உலகின் முதன்மொழி ஓங்கு தமிழே!
உயர்ந்த தாயாய் உயர்ந்தவளே!
வலம்வரும் பூமியில் மான்புறு ஓசையாய்
வீச்சாய் மிளிர்கிற மாதே!
வள்ளுவன் தந்த வான்புகழ் குறளை
வாழ்நாள் முழுவதும் ஓதிடவே!
பள்ளிகள் தோறும் படிக்கக் கொடுத்தே!
பாடலாய்ப் பாடிக் காட்டிடுவோம்.
அவ்வையார் அருளிய ஆத்தி சூடியை
ஆர்வமாய்க் கற்றுத் தெளிவோமே!
அவ்வியம் பேசுதல் ஆக்கத்திற் கழிவென்று
ஆரம்ப வயதிலே சொல்லிடுவோம்.
தேவாரம் திருமுறை தெளிவாய்க் கற்றுமே!
தினமும் அதனைப் பாடிடுவோம்
ஆவாரம் பூப்போன்ற அழகு தமிழை
ஆனந்த மாகவே கற்றிடுவோம்.
தேனினும் இனிய செந்தமிழ் மொழியை
தேசம் எங்கும் ஒலித்திடவே!
வானிலும் வலம்வர வழிவகை செய்துமே!
வாகை சூடிட வைத்திடுவோம்.
புலம்பெயர் நாட்டில் பரவியே வாழும்
பழம்பெரும் தமிழர் நாமெலாம்
நலமுடன் தமிழை வாழ வைக்கவே!
நம்பிள்ளை நம்மொழி கற்கட்டுமே!
ஆக்கம் …….. பாவலர் மார்க்கம் சந்திரன்.
416 844 7453.
உலக தாய்மொழி தினம் February 21
























