பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அசீம் முனீரை அழிக்க இஸ்ரேலின் உளவு அமைப்பு மொசாட் திட்டமிட்டது என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் நாட்டை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து கடந்த பிப்ரவரி இறுதியில் தாக்கின. இதில், ஈரானில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த தாக்குதலால் ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. உலக நாடுகளுக்கு 5-ல் ஒரு பங்கு சரக்குகளை கொண்டு செல்ல கூடிய முக்கிய பகுதியை ஈரான் கைப்பற்றியது. இதனால், பல்வேறு நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த சூழலில், ஈரானுடன் போரை முடிவுக்கு கொண்டு வர அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை இறுதி செய்வதற்கான முதல் சுற்று அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், சுவிட்சர்லாந்துக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அவர், ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் குவாலிபாப், வெளியுறவு துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் மத்திய வங்கி மற்றும் எண்ணெய் அதிகாரிகளை சந்தித்து பேச முடிவானது. இதேபோன்று அமைதி பேச்சுவார்த்தையில் பங்கு பெற்று, ஈரான் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையே மத்தியஸ்தம் செய்வதற்காக, பாகிஸ்தான் மற்றும் கத்தார் நாடுகளை சேர்ந்த அதிகாரிகளும் சென்றனர். இந்த நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் நடந்த பேச்சுவார்த்தையின்போது, பாகிஸ்தானிய ராணுவ தலைமை தளபதி அசீம் முனீர் மற்றும் பாகிஸ்தானின் குழுவினரை தாக்கி அழிக்க இஸ்ரேலின் உளவு அமைப்பு மொசாட் திட்டமிட்டது என பிரேசிலின் நிருபர் மற்றும் புவிஅரசியல் நிபுணரான பெப் எஸ்கோபார் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.

















