எமது யாழ் செய்தியாளர்.
கடற்படைக்கு ஒரு புலனாய்வுப் பிரிவு, இராணுவத்திற்கு ஒரு புலனாய்வுப் பிரிவு, பொலிஸ் புலனாய்வு பிரிவு, பயங்கரவாத தடைப் புலனாய்வு பிரிவு என பல புலனாய்வு பிரிவினர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிறைந்து இருக்கின்றனர் ஆனால் போதைப்பொருள் மட்டும் வருகின்றது என்றால் புலனாய்வு பிரிவினர் இங்கே என்ன செய்கின்றார்கள்? என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பினார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். ”யாழ்ப்பாணத்தில் போதைவஸ்து பாவனை என்பது யுத்தத்துக்கு பின்னரே அறிமுகமானது. இன்றுவரையும் யாழ்ப்பாணம் முப்படையினுடைய கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது. இங்கு யார் என்ன செய்தாலும் படையினருக்கு உடனடியாகவே தகவல்கள் தெரியும்”.
இதர பொருட்கள் கடத்தப்படும் போது மிகவும் அவதானமாக இருந்து அவற்றை பிடித்து கடத்தலை தடுத்து நிறுத்திவிட்டது போன்று இலங்கைப் படையினரும் பொலிசாரும் அவ்வப்போது செய்தியையும் படங்களையும் வெளியிடுகின்றனர். ஆனால் போதைப் பொருட்கள் விடயத்தில் அந்த தீவிரத்தன்மை என்னவாயிற்று என்று வடக்கு-கிழக்கு வாழ் பொதுமக்கள் கேட்கின்றனர்.
மஞ்சள் கடத்தப்படும் போது உடனடியாக பிடிக்கப்படுகின்றது. வேறு பொருட்கள் வரும்போது உடனடியாக கடத்தல் குழு பிடிக்கப்படுகிறது. ஆனால் போதைவஸ்து வரும் போது அவ்வாறான நிலை காணப்படுவதில்லை என்று மக்களின் கேள்வியை சுரேஷ் பிரேமச்சந்திரனும் வினவியுள்ளார்.
வட கடல் பகுதியில் கஞ்சா கடத்தப்படும் வேளையில் 200 கிலோ, 300 கிலோ பிடிப்பட்டது என்று கூறும் போது, வரும்போது வெளிப்பிரதேசங்களில் பெருந்தொகை கஞ்சா நாட்டிற்குள் வருவதாக அறியப்படுகிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
”கடற்படையினர் இந்திய மீனவர்கள் வரக்கூடாது என்பதற்காக பல ரோந்து நடவடிக்கையை ஈடுபட்டிருக்கின்றனர். இந்திய மீனவர்கள் படகுகளுடன் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இலங்கை கடற்படை திறமையாக செயல்பட்டால் கேரள கஞ்சாவை இங்கு தடை செய்வது என்பது அவ்வளவு கடினமான விடயம் அல்ல” என்றார் இ பி ஆர் எல் எஃப் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்.
”கெக்கெயின், ஹெரோயின், ஐஸ் போன்ற பல்வேறு போதைப்பொருட்கள் தென்பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்திற்கு தாராளமாக வருகின்றது. ஆனையிறவு சோதனைச்சாவடி, வவுனியா சோதனைச் சாவடிகளை தாண்டி மிகப் பெருமளவிலான போதைவஸ்துக்கள் வருவதுடன் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது” என்றார் அவர்.
யாழ்ப்பாணத்து வீதிகளில் சோதனைச் சாவடிகளை அமைப்பதால் போதைவஸ்துகளை நிறுத்திவிட முடியாது எனக் கூறும் அவர், வீதித்தடைகள் அமைப்பதன் மூலம் மட்டுமே போதைவஸ்து கடத்தல் மற்றும் பாவனையை தடுக்க முடியாது என்றார்.
”பிரதான வீதிகளில் சோதனைச்சாவடிகளை போட்டால் உள்வீதிகள் எவ்வாறு செல்ல முடியும் என்பது அனைவருக்கும் தெரியும்.போதைவஸ்தை இல்லாமல் செய்வது நோக்கமா? சோதனைச் சாவடியை போடுவது நோக்கமா என்ற கேள்வி எழுகிறது. மீண்டும் இங்கு சோதனை சாவடிகள் அமைப்பது சாதாரண மக்களை பாதிக்கும்”.
வடமாகாண ஆளுநர் மக்கள் பிரதிநிதிகளாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை பிரதிநிதிகளை அழைத்துப் பேச முடியும். கூட்டாக துறை சார்ந்த தரப்புகள் இணைந்தே பேச முடியும், ஆனால் அப்படியான நடவடிக்கை ஏன் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
பொலிசாருக்கும் இராணுவத்திற்கும் போதைப்பொருள் தொடர்பான தகவல் கிடைத்தால் சம்பந்தப்பட்ட போதைப்பொருள் வியாபாரிகளுக்கு தகவல் வந்துவிட்டதாக தகவல் போகின்றது. யாரும் இவர்களை நம்பி போய் தகவல் சொல்வது கடினம். அவ்வளவு விரைவாக போதைப்பொருள் கடத்துபவர்களுக்கு செய்திகள் செல்கின்றது. போதைப்பொருள் வியாபாரிகள் தனித்து செய்கின்றார்களா அல்லது சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் தரப்பின் பாதுகாப்புடன் செய்கின்றார்களா என்று எழுகின்றது என்றும் அவர் மேலும் கூறினார்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்படுபவர்களுக்கு என்ன நடக்கின்றது என்பது தெரியவில்லை. அவர்கள் மீது எதன் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது என்பதும் தெரியவில்லை என்றும் வினவும் அவர், அப்படியானவர்கள் எவ்வாறு வெளியில் வருகிறார்கள் என்பதும் தெரியவில்லை என்றார்.