திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் உள்ளிட்ட 6 பேரின் படுகொலைகள் தொடர்பாக சி ஐ டி யினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடை சட்டத்தில் வைக்கப்பட்டிருந்த ரி.எம்.வி.பி கட்சி அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள்; கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமாரை எதிர்வரும் 8ம் திகதி வரை மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் 2ம் திகதி அன்று வியாழக்கிழமை (02) உத்தரவிட்டார்.
கடந்த 2007ம் ஆண்டு ஜூன் 28 ம் திகதி திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் விநாயகபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து திருக்கோவிலுள்ள பிரதேச சபையை நோக்கி பிரயாணித்த போது அவரை விநாயகபுரம் கோரக்களப்பு வீதியில் வைத்து இனம் தெரியாத துப்பாக்கிதாரிகள் படுகொலை செய்தனர்
இச் சம்பவம் தொடர்பாக அவரது மனைவியார் படுகொலை செய்யப்பட்ட தனது கணவருக்கு நீதி கோரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார் இந்த விசாரணை கடந்த கால அரசாங்கத்தினால் கிடப்பில் இருந்து வந்துள்ளது
இதையடுத்து இந்த படுகொலை செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பாக அவரது மனைவியர் கடந்த 2025ம் ஆண்டு சிஜடி யினரிடம் முறைப்பாடு தெரிவித்ததையடுத்து அவர்கள் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இதனுடன் தொடர்புபட்ட சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமார் கடந்த 2025 ஜூலை 6ம் திகதி திருக்கோவில் வைத்தும் அவரது சகாவான சசிதரன் தவசீலன் மட்டு சந்திவெளியில் வைத்தும் கொழும்பில் இருந்து வந்த குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இவர்களை சிஜடி யினர் பயங்கரவாத தடைச்சட்டத்தில் வைத்து விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் 2005 தொடக்கம் 2009 வரையிலான காலப்பகுதியில் அம்பாறை திருக்கோவிலை மையமாக வைத்து திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உட்பட 6 மனித படுகொலைகள் தொடர்புட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து ஒரு வருட காலமாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வைத்திருந்த இவரை சிஐடியினர் இவருக்கு எதிராக அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (02) முன் நகர்வு பத்திரம் ஊடாக வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
இதேவேளை கடந்த 2005 தொடக்கம் 2009 வரை காலப்பகுதியில் திருக்கோவில் மற்றும் விநாயகபுரம் பகுதியில் பலர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக காணாமல் போன உறவுகள் இனியபாரதி மீது குற்றம் சாட்டி வருவதுடன் அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது


















