பிரேசில் அதிபராக லுலா டா சில்வா 4-வது முறையாக வெற்றி பெற்றார். பிரேசில் நாட்டின் அதிபராக லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா இருந்து வருகிறார். இந்த நிலையில், நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், அதிபர் சில்வாவுக்கும், முன்னாள் அதிபரின் மூத்த மகன் மற்றும் வலதுசாரி எம்.பி.யான பிளாவியோ போல்சோனாரோவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில், உலகமே ஆவலோடு எதிர்பார்த்த பிரேசில் நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் இந்திய நேரப்படி காலை வெளியிடப்பட்டன. முதல் சுற்று முடிவில், போல்சோனாரோ 47 சதவீத வாக்குகளுடன் முன்னிலை பெற்றார். லுலா 45 சதவீத வாக்குகளுடன் 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதனால், போல்சோனாரோவே வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. கணிப்புகளும் அதனையே தெரிவித்து இருந்தன. ஏனெனில், அந்நாட்டில் 1980-ம் ஆண்டுக்கு பின்னர், முதல் சுற்று முடிவில் தோல்வியை தழுவியவர் வெற்றி பெற்றதில்லை. ஆனால் இதனை முறியடித்து சில்வா இறுதி சுற்று முடிவில் 51.7 சதவீத வாக்குகளை பெற்று அதிரடியாக வெற்றி பெற்றார். 48.2 சதவீத வாக்குகளுடன் போல்சோனாரோ பின்னுக்கு தள்ளப்பட்டு தோல்வியை தழுவினார். இதனால் சில்வா, 4-வது முறையாக அதிபராகியுள்ளார். இதனை தொடர்ந்து, அவருடைய தொழிலாளர் கட்சிக்கான சிவப்பு வண்ணத்தில் ஆடைகளை அணிந்து ஆயிரக்கணக்கான மக்கள் ரியோ டி ஜெனீரோவின் தெருக்களில் திரண்டனர். அவருடைய ஆதரவாளர்களில் பலர் ஆனந்த கண்ணீர் வடித்து, மகிழ்ச்சிக்கான கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.
















