அஸ்வின்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘மகா அவதார் நரசிம்மா’ படம் ரூ.300 கோடி வசூலை குவித்தது. இந்த அனிமே ஷன் படத்தில் சாம் சி.எஸ். இசை பெரியளவில் பேசப்பட்டது. மகா அவதார் வரிசையில் ‘மகா அவதார் பரசுராம்’ படம் அடுத்த ஆண்டு (2027) டிசம்பரில் வெளியாகிறது. இதுகுறித்து படக்குழுவினர் கூறும்போது, “சாம் சி.எஸ். வழக்கமான முறையை மாற்றி, இந்தக் கதைக்கு முன்கூட்டியே இசையமைத்து முடித்துள்ளார். அதன்படி இசையை அடிப்படையாக கொண்டு அனிமேஷன் காட்சிகள் வடிவமைக்கப்படுகின்றன” என்றார். உலகத் தரத்தில் பணியாற்றிய அனுபவமுள்ள ஹாலிவுட் இசைக்கலைஞர் கள் உள்பட 250-க்கும் மேற்பட்ட சர்வதேச தொழில்நுட்ப நிபுணர்கள் இதில் இணைந்துள்ளனர். இத்தகைய பிரமாண்டமான அணியில் சாம் சி.எஸ். தனது இசையை உலகத் தரத்தில் வடிவமைத்து வருகிறார். பின்னணி இசையில் கலக்கி வரும் சாம் சி.எஸ்., பாலிவுட் தொடங்கி பல மொழிகளில் உருவாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களிலும் தீவிரமாக இசையமைத்து வருகிறார். தமிழில் ரவிமோகனின் ‘கராத்தே பாபு’, கார்த்தியின் ‘சர்தார்-2’ படங்களுக்கு இசையமைத்து வரும் சாம் சி.எஸ்., அடுத்து புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் உருவாகும் படம், எச்.வினோத் தனுஷ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.






















