2027ஆம் ஆண்டுக்கான அநுர அரசின் வரவு செலவுத்திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பது என 13 ஆம் திகதியே தமிழரசுக்கட்சியின் தலைமை முடிவு எடுத்து விட்ட நிலையில் தமிழரசின் தலைமைக்கு விசுவாசமானவர்களினால் வாக்கெடுப்புக்கு முதல் நாளான 19 ஆம் திகதி கூட ”அந்த சந்திப்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை” என ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டது ஏன்? வாக்கெடுப்பு தினத்தில் கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவரே தனது கட்சி சார்பில் இறுதி உரையாற்றி கட்சியின் முடிவை அறிவிக்க வேண்டும். அந்த வகையில் இரா.சாணக்கியன் இறுதி உரையாற்றாது சிறீதரனின் தலையில் அதனை சுமத்தியது ஏன்?
—-கே.பாலா
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளினால் கடந்த 20 ஆம்திகதி நிறைவேற்றப்பட்டது.இந்த 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 157 வாக்குகளும் எதிராக 60வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையிலேயே 97மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது .இந்த வாக்களிப்பில் 7 எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 3 ஆவது வரவு செலவுத்திட்டமான 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் கடந்த 12 ஆம் திகதி ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுரகுமார திசாநாயக்கவினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு சுமார் 5 மணி நேர உரை நிகழ்த்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகி 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையான 7 நாட்கள் இடம்பெற்ற நிலையிலேயே வெள்ளிக்கிழமை வாக்கெடுப்பு இடம் பெற்றது
இந்த வாக்கெடுப்பில் ஆதரவாக அரசாங்கத் தரப்பினர் வாக்களித்த நிலையில் இதனை எதிர்த்து பிரதான எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி,அதன் பங்காளிக்கட்சிகளான கடந்த முறை வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் பொதுஜன பெரமுன ,புதிய ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகள் எதிராக வாக்களித்தன. ஐக்கிய தேசியக்கட்சியின் ஒரே எம்.பி.யான ஜீவன் தொண்டமான், சர்வஜன அதிகாரம் கட்சியின் ஒரே எம்.பி. யான திலித் ஜயவீர, தொழிலாளர்கட்சியின் ஒரே எம்.பி. யான காதர் மஸ்தான் ஆகியோர் உட்பட7 எம்.பி.க்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை
தமிழ் தேசியக்கட்சிகள் சார்பில் தேசியமக்கள் சக்தி அரசாங்கத்தின் கடந்த இரு வரவு செலவுத் திட்டங்களிலும் நடு நிலை வகித்த இலங்கை தமிழரசுக்கட்சி, கடந்த முறை ஆதரவாக வாக்களித்த செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.யின் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியவை இம்முறை எதிர்த்துவாக்களித்த நிலையில் கடந்த முறை போன்றே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அர்ச்சுனா இராமநாதன் எம்.பி தலைமையிலான சுயேட்சைக்குழு 17 ஆகியனவும் எதிர்த்து வாக்களித்தன
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 118 மேலதிக வாக்குகளினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டநிலையில் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளினால் மட்டுமே நிறை வேற்றப்பட்டமை அநுரகுமார அரசாங்கத்துக்கு எதிர்த்தரப்பு பக்கத்திலிருந்த ஆதரவு குறைவடைந்து வருவதனையும் அநுரகுமார அரசாங்கம் மக்கள் நலன் திட்டங்களிலிருந்து விலகிச்செல்வதனையும் வெளிப்படுத்தியுள்ளது.
இக்கட்டுரையின் நோக்கம் அநுரகுமார அரசாங்கத்தின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பில் ஆராய்வதல்ல. மாறாக இந்த வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பை மையமாக வைத்து தமிழ் தேசியக்கட்சிகளின் தாய்கட்சியாக தம்மைக் கூறிக்கொள்ளும் இலங்கைத்தமிழரசுக்கட்சிக்குள் நடந்த காய் நகர்த்தல்கள்,குழிபறிப்புக்கள், காட்டிக்கொடுக்கும் முயற்சிகள், காலைவாரிவிடும் சதிகள், நல்லவர்கள்போல்,ஒன்றுமே தெரியாதவர்கள்போல் காட்டிக்கொள்ளும் நடிப்புக்கள் பற்றியது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 3 ஆவது வரவு செலவுத்திட்டமான 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் கடந்த 12 ஆம் திகதி ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுரகுமார திசாநாயக்கவினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு சுமார் 5 மணி நேர உரை நிகழ்த்தப்பட்ட நிலையில் அதுதொடர்பிலான குழு நிலைவிவாதத்திற்கு 7 நாட்கள் ஒதுக்கப்பட்டு 20 ஆம் திகதி இந்த வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டது. இவ்வாறு அறிவிக்கப்பட்ட நாள் முதல் அநுரகுமார அரசாங்கத்தின் இந்த வரவு செலவுத்திட்டத்தை தமிழ் தேசியக்கட்சிகள் எதிர்க்குமா? அல்லது கடந்த முறைபோல் வாக்களிப்பில் பங்கேற்காது நழுவிக்கொள்வார்களா என்ற கேள்விகள், சந்தேகங்கள் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்தன.
ஏனெனில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2 ஆவது வரவு செலவுத்திட்டமான 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி எதிர்த்து வாக்களித்த நிலையில் இலங்கைத்தமிழரசுக்கட்சி ஜனாதிபதிக்கு நல் லெண்ணத்தை வெளிப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு வாக்களிப்பில் பங்கேற்காது நழுவியது. அதேவேளை ஜனநாயகத்தமிழ் தேசிய கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்திய வன்னிமாவட்ட எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் ஆதரவாக வாக்களித்தார். அதனால் தான் தமிழ் மக்களுக்கு எதிரான பல விடயங்களை இந்த அநுரகுமார அரசும் தொடர்ந்தும் முன்னெடுத்து வரும் நிலையில் தமிழ் தேசியக்கட்சிகள் கடந்த முறைபோன்று இம்முறையும் ஆதரவாக வாக்களித்தும் வாக்களிப்பிலிருந்து நழுவும் போக்கையும் முன்னெடுக்குமா என்ற சந்தேகங்கள் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்தன
கஜேந்திரகுமார்பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி இம்முறையும் எதிர்த்தே வாக்களிக்கும் என்பது தமிழ் மக்களுக்கு நன்குதெரிந்திருந்தாலும் உட்கட்சிப் பிளவுகளினாலும் தலைமைத்துவ சர்வாதிகாரத்தனத்தாலும் குழு அரசியலினாலும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியும் சில தவறான விடயங்களினால் அரசாங்கத்தின் கண்காணிப்புக்குள் இருக்கும் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.யும் தன்னைதற்காத்துக்கொள்வதற்காகவும் ஆதரவாக வாக்களிக்கலாம் என்ற சந்தேகம் தமிழ் மக்களுக்கிருந்தது.இதனை இலங்கைத்தமிழரசுக்கட்சியும் செல்வம் அடைக்கலநாதனும் தெரிந்தே வைத்திருந்தனர் .
இதனால்தான் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினருக்கும் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கிடையே விசேட கலந்துரையாடலொன்று வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அதாவது ஜனாதிபதியின் வரவு செலவுத்திட்ட உரை நிகழ்ந்த மறுநாளான 13 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தக்கலந்துரையாடலை கொழும்பில் உள்ள சுமந்திரனின் இல்லத்தில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டாலும் அங்குநடந்தால் சிறீதரன் எம்.பி பங்கேற்கமாட்டார் என்பதனால் அது பின்னர் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது.
இதில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இதன்போது ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டுள்ள அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டது. அதில் இந்த வரவு செலவுத்திட்டத்தை எதிர்ப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டு எம்.பி. க்களுக்கு தலைமையினால அறிவிக்கப்பட்டது. கட்சியின் முடிவுக்கு கட்டுப்படுவதாக சிறீதரன் உட்பட சில எம்.பி.க்கள் உறுதியளித்த நிலையில் ஒரு சிலர் மாற்றுக் கருத்துக்களையும் முன்வைத்திருந்தனர்.
இதன்பின்னர்தான் இந்த விடயத்திலும் வழமைபோன்று சிறீதரனை பலிக்கடாவாக்கும் முயற்சியில் தலைமை காய்களை நகர்த்தியது. விவாதம் நடந்த 7 நாட்களில் சிறீதரன் எம்.பி. உரையாற்றுவதற்கான நேரம் தமிழரசுக்கட்சியின் இறுதி உறுப்பினராக வாக்கெடுப்பு நடக்கும் இறுதிநாளுக்கு ஒதுக்கப்பட்டது. ஏனெனில் விவாதத்தின் இறுதிநாளில் உரையாற்றும் கட்சியின் முக்கியஸ்தர்தான் தனது உரையில் இந்த வரவு செலவுத்திட்டத்தை ஆதரிப்பதா, எதிர்ப்பதா என்ற கட்சியின் முடிவைக்கூறி அதற்கான விளக்கங்களையும் முன்வைப்பார். இதன் மூலம் அநுரகுமார அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தை சிறீதரன் எம்.பி எதிர்ப்பதாக அறிவித்ததனால்தான் நாமும் எதிர்க்க வேண்டியேற்பட்டது என்ற காரணத்தைக்கூறி சிறீதரன் எம்.பி. யை அநுரகுமார அரசாங்கத்தின் பகையாளியாக்கி அதன்மூலம் சிறீதரனுக்கு எதிராக அரசாங்கத்தை செயற்பட வைத்து அதன்மூலம் சில விடயங்களை முன் நகர்த்துவதே தமிழரசுத் தலைமையின் நோக்கமாக இருந்தது.
20 ஆம் திகதி வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில் இந்த வரவு செலவுத்திட்டத்தை எதிர்ப்பது என்ற முடிவை 13 ஆம் திகதி நடத்திய தமது கட்சியினருடனான சந்திப்பில் தமிழரசுக்கட்சியின் தலைமை உறுதிப்படுத்தியிருந்தது. ஆனால் இந்த விடயம் ஊடகங்களுக்கு மூடி மறைக்கப்பட்டு இன்னும் இறுதித்தீர்மானம் எடுக்கப்படவில்லை என்ற சாரப்பட கருத்துக்கள் தமிழரசின் முக்கிய தரப்புக்களினால் வாக்கெடுப்பு நாள் வரை வெளியிடப்பட்டன.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பது என்று கடந்த 13ஆம் திகதி பாராளுமன்றத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழு, கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரோடு நடத்திய கூட்டத்தில் தீர்மானித்திருந்தது. கடந்த 13 ஆம் திகதி கூட்டத்தில் எடுத்தநிலைப்பாட்டை உத்தியோகபூர்வமாக மீண்டும் நினைவு படுத்தி கட்சியின் பாராளுமன்றக் குழுஉறுப்பினர்களுக்கு ஒரு செய்தியைஅனுப்பி வைத்திருந்தார் கட்சியின் செயலாளர் சுமந்திரன். அதே சமயம் அந்த விடயத்தை நினைவூட்டி கட்சியின்தலைவர் சி.வி.கே.சிவஞானம் சகல பாராளுமன்ற குழு உறுப்பினர்களுக்கும் செய்தி அனுப்பி இருந்தார். கட்சியின் சார்பில் கடைசியாகப் பேசுபவர் நாங்கள் ஏன் எதிர்த்து வாக்களிக்கின்றோம் என்பதைத் தனது உரையில் தெளிவுபடுத்தவேண்டும் என்பதையும் சிவஞானம் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 13 ஆம் திகதி கூட்டத்தில் எடுத்த நிலைப்பாட்டை 19ஆம் திகதி உத்தியோகபூர்வமாக மீண்டும் நினைவு படுத்தி கட்சியின் பாராளுமன்றக் குழு உறுப்பினர்களுக்கு ஒரு செய்தியை மீண்டும்அனுப்பி வைத்திருந்தார் கட்சியின் செயலாளர் சுமந்திரன்.இந்தப் பின்புலத்தில் கட்சியின் பாராளுமன்றக் குழு அதன் தலைவர் இரா.சாணக்கியன் தலைமையில் கூடிய போது அங்கு பிரசன்னமாகி இருந்த மட்டக்களப்பு மாவட்ட எம் .பி.ஸ்ரீநாத் வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்கக் கூடாது. குறைந்தபட்சம் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல்விடலாம் என்ற கருத்தை முன்வைக்க அதற்கு கட்சியின் வேறு ஓரிரு எம்.பிக்களும் ஆதரவு தந்த நிலையில் கட்சிமுடிவை மீறி நடவடிக்கை எடுக்க முடியாது என்று பாராளுமன்றக் குழு தலைவர் இரா.சாணக்கியன் தெரிவித்திருந்தார்.
ஆக இந்த வரவு செலவுத்திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பது என 13 ஆம் திகதியே தமிழரசுக்கட்சியின் தலைமை முடிவு எடுத்து விட்ட நிலையில் அந்த சந்திப்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என தமிழரசின் முக்கியஸ்தர்களினால் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டது ஏன்?அது மட்டுமல்ல வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்புக்கு முதல் நாள் கூட அதாவது 19 ஆம் திகதி ஊடகங்கள் தமிழசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவரிடம் நீங்கள் ஆதரவா எதிர்ப்பா எனக்கேட்ட போது அவரும் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லையெனக்கூறியது ஏன்?ஆக ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவை மூடிவைத்திருந்ததன் பின்னால் உள்ள காய் நகர்த்தல் சிறீதரனை பலிக்கடாவாக்குவதே..
இங்கு மேலே குறிப்பிட்டதுபோன்று . கட்சியின் சார்பில் கடைசியாகப் பேசுபவர் நாங்கள் ஏன் ஆதரித்து அல்லது எதிர்த்து வாக்களிக்கின்றோம் என்பதைத் தனது உரையில் தெளிவுபடுத்தவேண்டும். அந்த வகையில் அந்தப்பொறுப்பை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர்தான் நிறைவேற்ற வேண்டும். ஆக அதனை இரா.சாணக்கியன் எம்.பி.யே செய்திருக்க வேண்டும் .ஆனால் அவர் அதற்கு முந்தைய நாளிலேயே உரையாற்றிவிட்டு முடிவை அறிவிக்கும் பொறுப்பை சிறீதரனின் தலையில் திணித்து அவர் மூலம் வரவு செலவுத்திட்டத்தை எதிர்ப்பதாக அறிவிக்க வைத்து விட்டு ” நாம் நடுநிலை வகிக்கத்தான் இருந்தோம் ஆனால் சிறீதரன் தான் இதனை கடுமையாக எதிர்த்து வந்ததுடன் தமிழரசுக்கட்சி வரவு செலவுத்திட்டத்தை எதிர்ப்பதாக பகிரங்கமாகவும் அறிவித்து விட்டார். அதனால்தான் கட்சியின் கட்டுக்கோப்பை பாதுகாப்பதற்காக நாமும் எதிர்த்தது வாக்களிக்க வேண்டியிருந்தது” என்ற தகவலை அரசுக்கு தெரியப்படுத்தி அதன் மூலம் சிறீதரனுக்கு அரசாங்கத்தின் மூலம் நெருக்கடி கொடுப்பதே தமிழரசுத் தலைமையின் நோக்கமாக இருந்துள்ளது.
தமிழரசுத் தலைமையின் இந்த சூழ்ச்சிக்கு கிடைத்த உடனடிப் பலனாக சிறீதரன் எம்.பி. வரவு செலவுத்திட்டத்தை எதிர்ப்பதாக அறிவித்த பின்னர் உரையாற்றிய அரச தரப்பு அமைச்சர்கள் சிறீதரனை ஒரு தமிழினவாதியாகக் குற்றம்சாட்டி கடுமையாக விமர்சித்து பேசியிருந்த நிலையில் அமைச்சர் சந்திரசேகர் இன்னும் கடுமையாக ”ஒரு சிலர் வெறித்தனமான கருத்துக்களை முன்வைப்பதுடன், வெறித்தனமாக இனவாதத்தை தூண்டி அதன்மூலம் தமிழ் மக்களால் தேசிய மக்கள் சக்திக்கு வழங்கப்பட்டுள்ள இடத்தை பறிக்க முயற்சிக்கின்றனர்.
இங்கு உரையாற்றிய சிறீதரன் எம்.பி ஒரு விடயத்தை சுட்டிக்காட்டினார். கிளிநொச்சி மாவட்டத்தில் சாந்தபுரம் என்ற கிராமத்தில் 7 இளைஞர்களால் ஒரு பெண் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் குறிப்பிட்டிருந்தார்.அதேபோன்று கடந்த வாரத்தில் புதுக்குடியிருப்பு பகுதியில் மட்டக்களப்பில் இருந்து வந்த பெண் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதனுடன் தொடர்புடையவர்களாக அந்த பிரதேசங்களில் கசிப்புக்காரர்கள், போதைப் பொருள் வியாபாரிகள், பார்க்காரர்கள் இருக்கின்றனர். அவர்களின் உறவினர்கள் யார் என்று தேடிப் பார்க்க வேண்டும். இந்நிலையில் இவர்கள் தொடர்பில் பேசுகின்ற போது சிறீதரன் வாய்திறக்க மாட்டார். அதேபோன்று மண் மாபியாக்கள், வட்டிக்காரர்கள் தொடர்பில் பேசும் போதும் வாய் திறக்க மாட்டார் . இதனால் இவ்வாறான குற்றங்களின் பின்னால் சிறீதரன் இருப்பதாக கிளிநொச்சி மாவட்ட மக்கள் சந்தேகிக்கின்றனர்”என்றார்.
இதனைத்தான் தமிழரசுத் தலைமையும் எதிர்பார்த்தது. அதுவே நடந்தது. அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தை வைத்துக்கூட சிறீதரன் எம்.பி.யை பழிவாங்க வேண்டுமென நினைக்குமளவுக்கு தமிழரசுத் தலைமை பலவீனமாக இருப்பதுதான் வேதனைக்குரியது.
















