டில்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகைக்கு வருகை தந்த சனே தகாய்ச்சிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜப்பான் பிரதமராக கடந்த ஆண்டு பதவியேற்ற சனே தகாய்ச்சி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். இதற்காக இந்தியாவின் தலைநகர் டில்லிக்கு நேற்று வருகை தந்த சனே தகாய்ச்சியை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் விமான நிலையத்தில் நேரில் வரவேற்றார். கடந்த ஆண்டு பதவியேற்ற பின்னர் தகாய்ச்சி மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இதுவாகும். இந்த பயணத்தில் பிரதமர் மோடியை சந்தித்து இரு நாடுகளின் இருதரப்பு உறவுகள் பற்றி அவர் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். பொருளாதார உறவுகளை வலுப்படுத்துதல், குறைகடத்திகளுக்கான உறுதியான விநியோக சங்கிலிகளை மேம்படுத்துதல் மற்றும் செயற்கை நுண்ணறிவில் (ஏ.ஐ.) ஒத்துழைப்பை உறுதிப்படுத்துதல் ஆகிய விஷயங்கள் அவருடைய இந்திய பயணத்தின் முக்கிய நோக்கங்களாக இருக்கும். மேலும் டெல்லியில் நடைபெறும் 16-வது இந்திய-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டில் அவர் பங்கேற்க உள்ளார். இந்நிலையில், டில்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகைக்கு வருகை தந்த சனே தகாய்ச்சிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முப்படைகளைச் சேர்ந்த அணிவகுப்புக் குழுக்கள் மற்றும் இசைக்குழுக்கள் சார்பில் ஜப்பான் பிரதமருக்கு மரியாதை நிமித்தமான அணிவகுப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டு ஜப்பான் பிரதமரை வரவேற்றார்.


















