2020ம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ‘மூக்குத்தி அம்மன்’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ‘மூக்குத்தி அம்மன்’ முதல் பாகத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்திலும் ஆர்ஜே பாலாஜி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இப்படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்கவுள்ளார். இப்பாகத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் உடன் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். சுந்தர் சி இயக்குகிறார் சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா, ரெஜினா கசான்ட்ரா மற்றும் பலர் நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் பூஜையை சமீபத்தில் சென்னையில் பிரமாண்டமாக நடத்தினார்கள். இந்த பூஜையில் நயன்தாரா, குஷ்பு, மீனா, ஹிப்ஹாப் ஆதி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர். இவர்கள் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில், ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் முதல்காட்சி பதாகை நாளை காலை 10 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
























