12 ஆண்டுகளுக்கு பிறகு நான் ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்கிறேன். இந்த வாய்ப்பை ஜித்து மாதவனின் படத்தில் பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று நடிகை நஸ்ரியா கூறியுள்ளார்.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 47-வது படத்தை பிரபல மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கி வருகிறார். இப்படத்தில் மலையாள நடிகர்கள் நஸ்லேன், நஸ்ரியா நசீம், லால், ஆனந்தராஜ், ராஜ்பிரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘ஆவேஷம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜித்து மாதவன் இயக்கும் இப்படத்தில் சூர்யா காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட், ழகரம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார். வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்கிறார். சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், நடிகர் சூர்யாவின் இரண்டாவது தயாரிப்பு நிறுவனமான ழகரம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்படுகிறது. ‘சீன்’ திரைப்படம் நவம்பர் 6-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சி, துபாயில் உள்ள சிலிகான் சென்ட்ரல் மாலில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நஸ்ரியா பேசுகையில், “12 ஆண்டுகளுக்கு பிறகு நான் ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்கிறேன். இந்த வாய்ப்பை ஜித்து மாதவனின் படத்தில் பெற்றது எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய சினிமா பயணத்தில் நான் கடந்து வந்த மிகவும் அற்புதமான அனுபவங்களில் ஒன்றாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு இருந்தது. சூர்யா சார், நஸ்லென் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள். அனைவரும் திரையரங்குகளுக்குச் சென்று ‘சீன்’ திரைப்படத்தைப் பாருங்கள். படம் அடிப்பொலியாக வந்திருக்கிறது. நாங்கள் சினிமாக்களை தீவிரமாகப் பார்க்கத் தொடங்கிய காலத்தில் இருந்தே சூர்யா சாரை பார்த்து வளர்ந்திருக்கிறோம். நாங்களும் இதுபோன்று தீவிரமாக சினிமாக்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதற்கு சூர்யா சாரும் ஒரு முக்கியக் காரணம். அவருடன் இணைந்து நடித்தது மிகவும் ஜாலியாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர். அவருடன் நேரத்தைச் செலவழித்து இந்தப் படத்தில் பணியாற்றியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி” என்றார்.
















