தமிழ்நாட்டிற்கு எதிரான போக்கை மோடி அரசு தொடர்ந்து பின்பற்றி வருகிறது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழ்நாட்டில் சாம, பேத, தான தண்டங்களைப் பயன்படுத்தி எப்படியாவது பா.ஜ.க.வை காலூன்ற வைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் அ.தி.மு.க.வை நிர்ப்பந்தப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள கூட்டணி கட்சியினரின் முதல் அரங்கேற்றம் மதுராந்தகத்தில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டணிக்கு பெயர் அ.தி.மு.க. கூட்டணியா ? தேசிய ஜனநாயக கூட்டணியா ? என்கிற குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது. முரண்பட்டவர்களின் சந்தர்ப்பவாத கூட்டணியாக இது அமைந்திருக்கிறது. இக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியை விமர்சிப்பதிலேயே தனது உரையின் பெரும் பகுதியை செலவழித்திருக்கிறார். இந்தியாவிலேயே பா.ஜ.க.வை கடுமையாக எதிர்க்கிற ஒரு மாநிலமாக தமிழ்நாடு இருப்பதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தமிழ்நாடு பா.ஜ.க.வையும், நரேந்திர மோடியையும் தொடர்ந்து எதிர்த்து வருவதற்கு நியாயமான காரணங்கள் நிறைய உள்ளன. இதனால் தான் 2019, 2024 மக்களவைத் தேர்தல்களில் பா.ஜ.க.வுக்கு ஒரு தொகுதி கூட கொடுக்காமல் மக்கள் தோற்கடித்து பாடம் புகட்டினார்கள். தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை எதிர்ப்பதற்கு காரணம் ஒன்றிய அரசின் பாரபட்ச போக்கு தான். தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களை வஞ்சிக்கும் நீட் தேர்வு திணிப்பிற்கு விலக்கு அளிக்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநரும், குடியரசுத் தலைவரும் மறுத்து வருகிறார்கள். கல்வித்துறைக்கு சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் மூலம் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூபாய் 3458 கோடி. தமிழ்நாடு மும்மொழி திட்டத்தை ஏற்றுக் கொண்டால் தான் நிதி வழங்கப்படும் என்று கூறி இந்தி மொழியை ஒன்றிய அரசு திணிக்க முயல்கிறது. இது நேரு வழங்கிய உறுதிமொழிக்கும், ஆட்சி மொழிகள் சட்டத் திருத்தத்திற்கும் எதிரானதாகும். தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றும் மசோதாக்களுக்கு அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக ஆளுநர் ஒப்புதல் தர மறுத்து முடக்கி வருகிறார். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் ஒப்புதல் தர மறுக்கப்படுகிறது. எனவே, தமிழ்நாட்டில் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் எத்தனைமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும், ஒன்றிய பா.ஜ.க. அரசின் தமிழ்நாடு விரோத போக்கிற்கு 2026 சட்டன்றத் தேர்தலில் மக்கள் உரிய பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்.என தெரிவித்துள்ளார்.
























