கொடுத்தல், பொது அமைப்புக்களுக்கு வழங்கப்பட்ட பவனையற்றஉபகரண தொகுதிகளை பயன்பாட்டுக்குரியதாக மாற்றுகின்ற நடவடிக்கைகள், பொதுவான ஓரிடத்தில் தொழிற்கூடத்தினை அமைப்பதன் அவசியம், தமது உள்ளூர் உற்பத்திகளை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு விற்பனை செய்வதற்கான தொடர்புகளை ஏற்படுத்தல், தமது உற்பத்திகளை பிற மாகாணங்களுக்கு கொண்டுசெல்வதால் பல சவால்களை எதிர்கொள்வதால் மாகாணத்திற்குள் விற்பனை செய்வதற்கான பொறிமுறையினை ஏற்படுத்தல் தொடர்பான விடயங்களை தெரியப்படுத்தி கலந்துரையாடியிருந்தனர்.
மேலும் வெளி நாடுகளுக்கு தமது ஏற்றுமதி செய்யும்போது ஆய்வு கூட வசதிகள் இன்மையால் பல சவால்களை எதிர்கொள்வதால், மாகாணத்திற்கென ஒரு ஆய்வு கூடத்தினை உருவாக்குவதன் அவசியத்தை சுட்டிக்காட்டியிருந்தனர்.
கடந்த மாதங்களில் நாட்டில் பொருளாதார எரிபொருள் பிரச்சினைகள் உச்சளவில் இருந்த போதும், தமக்கு தொழில் தடைப்படாதவகையில் எரிபொருளினை வழங்கிய மாவட்ட செயலக நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.
இதன்போது கருத்துத்தெரிவித்த வடமாகாண ஆளநரின் பொதுசன தொடர்பு அதிகாரி ரி.கணேசநாதன் : குறித்த பிரச்சினைகள் தொடர்பாக கௌரவ வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தம்மால் மேற்கொள்ளப்பட்டும் என உறுதியளித்தார்.
மேலும் மாவட்ட பிரச்சினைகளை எழுத்து மூலமாக அனுப்பி வைக்குமாறும், ஆளுநரை நேரடியாக சந்தித்து கலந்துரையாடுவதற்கான தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார்.
இக் கலந்துரையாடலில் வடமாகாண ஆளநரின் பொதுசன தொடர்பு அதிகாரி ரி.கணேசநாதன் மற்றும் முல்கோ நிறுவன பணிப்பாளரும் முல்லை கைத்தொழில் போரவையின் தலைவருமான எஸ். தவசீலன் ஆகியோர் இணையவழி செயலி ஊடாகவும், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர்(காணி) எஸ்.குணபாலன், மாவட்ட செயலக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் யோ.மதுசூதன், மாவட்ட செயலக தொழில்துறை திணைக்கள மாவட்ட இணைப்பாளர் ரி.நிறோசன், தொழில்துறை திணைக்கள உத்தியோகத்தர்கள், முல்லை கைத்தொழில் போரவையின் பிரதிநிதிகள், பல்வேறுபட்ட கைத்தொழில் நிறுவன உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஜெகதீஸ்வரன் டிஷாந்த்
ஊடகவியலாளர்
முல்லைத்தீவு






















