போரியல் ரீதியாக இலங்கையின் முப்படைகளுக்கும் மிகப்பெரிய சவாலாகவும் சிம்ம சொப்பனமாகவும் விளங்கிய கரும்புலிகள் தொடர்பில் இலங்கை இராணுவத்தின் ,கடற்படையின் ,உளவுப்பிரிவின் தளபதிகள் கூறுவது என்ன? இலங்கை இராணுவத்தின் தளபதியாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலராகவும் இருந்தவர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன.விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரில் 53 ஆவது படையணியை வழிநடத்திய மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, தனது ”நந்திக்கடலிற்கான பாதை” (Road to Nandikadal) என்ற நூலில் விடுதலைப்புலிகளின் போரிடும் குணம் பற்றி எழுதியுள்ளார்.அதில் கரும்புலிகள் அமைப்பின் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு இராணுவத்தினரையே வியக்க வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.பிடிபட்டால் அமைப்பின் இரகசியங்கள் வெளியே கசிந்துவிடக் கூடாது என்பதற்காக, கழுத்தில் சயனைட் குப்பியைத் தொங்கவிட்டுக்கொண்டு, சாவைக் கண்டும் அஞ்சாமல் இலக்குகளை நோக்கி முன்னேறும் கரும்புலிகளின் மன உறுதி மிக உக்கிரமானது என்று பதிவு செய்துள்ளார்.
—-கே.பாலா

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில், அளப்பரிய அர்ப்பணிப்பிற்கும் அதிமுக்கிய திருப்பு முனைகளுக்கும் எதிரிகளை கலங்கடித்த வெற்றிகளுக்கும் ”உயிராயுதங்களாக”,”தற்கொடை” யாளர்களாகத் தம்மை ஆகுதியாக்கியவர்கள் விடுதலைப்புலிகளின் முகம் தெரிய நெருப்பு மனிதர்களான ”கரும்புலிகள்”.”புயலெனக் கிளம்பி, இடியென வெடித்து , விடுதலைப் பாதையைத் தங்கள் குருதியால் வெளிச்சமாக்கிய உன்னத தியாகிகள் கரும்புலிகள். அவ்வாறான நெருப்பு மனிதர்களை , நினைவுகூர ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5ஆம் திகதி கடைப்பிடிக்கப்படும் நினைவு நாளே கரும்புலிகள் நாள்.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் திகதி விடுதலைப்புலிகளின் கரும்புலி கப்டன் மில்லரின் வடமராட்சி நெல்லியடி இராணுவ முகாம் மீதான தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கியதையிட்டே தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் 05.07.1993 அன்று ஜூலை 5ஆம் திகதி கரும்புலிகள் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு வருடமும் தமிழர் தாயகத்திலும் தமிழர் வாழும் புலம்பெயர் தேசமெங்கும் கரும்புலிகள் நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது .
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து யாழ் குடா நாட்டை கைப்பற்றுவதற்காக இலங்கை இராணுவத்தினரால் 1987ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட மிகப்பாரிய ”ஒப்ரேஷன் லிபரேஷன்” இராணுவ நடவடிக்கை காரணமாக புலிகள் இராணுவ ரீதியான சவால்களை எதிர்கொண்ட வேளையில் அதனை முறியடிப்பதற்காக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனினால் கரும்புலித் தாக்குதல் தந்திரோபாயம் திட்டமிடப்பட்டது.அதனடிப்படையில் கரும்புலியாக சென்று தங்கள் உயிர்களை ஆயுதமாக்க திலீபன் உட்பட புலிகளின் மூத்த தளபதிகள் பலர் போட்டியிட்ட போதிலும் மில்லர் என்ற போராளிக்கு அந்த வாய்ப்பு கிட்டியது.
1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் திகதி நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் நிலை கொண்டு குடாநாட்டை முற்றுகையிடுவதற்கான அடுத்த கட்ட தயார்படுத்தல்களை மேற்கொண்டு வந்த இலங்கை இராணுவத்தினர் மீது வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தில் சென்று கப்டன் மில்லரினால் முதல் தடவையாக கரும்புலித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலின் மூலம் நூற்றுக்கு மேற்பட்ட இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டதையடுத்து குடாநாட்டை கைப்பற்றும் திட்டமும் இராணுவத்தினரால் கைவிடப்பட்டது.நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இலங்கை இராணுவத்தினர் மீது மில்லர் கரும்புலித் தாக்குதல் நடத்தி இன்று 39 ஆண்டுகள் கடந்துவிட்டன.
1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் திகதி விடுதலைப்புலிகளினால் முதல் முதலாக கரும்புலித்தாக்குதல் நடத்தப்பட்டபோதும் 05.07.1993 அன்றுதான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனினால் ஜூலை மாதம் 5ஆம் திகதி ”கரும்புலிகள் நாள்” என அறிவிக்கப்பட்டது .1987ஆம் ஆண்டு ஆரம்பமான கரும்புலிகளின் சகாப்தத்தில் 2008 ஜூன் 27 வரை விடுதலைப் புலிகள் வெளியிட்ட உத்தியோக பூர்வ தகவல்களின் அடிப்படையில் 356க்கு மேற்பட்ட கரும்புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.
2008 ஜூன் வரை விடுதலைப்புலிகள் அமைப்பு வெளியிட்ட உத்தியோகபூர்வப் பட்டியலில் 356 கரும்புலிகள் வீரச்சாவடைந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் 2009 மே மாத இறுதிப்போர் வரை நிகழ்ந்த தாக்குதல்களையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை 379 அல்லது அதற்கும் சற்றே அதிகமாக இருக்கும் .அந்த வகையில் தரைக் கரும்புலிகளாக 59 ஆண்களும் 18 பெண்களுமாக 77 பேரும் கடற்கரும்புலிகளாக 140ஆண்களும் 56 பெண்களுமாக 196 பேரும் வான் கரும்புலிகளாக 2 ஆண்களும் ஏனைய உளவு நடவடிக்கைகள் இதர தாக்குதல்களில் – 104 கருப்புலிகளுமென 379 கரும்புலிகள் தமது உயிர்களை ”தற்கொடை”செய்துள்ளனர்.
விடுதலைப்புலிகள் கரும்புலித் தாக்குதல்களை ‘தற்கொலை’தாக்குதல் என்று அழைப்பதில்லை. மாறாக, அதனை ‘தற்கொடை’ அல்லது ‘உயிராயுதம்’ என்றே குறிப்பிட்டனர். விரக்தியிலோ, மத நம்பிக்கையின் அடிப்படையிலோ, அல்லது மரணத்திற்குப் பின் கிடைக்கும் சொர்க்கத்தை நம்பியோ அவர்கள் இந்த முடிவை எடுப்பதில்லை. “தங்களது மண்ணின் விடுதலைக்காகவும், மக்களின் பாதுகாப்புக்காகவும், தங்களை முழுமையாக அழித்துக் கொண்டு எதிரிக்கு பெரும் சேதத்தை விளைவிப்பது” என்ற அரசியல் இலட்சியவாதமே கரும்புலிகளின் உந்துசக்தியாக இருந்தது.
போரியல் சமநிலையை மாற்றிய உயிராயுதங்களாகவே கரும்புலிகள் இருந்தனர்.இராணுவ ரீதியாகப் பலம் வாய்ந்த எதிரியை எதிர்கொள்ள, கரும்புலிகள் தங்களையே நகரும் வெடிகுண்டுகளாக மாற்றினர். எதிரியின் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் புகுந்து, தளபதிகள் மற்றும் இராணுவ இலக்குகளை தரைக்கரும்புலிகள் அழித்தனர். படகுகளில் வெடிபொருட்களை நிரப்பி, இலங்கை கடற்படையின் பிரம்மாண்டமான அதிவேகத் தாக்குதல் படகுகள் மற்றும் விநியோகக் கப்பல்கள் மீது மோதி அவற்றை கடற்கரும்புலிகள் அழித்தனர் . கடலில் புலிகளின் ஆதிக்கத்தை நிலைநாட்ட இவர்களின் தியாகமே அடித்தளமாக அமைந்தது.
உலக வரலாற்றில் தற்கொலைப்படைத் தாக்குதல்களில் பெண்களை மிக அதிக அளவில் பயன்படுத்தியவர்களாக விடுதலைப்புலிகளே இருந்தனர் . ஆண் போராளிகளுக்கு நிகராகப் பெண் போராளிகளும் மிகக் கடினமான உளவு வேலைகளிலும், கடற்பரப்பிலும், தரைவழித் தாக்குதல்களிலும் கரும்புலிகளாகச் செயல்பட்டனர். பல சர்வதேச இராணுவ ஆய்வாளர்கள் கரும்புலிகளை “உலகின் மிக ஒழுக்கமான மற்றும் நேர்த்தியான தற்கொலைப்படை” என்று விவரித்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் ‘கரும்புலிகள்’ , இராணுவ ரீதியாக இலங்கை ஆயுதப் படைகளுக்கு மிகப்பெரிய சவாலாகவும் சிம்ம சொப்பனமாகவும் விளங்கினர் . போர்க்களத்தில் நேரடி மோதல்களில் ஈடுபடுவதை விட, கரும்புலிகள் நடத்திய தற்கொடைத் தாக்குதல்கள் இலங்கை இராணுவத்தின் வியூகங்களை பலமுறை சிதறடித்தன.இலங்கை இராணுவத்தின் முக்கிய தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் .இராணுவ தலைமையகங்கள், விமானப்படைத்தளங்கள்,விமான நிலையங்கள் கரும்புலிகளினால் தாக்கி அழிக்கப்பட்டன .
கரும்புலிகள் பிரிவு குறித்தும் அவர்களின் தாக்குதல் திறன் குறித்தும் பல்வேறு காலகட்டங்களில் தங்களது கருத்துக்களையும், இராணுவ ரீதியான மதிப்பீடுகளையும் இலங்கை இராணுவத்தளபதிகளே வியந்து வெளிப்படுத்தியுள்ளனர்.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா
2006 ஆம் ஆண்டு கொழும்பு இராணுவத் தலைமையகத்திற்குள் புகுந்து பெண் கரும்புலி ஒருவர் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் அப்போதைய இராணுவத்தளபதியான சரத் பொன்சேகா படுகாயமடைந்து உயிர் தப்பினார். பின்னர் அது குறித்துப் பேசுகையில், ”எதிரியின் உளவுப் பிரிவும் கரும்புலிகளும் இராணுவத்தின் மிக உயர்ந்த பாதுகாப்பு வளையத்திற்குள்ளும் ஊடுருவும் அசாத்தியத் திறன் கொண்டவர்களாக இருந்தனர். கரும்புலிகள் சாதாரண தற்கொலைப்படையினர் அல்ல . அவர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் பயிற்றுவிக்கப்பட்ட, கடுமையான இலக்கு நோக்கிய உளவுப் படையினர்” என்று கூறியிருந்தார்
லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ
இலங்கை இராணுவத்தளபதிகளில் விடுதலைப்புலிகளுக்கு மிகப்பெரும் சவாலாக இருந்தவர் லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ.ஈழப்போரின் ஆரம்பக் கட்டங்களில் (1990களின் துவக்கத்தில்) இலங்கை இராணுவத்தின் மிகச்சிறந்த வியூகவாதியாகக் கருதப்பட்டவர் . 1987இல் வடமராட்சியை மீட்பதற்காக நடத்தப்பட்ட இந்த மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையான ஒபரேஷன் லிபரேஷனில் முக்கிய பங்காற்றியவர் அதேபோன்று 1991இல் புலிகளின் முற்றுகைக்குள் இருந்த ஆனையிறவு இராணுவ முகாமை மீட்பதற்காக நடத்தப்பட்ட இலங்கை இராணுவத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இராணுவ நடவடிக்கையான ”ஒபரேஷன் பலவேகய” வுக்கு தலைமை தாங்கியவர் .ஆகஸ்ட் 8, 1992 அன்று, யாழ்ப்பாணம் அராலி முனையில் அவர் பயணித்த லேண்ட் ரோவர் வாகனம் விடுதலைப்புலிகளின் நிலக்கண்ணிவெடியில் சிக்கியது.இந்த தாக்குதலில் டென்சில் கொப்பேகடுவ, பிரிகேடியர் விஜய விமலரத்ன, அட்மிரல் மோகன் ஜயமஹா உட்பட 10 உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர்.
இந்த லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ கரும்புலிகள் தொடர்பில் விபரிக்கையில், ”கரும்புலிகளின் தாக்குதல்கள் இராணுவத்தின் “மன உறுதியை குலைக்கும் ஆயுதம்” (Psychological Weapon). சாதாரணப் போரில் மரண பயம் இருக்கும், ஆனால் மரணத்தையே ஆயுதமாக ஏந்திவரும் ஒரு படையணியை எதிர்கொள்வது சாதாரண சிப்பாய்களுக்கு மிகப்பெரிய உளவியல் நெருக்கடியை உருவாக்குகிறது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

அட்மிரல் வசந்த கரன்னாகொட.
இலங்கை கடற்படைபையின் தளபதியாக இருந்தவர் அட்மிரல் வசந்த கரன்னாகொட. கடற்கரும்புலிகள் இலங்கை கடற்படைக்கு விளைவித்த அழிவுகள் குறித்து தனது “Aduran wevu duka” (Shaping the Sea) என்ற புத்தகத்திலும் பேட்டிகளிலும் விரிவாகப் பேசியுள்ளார்: கடலில் இலங்கை கடற்படையின் பிரம்மாண்டமான ‘டோரா’ அதிவேகத் தாக்குதல் படகுகளை, சிறிய வெடிகுண்டுப் படகுகள் மூலம் கடற்கரும்புலிகள் தகர்த்த விதம் கடற்படைக்கு பெரும் சவாலாக இருந்தது “புலிகளின் கடற்கரும்புலிகள் மரணத்தைப் பற்றி பயப்படாதவர்களாக இருந்தனர். எங்களின் நவீன ரகக் கப்பல்களை நோக்கி தங்களின் வெடிமருந்துப் படகுகளை அதிவேகமாகச் செலுத்தி மோதும் அவர்களின் துணிச்சல், எமது கடற்படையினருக்கு எப்போதும் ஒரு பெரும் அச்சுறுத்தலாகவே இருந்தது” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன
இலங்கை இராணுவத்தின் தளபதியாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலராகவும் இருந்தவர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன.விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரில் 53 ஆவது படையணியை வழிநடத்திய மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, தனது ”நந்திக்கடலிற்கான பாதை” (Road to Nandikadal) என்ற நூலில் விடுதலைப்புலிகளின் போரிடும் குணம் பற்றி எழுதியுள்ளார். அதில் கரும்புலிகள் அமைப்பின் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு இராணுவத்தினரையே வியக்க வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.பிடிபட்டால் அமைப்பின் இரகசியங்கள் வெளியே கசிந்துவிடக் கூடாது என்பதற்காக, கழுத்தில் சயனைட் குப்பியைத் தொங்கவிட்டுக்கொண்டு, சாவைக் கண்டும் அஞ்சாமல் இலக்குகளை நோக்கி முன்னேறும் கரும்புலிகளின் மன உறுதி மிக உக்கிரமானது என்று பதிவு செய்துள்ளார்.
இராணுவத்தின் உளவுத்துறை
இலங்கை இராணுவத்தின் உளவுத்துறை கரும்புலிகள் பற்றித் தயாரித்த அறிக்கைகளில் சில முக்கிய உண்மைகள் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தன.கரும்புலிகள் ஏதோ ஒரு போதைப்பொருளின் தாக்கத்திலோ அல்லது மூளைச்சலவை செய்யப்பட்டோ தாக்குதலுக்கு வருவதில்லை.அவர்கள் முழு சுயநினைவோடும், திட்டமிட்ட வரைபடங்களோடும் மிகத் துல்லியமாகத் தாக்குதலை நடத்துகிறார்கள். குறிப்பாக, கட்டுநாயக்க விமான நிலையத் தாக்குதல் (2001) மற்றும் அநுராதபுரம் விமானப்படைத் தளம் மீதான எல்லாளன் நடவடிக்கை (2007) ஆகியவற்றில் கரும்புலிகள் காட்டிய இராணுவ நேர்த்தி, உலகின் மிகச்சிறந்த கொமாண்டோப் படைகளுக்கு இணையானது என்று அவர்களினால் மதிப்பிடப்பட்டது.
இவ்வாறாக எதிரிகள் புகழ்ந்த மதித்த ,ஆச்சரியப்பட்ட, கதிகலங்கிய பலம் வாய்ந்த ஆயுதமே கரும்புலிகள் .இவர்கள் தமிழ் இனத்தின் தற்காப்பு கவசங்கள். விடுதலைக்கான போராட்ட பாதையின் தடைநீக்கிகளாக இருந்தவர்கள் . எதிரியின் படைபலத்தை மனோபலத்தால் உடைத்தெறிந்த நெருப்புமனிதர்கள்.கரும்புலிகள் வித்தியாசமானவர்கள். அபூர்வமான பிறவிகள். இரும்பு போன்ற உறுதியும், பஞ்சு போன்ற நெஞ்சமும் கொண்டவர்கள். தங்களது அழிவில் மக்களது ஆக்கத்தைக் கான் விரும்பிய ஆழமான மக்கள் நேயம் படைத்தவர்கள். ஒரு கரும்புலிவீரன் தன்னைவிட தனது இலட்சியத்தையே காதலித்தான் தனது உயிரைவிட தான் வரித்துக் கொண்ட குறிக்கோளையே நேசிதான் . அந்தக் குறிக்கோளை அடைவதற்கு தன்னை அழிக்கவும் அவன் தயாராக இருந்தான்
ஒரு தேசத்தின் விடுதலை என்பது வெறும் ஆயுதங்களால் மட்டுமே வென்றெடுக்கப்படுவதில்லை.அது தங்களை முழுமையாக அர்ப்பணிக்கத் துணியும் உன்னத மனிதர்களின் உயிர்க் கொடையினாலும் கட்டியெழுப்பப்படுகிறது. அந்த வகையில், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ‘கரும்புலிகள்’ என்னும் தற்கொடைப் படையணி, உலகின் இராணுவ வரலாறுகளையே வியக்க வைத்த ஒரு தனித்துவமான சக்தியாகும்.
தம்மால் வெல்லவே முடியாது என்று எதிரி நினைத்த பிரம்மாண்டமான இராணுவ இலக்குகளை, தங்களின் உடல்களையே ஆயுதமாக்கித் தகர்த்தெறிந்தவர்கள் கரும்புலிகள்.மரணம் என்பது மனிதர்களுக்குப் பொதுவானது என்றாலும், அந்த மரணத்தையே ஒரு போரியல் வியூகமாக மாற்றி, இலட்சியத்திற்காகத் தங்களை அழித்துக்கொள்ள முன்வந்த இவர்களின் அர்ப்பணிப்பு ஈடு இணையற்றது. “தற்கொலைப்படை” என்ற உலகளாவிய பொதுப் பார்வைகளுக்கு அப்பாற்பட்டு, “தற்கொடைப்படை” என்ற உன்னதத் தியாகக் கோட்பாட்டோடு களமாடிய கரும்புலிகளின் வரலாறு, உலகில் விடுதலைக்க போராடிய இயக்கங்கள், அமைப்புக்களின் வரலாறுகளைவிடவும் மிக ஆழமானது,உணர்வுபூர்வமானது .
எத்தனையோ கரும்புலிகள் தமது முகத்தையோ, முகவரியையோ, காட்டாமல், தமக்கென சுயநல பெருமை தேடாமல் தமிழ்த் தேசத்தின் இருப்பை நிலை நாட்ட அடையாளம் மறைத்து தமிழீழ விடுதலைக்கு தமது அர்ப்பணிப்பாலும் செயலாலும் தம்மை உரமாக்கி தமிழினத்தின் வரலாற்றில் தம்மை அழியாத அடையாளமாய் இட்டுச் சென்றுள்ளார்கள்.இமாலய சாதனைகளை படைத்து வீரகாவியமாகி இன்றும் வெளியில் தெரியா வீர மறவர்களாக ஈழவரலாற்றுப் பக்கங்களில் மறைந்து கிடக்கும் தேசப்புயல்கள் கரும்புலிகள். வரையப் படாத சித்திரங்களாகவும் எழுதப்படாத சரித்திரங்களாகவும் தம்ளர் விடுதலைக்காக உயிராயுதங்களான அந்த அற்புதமான ”தற்கொடை” தியாகிகளை கரும்புலிகள் நாளில் நெஞ்சில் நிறுத்துவோம்.


















