கனடா வாழ் “இந்து மதக்காவலர்,, தொழிலதிபர் , மற்றும் தமிழ்ச் சமூகத் தலைவர் சுகுமார் கணேசன் அவர்களின் உயரிய உபயமாக இந்த திருப்பணி மிகுந்த பொருட்செலவில் நிஜமாகியுள்ளது
இலங்கையில் முருகன் வீற்றிருக்கும் திருத்தலம் என்றவுடன் முதலில் எமது மனக்கண்ணின் முன்னால் தோன்றுவது கந்தனின் கதிர்காமம் என்னும் புனிதத் தலமே ஆகும்.
தென்னிலங்கையில் மாணிக்க கங்கைக் கரையில் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் கதிர்காமக் கந்தனை, சைவர்கள் சரித்திர காலத்திற்கு முற்பட்ட காலம் தொடக்கம் எமது அடியார்கள் வழிபட்டு வந்திருக்கிறார்கள். பக்தர்களால் பெருநம்பிக்கையுடன் வழிபடப்படும் கதிர்காம முருகப் பெருமான் மீது, காலத்துக்கு காலம் பாடப்பட்ட தோத்திரப் பாடல்கள் எண்ணில் அடங்காதவை. தென்னிலங்கையிலே வீற்றிருந்து அருள் பாலிக்கும் குமரக்கடவுளான கதிர்காமக் கந்தனை தரிசித்து அருள் பெறும் பொருட்டு, இந்தியாவில் இருந்தும், வட இலங்கை மற்றும் இலங்கையின் ஏனைய பாகங்களில் இருந்தும் கதிர்காமத்திற்கு பாத யாத்திரை செல்வது வழி வழியாக வந்த மரபு ஆகும்.
அவ்வாறான முருகன் குடிகொண்டதாக வணங்கப்பெற்று வந்த வரலாற்றுப் புகழ் மிக்க ஆலயத்தில் விக்கிரங்கள் எதுவும் இல்லாமல் வழிபாடுகளும் பூஜைகளும் இத்தனை நூற்றாண்டுகளாக இடம்பெற்றுள்ளன என்பதை எம்மால நம்ப முடியுமா?
புராதன காலம் தொட்டு நம்பிக்கையோடும் பக்தியோடும் வழிபடப்படும் கதிர்காமத்தின் தலப் பெருமையையும், கந்தன் அருளாட்சியையும், சமயக் கிரியைகளையும், வழிபாட்டு முறைகளையும், உயர்ந்த வாழ்வியலையும் அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்வது காலத்தின் கட்டாயம் ஆகும். இதன் காரணமாக வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் பெரிய ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யும் பொருட்டு கதிர்காமக் கந்தனுக்கும் வள்ளியம்மைக்கும் தெய்வயானையம்மைக்கும் திருவுருவச்சிலை திருப்பணி தென்னிந்தியாவில் நிறைவேற்றப்பட்டு, இலங்கைக்கு முருகப் பெருமான் இருபெரும் சக்திகளுடன் தற்பொழுது எழுந்தருளியுள்ளார். கதிர்காமம் ஆலயம் தோன்றிய வரலாற்றை நாம் ஆராயும் போது. பல கதைகள் எமக்கு கூறப்பட்டுள்ளன.
இவ்வளவு சிறப்புக்கள் கொண்ட பழனி மலை நவபாஷாண தண்டாயுதபாணி சிலையை போகர் சித்தர் ஸ்தாபிக்கும்போது, இடுப்புப் பகுதிக்கு மேல் பகுதி நிறைவு பெறவில்லை என இந்தியாவில் திருப்பணி செய்வித்து, தற்போது இலங்கையில் எழுந்தருளிய வள்ளியம்மை – தெய்வயானையம்மை சமேத கதிர்காமக் கந்தன் திருவுருவச் சிலைகளுக்கு சிறப்புப் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு வரும் மணி சிவராம கிருஷ்ண ஐயர் மகேஸ்வரக் குருக்கள் குறிப்பிடுகிறார். அதனால் கவலையுற்ற போகர் சித்தர் தனது குல தெய்வமான தொட்டச்சி அம்மனை நினைந்துருகி வழிபட்டு, அம்மன் ஆணைப்படி இலங்கைக்கு வருகைதந்து கதிர்காமத்தில் தவத்தை மேற்கொண்டு, அருள் பெற்று, மீண்டும் பழனி மலை சென்று நவபாஷாண தண்டாயுதபாணி சிலையை முழுமையாக ஸ்தாபித்தார் என்றும் மேற்படி வரலாற்றுக்குறிப்புக்களில் தெரிவிக்கப்படுகின்றன.
போகர் சித்தர் பழனியில் சமாதி அடைவதற்கு முன்னர், அவர் கதிர்காமத்துக்குச் சென்று 1,008 தாமரை இதழ் வடிவம் கொண்ட இயந்திர தலம் அமைத்தார் எனக் கூறப்படுகின்றது.
அத்தடன். முருக வழிபாட்டுக்கு உரிய ஆலயங்களுக்குள் மூர்த்தி, தலம் மற்றும் தீர்த்தம் மூன்றும் பெருமை பெற்று தென்னிலங்கையில் உள்ள கதிர்காமம் திகழ்கின்றது.
கதிர்காமம் என்ற சொல் வருவதற்கான காரணம் ஆய்வாளர்களால் பலவாறு கூறப்படுகிறது. ‘கதிரகாமம்’ என்னும் சொல் ‘கார்த்தியேக கிராம’ என்பதன் மருஉருவெனவும், யானைவாழ் கிராமம் என்று பொருள்படும் ‘கஜரகம’ என்பதன் சிதைவென்றும், கதிர்காமம் என்பது, கடவுள் தன்மையுடைய ஒளியும் அன்பும் கலந்த இடம் எனவும், ஆறு தீப்பொறிகளால் பிறந்த ஆறுமுகன், வள்ளி அம்மை மேல் காதல் கொண்டு மணம் புரிந்த இடமென்றும் சிலர் பொருள் கொள்வர்.
இவ்வளவு சிறப்புப் பெற்ற கதிர்காமத்தில் முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம் கடந்த 92 வருடங்களாக நடைபெறாத காரணத்தால், நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் துன்பங்கள் பல ஏற்படுவதாக சிவராம கிருஷ்ண ஐயர் மகேஸ்வரக் குருக்கள் அவர்கள் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
“இந்தக் தெய்வக் குற்றங்களை நீக்கும் வகையில் முன்னாள் வட மாகாண ஆளுனர் திரு. ஜீவன் தியாகராஜா அவர்களின் எண்ணக் கருவுக்கு முருகன் அருளாலும், ஆசியாலும், முருக பக்தர்கள் பலரின் ஒன்றிணைந்தார்கள். அவர்களில் ஒருவராக கனடா வாழ் “இந்து மதக்காவலர்,, தொழிலதிபர் , மற்றும் தமிழ்ச் சமூகத் தலைவர் சுகுமார் கணேசன் அவர்களும் இணைந்து தனது உயரிய உபயமாக இந்த திருப்பணிக்கு மிகுந்த நிதியை டாலர்களாக அள்ளிக் கொடுத்து அந்தப் பொருட்செலவில் மூன்று அழகியதும் தெய்வீகம் நிறைந்தைவையுமான விக்கிரகங்கள் அமைந்து குழுவினரின் கனவு நிஜமாகியுள்ளது.
அவர்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு கதிர்காமத்தில் கந்தசஷ்டி காலத்தில் திருக்கல்யாணம் நடாத்துவதற்கும் முயற்சித்தார்கள்.
ஆயினும் கதிர்காமம் பெரிய கோயிலில் விக்கிரகங்கள் எதுவும் இல்லாத காரணத்தாலும், தெய்வயானை அம்மன் கோயிலில் 5 – 6 அங்குல விக்கிரங்கள் மாத்திரம் இருந்த காரணத்தாலும், செய்வதறியாது அவர்கள் திகைத்தார்கள். முருகப் பெருமானின் திருவிளையாடல் ஆரம்பமானது. கந்தசஷ்டி காலத்தில் கதிர்காமத்திற்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்த, வத்தளையைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட பக்தர் ஒருவர், அவ்வருடம் ஆலயத்திற்கு வரும்போது 2 1/2 அடி உயரம் கொண்ட முருகன், வள்ளியம்மை, தெய்வயானையம்மை திருவுருவச் சிலைகளை ஆலயத்திற்கு திருப்பணியாக வழங்கினார். ஆகவே முருகன் அருளால் அவ்வருடம் தெய்வயானையம்மை ஆலயத்தில் திருக்கல்யாணம் சிறப்பாக இடம்பெற்றது.
முன்னாள் வட மாகாண ஆளுனர் திரு. ஜீவன் தியாகராஜா அவர்களுடன், மணி சிவராம கிருஷ்ண ஐயர் மகேஸ்வரக் குருக்கள், திரு. வியாசா கல்யாணசுந்தரம், திரு. மகரகாந்தன், திரு. அருண், திருமதி. உமா உள்ளடங்கலான பக்தர்கள் பலர் முருகன் அருளால் ஒன்றிணைந்தார்கள். அதன் பலனாக முருகப் பெருமானுக்கு கடந்த 2024 ஆம் ஆண்டும் இரண்டாவது முறையாகவும் தெய்வயானையம்மன் ஆலயத்தில் திருக்கல்யாணம் வெகு சிறப்பாக இடம்பெற்றது. ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திர தினத்தில் கதிர்காமம் பெரிய ஆலயத்தில் முருகப் பெருமானுக்கு அபிடேகம் மற்றும் யாக பூசை செய்விக்க விரும்பிய திரு. ஜீவன் தியாகராஜா அவர்கள், தேவையான அனுமதியை கதிர்காம தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர நிலமே அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
‘முருகு என்னும் சொல்லுக்கு ‘அழகு’ என்பது பொருள் ஆகும். ஆகவே அழகன் முருகனுக்கும் அவனோடு உடன் உறைகின்ற இரு பெரும் சக்திகளான வள்ளியம்மை – தெய்வயானையம்மை ஆகியோருக்கும் திருவுருவச் சிலைகளை வடிப்பது என்பது அத்தனை இலகுவான காரியம் அல்ல. பழனி சித்தர் உத்தரவுக்கு அமைவாக, சுவாமிமலை திருத்தலத்துடன் தொடர்புபட்ட தலைசிறந்த ஸ்தபதிகள் திருவுருவச் சிலைகளை வடித்தார்கள். சைவத்தொண்டு ஆற்றுவதிலும் தமிழ்த்தொண்டு ஆற்றுவதிலும் பெரு விருப்பம் கொண்ட கனடா நாட்டின்பிரபல வர்த்தகர் திரு. கணேசன் சுகுமார் அவர்கள், தனது சர்வதேச வர்த்தகப் பங்காளரான . மகாதேவன் அவர்களோடு இணைந்து, வள்ளியம்மை – தெய்வயானையம்மை சமேத கதிர்காமக் கந்தன் திருவுருவச் சிலைகளை இந்தியாவில் வடித்து , முன்னாள் வட மாகாண ஆளுனர் திரு. ஜீவன் தியாகராஜா அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைவாக இலங்கைக்குத் தருவிப்பதற்கான திருப்பணியை முழுமையாக நிறைவேற்றினார்.
கனடாவின் வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பு வழங்கிவருவதுடன், முருகன் மீது தீராத பக்தியும் அன்பும் கொண்ட கணேசன் சுகுமார் அவர்களின் முழுமையான திருப்பணியின் பலனாக, இந்தியாவில் திருப்பணி செய்யப்பட்ட திருவுருவச் சிலைகளுக்கு, காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெகத்குரு ஶ்ரீ விஜேந்திர சங்கராச்சார்ய சுவாமி, வடக்கன்பட்டி சுவாமி, புலிப்பாணி சித்தர் முதலிய சமயப் பெரியார்களும் அந்தணப் பெருமக்களும் முழுமையான பூஜை வழிபாடுகள் இயற்றியதுடன், முருகப் பெருமான் இரு பெரும் சக்திகளுடன் கண் திறந்து அருள் பாலித்தார்.
இறுதியில் இவ்வாண்டு 2025. ஜனவரி மாதம்19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை முருகப் பெருமானுக்கு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. தொடர்ந்து காலை 11 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் ஊடாக கடல் தாண்டி எடுத்து வரப்பெற்ற முருகப் பெருமான் கட்டுநாயக்க விமான நிலையத்தில் எழுந்தருளினார். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த திருவுருவச் சிலைகளுக்கு, ஶ்ரீலங்கன் விமான சேவை மற்றும் சுங்கத் திணைக்களத்தில் சிறப்பு பூஜை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அவற்றுக்கு அங்குள்ள அரச அதிகாரிகள் தங்கள் பூரண ஆதரவை வழங்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை சென்றடைந்த வள்ளியம்மை – தெய்வயானையம்மை சமேத கதிர்காமக் கந்தன் திருவுருவச் சிலைகளுக்கு, ஏற்கனவே இந்தியாவில் பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்ட காரணத்தினால் இலங்கை சுங்கத்துறையினர் துரிதமாக செயற்பட்டு, பரீட்சித்து, தேவையான அனுமதிகளை வழங்கினார்கள். அத்துடன் வள்ளியம்மை – தெய்வயானையம்மை சமேத கதிர்காமக் கந்தன் திருவுருவச் சிலைகளுக்கு பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கான அனுமதிகளையும் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. வள்ளி – தெய்வயானை உடனுறை முருகப்பெருமானுக்கு, முன்னாள் வட மாகாண ஆளுனர் திரு. ஜீவன் தியாகராஜா தலைமையிலான குழுவினர் சென்று பூஜை வழிபாடுகளை மேற்கொண்டனர்.
கொழும்பில் இருந்து 19ம் திகதி ஞாயிறு இரவு 11 மணிக்குப் புறப்பட்டு, 20ம் திகதி திங்கட்கிழமை காலை மூளாய் முருகன் ஆலயத்தில் எழுந்தருளிய வள்ளியம்மை – தெய்வயானையம்மை சமேத கதிர்காமக் கந்தனுக்கு பிராயச்சித்த பூஜை இடம்பெற்றது. தொடர்ந்து அன்றைய தினம் மதிய வேளையில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு, ஆலயத் திருப்பணி இடம்பெற்று வரும் வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் எழுந்தருளிய கதிர்காமக் கந்தனை வட மாகாண பக்தர்கள் தரிசித்து அருள் பெற்று வருகிறார்கள்.
எதிர்வரும் நாட்களில் செல்வச்சந்நிதி, உகந்தை, மொனராகலை ஊடாக வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் பெரிய ஆலயத்தில் எழுந்தருளவுள்ள கதிர்காமக் கந்தனுக்கும் வள்ளியம்மைக்கும் தெய்வயானையம்மைக்கும் நித்திய – நைமித்திய பூஜைகள் இடம்பெறவுள்ளன. இதன்மூலம் .இலங்கை வரலாற்றில் முதல்முறையாக கதிர்காம கந்தன் ஆலயத்தில் திருமுருகனுக்கு விக்கிரக வழிபாடு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது“ தற்போது காங்கேசன்துறை, மாவிட்டபுரம், கந்தசுவாமி ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பெற்று தினமும் விசேட அபிசேகங்கள் இந்த மூன்று விக்கிரகங்களுக்கும் நடைபெறுகின்றன. இன்னும் சில நாட்களில் நல்லூர் கந்தன் ஆலயம், செல்வச்சந்நிதிமுருகன் ஆலயம் , உகந்தை முருகன் ஆலயம் அகியவற்றுக்கு எடுத்துச் செல்லப்பெற்று , மொனராகலை ஊடாக கதிர்காமத்திற்கு முருகப் பெருமானை திருவுலாவாக அழைத்துச் செல்லும் பொருட்டு ஏற்பாட்டுக் குழுவினர் ஆயத்தங்களை முன்னெடுத்துள்ளனர். இந்தத் திருப்பணியை பூரணமாக நிறைவேற்ற முன்னாள் வட மாகாண ஆளுனர் திரு. ஜீவன் தியாகராஜா மற்றும் உயரிய உபயகாரர் கனடா வாழ் கணேசன் சுகுமார் உட்பட திருப்பணிக் குழுவினர் அயராது பணியாற்றி வருகின்றனர்.
பிற்குறிப்பு:-இந்தியா தமிழகத்தில் தந்தைக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசித்த சுவாமிமலையில் சிறந்த சிற்பாசாரியாரினால் முறைப்படி வார்ப்பு செய்யப்பட்டு சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்பட்டு பழனி ஶ்ரீதண்டாயுதபாணி திருக்கோவிலில் விஷேட வழிபாடுகள் நடைபெற்று, தமிழகத்தின் பல ஆலயங்களிலும், ஈழத்திலும் முருகன் ஆலயங்களிலும் விசேட பூஜைகள் , விழாக்கள்,பிரார்த்தனைகள் நடைபெற்று ஈழத்தின் திருப்புகழ் பாடப்பெற்ற முருகனின் கதிர்காமத்தில் ஸ்தாபிற்பதற்காக வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு இலங்கையில் பலபாகங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. விரைவில் கதிர்காம கந்தன் ஆலயத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது